tamilnadu

img

பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீதான விசாரணையை தொடரலாம் உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன. 10 - சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்  ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணையை தொடரலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல் பூட்டர் அறக்கட்டளை என்ற அமைப்பை தொடங்கியதாக  பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சார்பில் இளங்கோவன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். பூட்டர் அறக்கட்டளை குறித்து கேள்வி எழுப்பிய தங்களை சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாக ஜெகநாதன் மீது சில ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். புகார்களின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கில் கைது செய்யப்பட்ட துணைவேந்தர் ஜெகநாதன் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகநாதன் வழக்கு தொடர்ந்திருந்தார். துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார். தடையை நீக்கக் கோரி காவல்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பு வெள்ளியன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணையை தொடரலாம். ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை ஜனவரி 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.