சென்னை,டிச.8- கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் சபரிமலை பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்டிரல், எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன. தாம்பரத்தில் இருந்தும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இருமார்க்கமும் விடப்பட்டுள்ள இந்த சிறப்பு ரயில்களில் பெரும்பாலான இடங்கள் நிரம்பிவிட்டன. தென் மாவட்ட ங்களுக்கு செல்லக்கூடிய வழக்கமான ரயில்களில் 2 ஆம் வகுப்பு படுக்கை வசதிகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. ஏ.சி. படுக்கை வசதி கொண்ட இடங்கள் ஒரு சில மட்டுமே காலியாக இருக்கின்றன. பொதிகை, கொல்லம், சிலம்பு ரயில்களில் முன்பதிவு செய்ய முடியாத அளவு கூட்டம் உள்ளது. இந்த மாதம் இறுதி முதல் பொங்கல் முடிந்து திரும்பும் வரை ரயில்களில் பயணம் செய்வ தற்கு போதிய இட வசதி இல்லை. அதனால் கூடுதல் சிறப்பு ரயி ல்களை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடியவர்கள் சென்னையில் அதிகம் பேர் வசதிப்பதால் பண்டிகை காலத்தை கருதி மேலும் சில சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவிக்க வேண்டும். எழும்பூர், தாம்பரம் நிலையங்களில் இருந்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு செல்லும் வகையில் 23 ஆம் தேதி, புத்தாண்டுக்கு 31 ஆம் தேதி, பொங்கல் பண்டிகைக்கு, ஜனவரி 12, 13 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். பொங்கல் முடிந்து சென்னை திரும்ப வசதியாக ஜனவரி 17, 18 ஆம் தேதிகளில் நாகர்கோவில், திருநெல்வேலியிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று தூத்துக்குடி ரயில் பயணிகள் சங்கமும் வலியுறுத்தியுள்ளது.