tamilnadu

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை: அதிகாரி

சென்னை,டிச.9- மின்வாரியம் கடனில் இருந்து மீண்டு வருவதற்கு மின் கட்டணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் மாற்றி அமைக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியிருந்தாலும் இப்போதைக்கும் உயர்த்தும் எண்ணம் இல்லை என்று தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. திமுக ஆட்சி அமைந்த பிறகு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்டு மாதம் மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் 5 பொதுத்துறை நிறுவனங்களின் நிதி நிலை மிக மோசமாக  இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதிகபட்ச மாக தமிழ்நாடு  மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ரூ.1.34 லட்சம் கோடியும், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்திற்கு  ரூ.25,568 கோடியும் ஆக மொத்தம் ரூ.1.60 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். தமிழகத்தில் 3.10 கோடிக்கும் கூடுதலான மின் பயனீட்டா ளர்கள் உள்ளனர். இதில் 90 விழுக்காடு பயனீட்டாளர்கள் பகுதியாகவோ, முழுமையாகவோ இலவச மின்சாரத்தை பெற்று வருகின்றனர். அதாவது 100 யூனிட் வரை அனைத்து வீடுகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. விவசாய பயன்பாடுகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

இவற்றை ஈடு செய்து மின்சார வாரியத்தை நட்டத்தில் இருந்து மீட்டு கொண்டுவர ஒவ்வொரு அரசும் முயற்சி எடுத்து வந்தாலும் தொடர்ந்து மின்  வாரியம் நட்டத்தை சந்தித்து வருகிறது. இலவச மின் திட்டத்தை பயன்படுத்த குறிப்பிட்ட வரையறையை உருவாக்க  வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின்வாரியம் கடனில் இருந்து மீண்டு  வருவதற்கு மின் கட்டணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் மாற்றி அமைக்குமாறு மத்திய அரசு அறிவு றுத்தி உள்ளது. இதன்படி 20 சதவீதம் வரை கட்ட ணத்தை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக மின் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது தொடர்பான முன்மொழிவுகள் ஏதும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இது குறித்து மின் வாரிய உயர் அதிகாரியிடம் கேட்டதற்கு  தற்போது வரை மின் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். கடந்த ஆட்சியி லும் மின் கட்டணத்தை உயர்த்த பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த முறையை போன்று தமிழக அரசு தான் கொள்கை முடிவு எடுத்து  அறிவிக்க வேண்டும். ஆனால் இப்போதைக்கு கட்டணத்தை மாற்றி அமைக்க வாய்ப்பில்லை என்று அதிகாரி தெரி வித்தார்.

;