ஈரோடு, அக்.30- ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள், திட்ட மிட்டு விசைத்தறி தொழிலாளர்களை அத்துக்கூலிகளாக மாற்றியதன் விளைவாக போனஸ் என்பது தற்போது விசைத்தறி தொழிலாளிகளுக்கு கனவாக மாறியுள்ளது. ஈரோடு ஜவுளிச் சந்தை மிகப் பிரபல மானது. இங்கு நடைபெறும் திங்கள் சந்தைக்கு நாடு முழுவதும் இருந்து வியாபாரிகள் வந்து ஜவுளி சார்ந்த பொருட்களை மொத்தமாக எடுத்து செல்வர். இத்தகைய பெருமை மிகு ஈரோடு ஜவுளித்துறையின் வளர்ச்சிக்கு விசைத்தறி தொழிலாளர் களின் ஈடு இனையற்ற உழைப்பே காரணமாகும். இத்தகைய தொழிலாளர்கள் திட்டமிட்டு தற்போது அத்துக்கூலி களாக மாற்றப்பட்டு, உழைப்புச் சுரண்ட லுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பல நவீன தறிகள் வந்தாலும் விசைத்தறி களின் பங்கு தவிர்க்க இயலாதது. ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம் உள்ளிட்ட பகுதி களில் சுமார் 50 ஆயிரம் விசைத்தறி கள் இயங்கி வருகின்றன. இத்தொழி லுக்குத் தேவையான பாவு சைசிங்கி லிருந்து வருகிறது. கோனிலிருந்து தார் சுற்றி ஊடையாகப் பயன்படுத்தப்படு கிறது. சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டில் 6 மாதங்கள் இலவச வேட்டி, சேலை திட்டத்தின் மூலமும், ஒரு மாத காலம் சீருடைக்கான துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எஞ்சிய காலத்தில் ரயான் காடா துணிகளும் உற்பத்தி செய்யப்படும். இவை பல்வேறு வகை யில் மதிப்பு கூட்டப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளுக்கு ஏற்றுமதியாகிறது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 6 தறிகளை ஒரு தொழிலாளி இயக்கி வந்தார். ஒரு மோட்டார் மூலம் சாப்ட் போட்டு பெல்ட் உதவியால் அனைத்து தறிகளும் இயக்கப்பட்டன. 2004 வாக்கில் விசைத்தறிகள் நவீன மடைந்தன. தறிக்கு ஒரு மோட்டார். பாவு, ஊடை அறுந்தால் தானாக தறி நிற்கும் வகையில் நவீனப்படுத்தப் பட்டுள்ளது. தறியோட்டி அறுந்த நூலை இணைத்து மீண்டும் இயக்கு வார். இவ்வாறு தற்சமயம் ஒரு தறி யோட்டி 20 தறிகள் வரை இயக்கி வரு கிறார். இவருக்குக் கூலியாக தறிக்கு ரூ.50 வீதம் வழங்கப்படுகிறது. தற்போது 6 தறிகளை இயக்கிய போதும் ரூ.40 மட்டுமே கூலியாக கிடைக்கிறது. அவர் தனது வாழ்க்கைத் தேவை களைப் பூர்த்தி செய்ய 16 முதல் 20 தறிகளை இயக்கவேண்டும் என நிர்பந்திக்கப்பட்டுள்ளார். 12 மணி நேர வேலை, வார விடுமுறை இல்லை. எந்த சமூக பாதுகாப்பும் இல்லை. புதிய தொழிலாளர்களின் வர வும் இல்லை. வட மாநிலங்களிலிருந்து பல்வேறு வேலைகளுக்கு வந்த தொழி லாளர்கள் விசைத்தறி கூடங்களை எட்டிக்கூடப்பார்ப்பதில்லை. அன்று சங்கம் வைத்து போராடியதன் விளை வாக, ரூ.400 முதல் 500 வரை பெற்று வந்த தொழிலாளி ரூ.8 ஆயிரம் வரை போனஸ் பெற்றார்.
இந்நிலையில், தற்போது சில விசைத்தறி உரிமையாளர்கள் தரகர் களை நாடி, தேவைப்படும் தொழி லாளர்களை விசைத்தறி கூடங் களுக்கு அனுப்புவார். அதற்கு சன்மான மாக தலைக்கு ரூ.30 பெற்றுக் கொள்வார். அவ்வாறு வேலைக்குச் செல்லும் தொழிலாளி மோட்டாரை இயக்கி தறியைச் செலுத்துவார். வேலை நேரம் முடிந்ததும் சம்ப ளத்தைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டு விடுவார். நிரந்தர தொழிலாளியை விட ரூ.10 கூடுதலாக அவருக்கு சம்பளம் வழங்கப்படும். இவ்வாறு தறிக்கு ரூ.50 அல்லது 60 வழங்கப்படும். 20 தறிகளை இயக்கினால் சுமார் ரூ.1000 வரை அன்றைய தினம் சம்பளம் கிடைக்கும். அதேசமயம் மறுநாள் காலை அல்லது இரவு வேலைக்குச் சென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. முடிந்தால் போக லாம். சோம்பலாக இருந்தால் அல்லது வேறு காரணங்களுக்காக விடுமுறை எடுக்கலாம். அன்று வேலைக்குச் செல்ல வேண்டுமா, வேண்டாமா என்பதை அந்த தொழிலாளியே முடிவு எடுக்கிறார். இது அந்த தொழி லாளிக்கும் ஒரு சுதந்திர உணர்வைக் கொடுத்தது போல தோன்றியது. அதே நேரத்தில், அடுத்த நாள் வேலைக்கு ஆல்டிங் அலுவலகம் நடத்தும் புரோக்கரை நம்பியே தொழிலாளி இருக்க வேண்டும். இவ்வாறு ஆண்டு முழுவதும் வேலை செய்தாலும் போனஸ் வழங்கப்படாது. இது தங்களுக்கு மிச்சம் என சில உரிமையாளர்கள் நினைப்ப தாகக் கூறப்படுகிறது. இதன் விளைவு தற்போது சுமார் 60 விழுக்காட்டினர் அத்துக்கூலிகளாக மாற்றப்பட்டுள்ள னர். 8 மணி நேர வேலை கிடையாது. வார விடுமுறை கிடையாது. வருங்கால வைப்பு நிதி, மருத்துவ உதவி உள்ளிட்ட எந்த சமூகப் பாதுகாப்பும் இல்லை. பண்டிகை நாளில் கடைவீதிகள் களை கட்டிக்கொண்டு இருக்கின்றன. ஆனால் ஈரோட்டு சந்தையை உலகிற்கு அறிமுகப்படுத்திய விசைத்தறி தொழிலாளிகளின் குடும்பங்களோ அண்ணாந்து வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கின்றன.