நீலகிரி,டிச.6- மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த இந்த மலை ரயில் பாதை கல்லார் முதல் குன்னூர் வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதை வழியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழை காரணமாக பாறைகள் உருண்டு விழுந்ததால் ரெயில் பாதை சேதமானது. இதனால் ரயில் போக்குவரத்து நிறுத்தப் பட்டது. பின்னர் சீரமைப்பு பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அவ்வப்போது பெய்த மழை காரணமாக ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ரயில் போக்குவரத்தை துவங்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக கல்லார் முதல் ஹல்குரோவ் ரயில் நிலையம் வரை 3 இடங்களில் மண்சரிவு மற்றும் பாறை விழுந்து உள்ளதால் ரயில் பாதை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. தற்போது மலை ரயில் பாதை அமைந் துள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து மண்சரிவு ஏற்படும் நிலை உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ரயில் போக்குவரத்தை வருகிற 14-ஆம் தேதி வரை ரத்து செய்து சேலம் கோட்ட ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து மலை ரயில் பாதை சீரமைப்பு பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.