tamilnadu

img

உறுதிமிக்க போராளி ஆசிரியர் செ.நடேசன்

திருப்பூர், செப்.18- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான ஆசிரியர் செ.நடேசன், தான் செயல்பட்ட அனைத்து தளங்களிலும் உறுதிமிக்க போராட்டத்தை நடத்திய மகத்தான போராளியாகத் திகழ்ந்தார் என்று தலைவர்கள் புகழாரம் சூட்டினர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச்செயலாளரும், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட துணைத்தலைவருமான செ.நடேசன் செப்டம்பர் 17-ஆம் தேதி சனிக்கிழமையன்று மாலை காலமானார். அவரது உடல் ஊத்துக்குளியில் உள்ள அவரது பாரதி இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினருமான அவரது உடலுக்கு செங்கொடி போர்த்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆசிரியர் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் கலை இலக்கிய எழுத்தாளர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பெருந்திரளாக வந்து அவரது உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை இறுதி மரியாதை செலுத்தினர்.  அவரது இறுதி ஊர்வலத்துக்கு முன்பாக காலை 9.30 மணிக்கு ஊத்துக்குளியில் அவரது பாரதி இல்லத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ச.மயில், மாநிலத் தலைவர் மணிமேகலை, இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக்குழு உறுப்பினர் ஜான் கிறிஸ்துராஜ், மாநில துணைப்பொதுச்செயலாளர் கணேசன், முன்னாள் மாநிலத் தலைவர் கண்ணன், முன்னாள் மாநிலச் செயலாளர் பர்வதராஜன், முன்னாள் மாநிலப் பொருளாளர் முரளிதரன், முன்னாள் மாநிலத் தலைவர் மோசஸ், மாநில துணைத்தலைவர் ரூபன், முன்னாள் ஈரோடு மாவட்டச் செயலாளர்கள் சாமிநாதன், கந்தசாமி, திருப்பூர் மாவட்டத் தலைவர் ராஜ்குமார், மாவட்டச் செயலாளர் பிரபு, மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜா, தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் கனகராஜ், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலாளர் தாஸ், ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்க செயலாளர் நா.சண்முகம், மாநில தொழில்கல்வி ஆசிரியர் சங்க செயலாளர் நேரு, டிஐஏஎஸ் சங்கப் பொறுப்பாளர் பிரகாசம், டிஎன்ஜிடிஏ மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், திமுக ஊத்துக்குளி தெற்கு ஒன்றியச் செயலாளர் பி.பி.ஈஸ்வரமூர்த்தி, மதிமுக ஒன்றியச் செயலாளர் வி.சுந்தர்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் தாலுகாச் செயலாளர் வி.ஏ.சரவணன், தமுஎகச மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர்.

தமிழகத்தில் ஆசிரியர்களின் உரிமைக்காக முன்னணியில் நின்று போராடி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவராக, மாநில பொதுச்செயலாளராக நான்கு முறை செயல்பட்டு, இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராகவும் பணியாற்றியவர். ஆசிரியர்களின் நலன்களுக்காக உறுதிமிக்க போராளியாக செயல்பட்டதுடன், மார்க்சியத்தின் மீது மாறாத பற்று கொண்டவர். நோய்வாய்பட்டு சிகிச்சைக்குச் செல்லும் வரை இளைஞரைப் போல் செயல்பட்டவர். இந்துத்துவ வகுப்புவாத அபாயத்துக்கு எதிராக விடாது குரல் கொடுத்தவர், இந்துத்துவ மதவெறியை அம்பலப்படுத்தும் பல நூல்கள், கட்டுரைகளை தமிழுக்கு மொழிபெயர்த்தவர். அனைவரிடமும் இனிமையாக பழகும் பண்பாளர், கட்டுப்பாடு மிக்க பொதுவுடைமை போராளியாகச் செயல்பட்டவர் தோழர் நடேசன் என்று பலரும் புகழாரம் சூட்டினர். இரங்கல் கூட்டத்தின் நிறைவில், அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.  இதைத் தொடர்ந்து திருப்பூர் தெற்கு மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அங்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செய்தனர்.

;