tamilnadu

img

கல்விக்கான நிதியை வழங்க உடனடியாக தலையிடுங்கள்!

கல்விக்கான நிதியை வழங்க  உடனடியாக தலையிடுங்கள்!

கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை யில் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் கருதியும், தமிழ்நாட்டிற்கு ‘சமக்ர சிக்‌ஷா’ திட்டத்தின்கீழ் வரவேண்டிய நிதிகளை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழனன்று (பிப்.20) கடிதம் எழுதியுள்ளார்.  அக்கடிதத்தில், முதலமைச்சர் கூறியிருப்பதாவது:

அமைச்சர் பேச்சால்  மக்கள் கொந்தளிப்பு

“தேசிய கல்விக் கொள்கை - 2020ஐ முழுமையாக அமல்படுத்தி மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கான ‘சமக்ர சிக் ஷா   அபியான்’ திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப் பட முடியாது என்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் சமீபத்தில் தெரிவித் திருப்பது, ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தி யில் பெருத்த கவலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூகச் சூழலில் இருமொழிக் கொள்கையானது, நீண்ட காலமாக ஆழமாக வேரூன்றி உள்ளது. அதைப் பின்பற்றுவதில் தமிழ்நாடு எப்போதும் உறுதியாக உள்ளது. அலுவல் மொழிகள் விதி, 1978-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அலு வல் மொழிச் சட்டம் 1963-ஐ  செயல்படுத்துவதில் இருந்து தமிழ கத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 இருமொழிக் கொள்கையால் தமிழ்நாடு முன்னேற்றம்!

‘நவோதயா வித்யாலயா’ போன்ற ஒன்றிய அரசுப் பள்ளிகள், மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதால் தான் தமிழ்நாட்டில் அது நிறுவப்படவில்லை. இந்த இருமொழிக் கொள்கை மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட முற்போக்குக் கொள்கைகள் காரணமாக கடந்த அரை நூற்றாண்டில் தமிழ்நாடு அடைந்துள்ள மகத்தான முன்னேற்றங்கள் மற்றும் அதற்கு வித்திடும் முன்முயற்சிகளைக் காண முடிகிறது. எங்கள் இருமொழிக் கொள்கையில் எந்த ஒரு மாற்றமும் கொண்டு வர உத்தேசிப்பது தமிழ் நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கு பெரிய அளவில் பயனளிக்காது. இது தவிர, ‘தேசியக் கல்விக் கொள்கை-2020’-இல் குறிப்பிடப் பட்டுள்ள சில விதிகள் குறித்து, 27.8.2024 நாளிட்ட தனது கடிதத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் ஆழ்ந்த கவலைகள் முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 27.9.2004 அன்று தனிப்பட்ட முறையிலும் விரிவான கோரிக்கை மனு பிரதமர் மோடியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதி ஒன்றிய அரசால் வழங்கப்படாமல் உள்ளது.  

ஒன்றிய அரசின் அழுத்தம் கூட்டாட்சிக்கு எதிரானது

ஒன்றிய அரசின் இரண்டு வெவ்வேறு திட்டங்களான சமக்ர சிக்‌ஷா திட்டத்தை யும், தேசிய கல்விக் கொள்கையைப் பிரதிபலிக்கும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தையும் ஒன்றாகப் பொருத்திப் பார்ப்பது என்பது அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதை, தான் மீண்டும்  வலியுறுத்துகிறேன். தற்போது ஒரு மாநி லத்தில், அங்குள்ள காலச் சூழலுக்கேற்ப பின்பற்றப்பட்டு வரும் கொள்கைகளுக்கு எதிராக அந்த மாநிலத்தை கட்டாயப்படுத்து வதற்கு நிதி வழங்கும் விவகாரங்களில் ஒன்றிய அரசு அழுத்தம் தரும் இத்தகைய முயற்சி கூட்டாட்சித் தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும். குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் தங்களது கல்விக் கொள்கைகளை வடிவமைக்கும் மாநிலங்களின் உரிமைகளைப் பெருமளவில் பாதிக்கும்.

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை

தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப்படாததால் ஆசிரியர்கள் சம்பளம், மாணவர்களுக்கான நலத் திட்டங்கள் உள்ளடக்கிய கல்வி முன்னெடுப்பு முயற்சிகள், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் வறிய நிலையில் வாழும் மாணவர்களுக்கான கல்வித் தொகையைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள வாகனப் போக்குவரத்து போன்றவற்றிற்கான முக்கிய  பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர் நலன் கருதி, இந்த விஷயத்தில் இந்தியப் பிரதமர் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  

பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும்

இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு நிதி விடுக்கப்படாமல் உள்ளதால் ஏற்பட்டுள்ள வருந்தத்தக்கச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய கல்விக் கொள்கையோடு ‘சமக்ர சிக்‌ஷா’ திட்டத்தைப் பொருத்திப் பார்க்காமல் 2024-25ஆம் நிதியாண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ. 2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும். இப்பொருண்மையின் தீவிரத்தை உணர்ந்து பிரதமர் மோடி, தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்

” இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.