மதுரை:
ரேசன் கடைகளில் அரிசி அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில், டிசம்பர் 17- ஆம் தேதி முதல் மதுரை மாவட்டத்தில் பயோமெட்ரிக் இயந்திரத்தில் கை ரேகை பதிவு செய்து பொருட்களை வாங்கும் நடைமுறை ரேசன் கடைகளில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது .பெரும்பாலான கடைகளில் பயோ மெட்ரிக் சர்வர் சரிவர இயங்கவில்லை. இதனால் மக்களுக்கு ரேசன் பொருட்கள் சரிவர விநியோகம் செய்ய முடியவில்லை. அதனால் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். பயோ மெட்ரிக் நடைமுறை படுத்தப்படாதபோது நாள் ஒன்றுக்கு 130 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது பயோ மெட்ரிக்முறை நடைமுறைக்கு வந்ததால் நாளொன்றுக்கு 40 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்வதில் சிரமம் உள்ளது. இதனால் பொருட்கள் வாங்க வரும் மக்களுக்கும் , கடை ஊழியர்களுக்குமிடையே தேவையற்ற வாக்கு வாதம் ஏற்பட்டு அது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாறும் வாய்ப்புள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பைப் பெற நாளொன்றுக்கு 200 பேருக்கு டோக்கன்வழங்கப்பட உள்ளது. இந்தச் சூழலில் பயோ மெட்ரிக் பாய்ண்ட் ஆப் சேல்ல் இயந்திரங்களின் ‘சர்வர்’ இயங்கவில்லையெனில் மக்களும், ரேசன் கடை ஊழியர்களும், சிரமத்திற்குள்ளாவர். நல்ல நோக்கத்தில் பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதில் உள்ள நடைமுறை சிக்கல்களால் மக்கள் அதிருப்தியடைவர். சர்வரை பலப்படுத்தி , பாய்ண்ட் ஆப் சேல்ஸ் மற்றும் பயோ மெட்ரிக் இயந்திரங்கள் நல்ல முறையில் செயல்படும் வரை, பழைய முறையில் பாய்ண்ட் ஆப் சேல்ஸ் முறை தொடரவேண்டும்.மேலும் கொரோனா காலத்தில் இலவச முகக் கவசம் வழங்கும் பணியில் ஈடுபட்ட ரேசன்கடை ஊழியர்களுக்கு, குடும்ப அட்டை ஒன்றுக்கு0.50 பைசா வீதம் வழங்க வேண்டும்.
மிகவும் சொற்பத் தொகையை அறிவித்து விட்டு, அதையும் முறையாக அனைத்து ஊழியர்களுக்கும் வழங்காத நிலை கவலையளிக்கிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு உள்ளிட்ட பொருட்களை வைப்பதற்குபோதிய இடவசதி இல்லாமல் பெரும்பாலான கடைகள் உள்ளன . அக்கடைகளுக்கு உரிய இடவசதி செய்துதர வேண்டும் என தமிழக கூட்டுறவு சங்க ஊழியர் சங்கம் (சிஐடியு) தமிழக அரசையும், கூட்டுறவுத்துறையையும் வலியுறுத்தியுள்ளது.இதற்கிடையில் மதுரை நெல்பேட்டையில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்துவைத்தார். மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் “நியாய விலைக்கடையில் சர்வர் பிரச்சனை காரணமாக கைரேகை வைக்க முடியவில்லை, கைரேகை இல்லாமல் பொங்கல் பரிசு பணம் கொடுக்க ஏற்பாடு நடைபெறுகிறது” என்றார்.