நம்பிக்கை துரோகத்தால் தீவிரமடைந்தது சாம்சங் போராட்டம்
தொழிலாளர்கள் மேலும் 14 பேரை பணியிடை நீக்கம் செய்திருக்கும் சாம்சங் தொழிற்சாலை நிர்வாகத்தின் பழிவாங்கும் போக்கை கண்டித்தும், தொழிலாளர்களை ஆலைக்குள் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிய காவல்துறையின் அடக்கு முறைக்கு எதிராகவும் மீண்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சாம்சங் நிறுவனம் தனது தொடர் பழிவாங்கல் நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி, தொழிலாளர்கள் 16-ஆவது நாளாக உள்ளிப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், சாம்சங் நிறுவனம் வெளியாட்களை வைத்து சட்ட விரோத உற்பத்தியில் ஈடுபட்டு வந்தது. இதுதொடர்பாக தொழிலாளர் நலத் துறைக்கும், தமிழக அரசுக்கும் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், வியாழனன்று (பிப்.20) காலையில் உற்பத்தி பிரிவில் இருந்து சட்டவிரோதக் கும்பலை தொழிலாளர்களே வெளியேற்றினர். இதனிடையே, உற்பத்தி பிரிவில் உள்ளிருப்பில் அமர்ந்த தொழிலாளர்கள் வெளியில் வந்தால் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பதாக தொழிலாளர் துறை உயர் அதிகாரிகள் கூறினர். அத்துடன், நிர்வாகத் தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்பதை காவல்துறை உறுதி செய்யும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதை ஏற்று தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
ஆனால், பலகட்டங்களாக அலைக்கழித்து, மாலை 6 மணிக்கு திடீரென பேச்சுவார்த்தைக்கு வர முடியாது என்றும், 24-ஆம் தேதி பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாகவும் எழுத்துப் பூர்வமாக அறிக்கை வெளியிட்ட சாம்சங் நிர்வாகம், மறுபுறத்தில், 16 நாட்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்த தொழிலாளர்கள், சங்க நிர்வாகிகள் உட்பட மேலும் 14 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக அறிவித்தது. வழக்கமான உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களையும் தொழிற்சாலையை விட்டு வெளியேறுமாறு காவல் துறை மூலம் அச்சுறுத்தியது. அதைத் தொடர்ந்து, காவல்துறைக்கும் தொழிலாளர்களுக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு வருவதாக சொல்லி கொல்லைப்புறத்தில் மேலும் 14 சங்க தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்ததும் தொழிலாளர்களை கைது செய்ய முயற்சித்ததும் கண்டிக்கத்தக்கது என்று கண்டனம் தெரிவித்த சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டக்குழு, தாங்களே ஒப்புக் கொண்டதை செயல்படுத்துவதற்கு மாறாக, தொழிலாளர் துறையும் காவல் துறையும் நம்பிக்கை துரோகம் செய்து எதிர்மறையாக நடந்து கொண்டதைக் கண்டித்து, நான்கு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில், சிஐடியு தலைவர்கள் அ. சவுந்தரராசன், இ.முத்துக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.