tamilnadu

img

ஆட்டோமொபைல் துறையின் தாய்!

அறிவுக்கடல்

 இந்தியச் சாலைகளில் கார்கள் அதிகரித்து விட்டன... கார் ஓட்டும் பெண்களும்தான்! ஆனால்,  கார் ஓட்டிச் செல்லும் பெண்களை அதிசயமாகப் பார்க்காவிட்டாலும், ஆச்சரியமாகப் பார்க்கும் பார்வை இன்றும் மாறவில்லை...! இருசக்கர வாகனங்களை ஓட்டும் பெண்களையே வித்தியாசமாகப் பார்ப்பது இன்னும் முழுமையாக மாறிவிடாத ஒரு சமூகம், காரோட்டும் பெண்களை வியப்புடன் பார்ப்பதில் வியப்பில்லையே...! ஏன் வியப்பாகப் பார்க்க வேண்டும்? ‘ஹவ்ஸ்ஒஃய்ப்’ என்ற இடம் மட்டுமே பெண்களுக்கு அளித்த சமூகம் இது. பணியாற்றும் பெண்களானாலும், ‘ஹவ்ஸ்ஒய்ஃப் பதவிக்கான’ கடமைகளை நிறைவேற்றிவிட்டே பணிக்கு வரவேண்டும் என்பது எழுதப்படாத விதி. வீட்டுப் பணிகளில் உதவும் கணவர்கள் ஆங்காங்கே விதிவிலக்காக இருந்தாலும், சமைப்பது உள்ளிட்ட வீட்டுப் பராமரிப்புப் பணிகள், பெண்களுக்கே ‘பட்டா’ போடப்பட்டவை! வாகனம் ஓட்டுதல் போன்ற பணிகள், ‘ஆண்மை’ யான வையாக, நம் மனதில் பதிந்திருப்பது, நம்மையும் அறியாமல் ‘மனு’ ஆட்சி செய்வதன் அடையாளம்! அதனால்தான் பெண்கள் காரோட்டுவது வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றுகிறது!

ஆனால், முதன்முதலில் நெடுந்தொலைவுக்குக் கார்  ஓட்டி, ஆட்டோமொபைல் என்பது மக்களைச் சென்ற டைந்த வரலாற்றைத் தொடங்கி வைத்தவர் ஒரு பெண்தான்! ஆம்! முதன்முதலில் நடைமுறைப் பயன்பாட்டிற்கு  வந்த காரை உருவாக்கியவரான கார்ல்  பென்ஸின் மனைவி பெர்த்தா பென்ஸ்-தான் அந்தப் பெண்மணி! உண்மையில் காருக்குக் காப்புரிமை பெற்றுவிட்டாலும், விற்க முடியும் என்ற நம்பிக்கையை பென்ஸ் இழந்திருந்த நிலையில், அதனைப் புரட்டிப் போட்டது, கார்லுக்குத் தெரியாமல் பெர்த்தா மேற்கொண்ட இந்த 214 கி.மீ. தொலைவு கார்ப் பயணம்தான்! 1885இல் காருக்கான காப்புரிமையை கார்ல் பெற்றுவிட்டார். ஆனால், குதிரை இல்லாமல் பயணமா என்ற  மக்களின் சந்தேகத்தை வெல்ல முடியவில்லை. ஆம்! குதிரையில்லாமல் பயணிக்க முடியாது என்றுதான் அன்றைய உலகம் நம்பியது! அதிலும் கார் என்பதை நகருக்குள் ஓட்டிப் பார்க்க விரும்பிய செல்வந்தர்கள்கூட, நெடுந்தொலைவுப் பயணத்தை ‘ஓர் எந்திரத்தை’ நம்பிச் செய்யத் தயாராக இல்லை என்பதால் விற்பனைக்கு உரிய பொருளாகக் கார் மாறவேயில்லை!

1888 ஆகஸ்ட் 5 ஞாயிறு அதிகாலையில் கார்ல் விழிப்ப தற்கு முன்பே மூத்த மகன்களான 15 வயது யூஜின், 13 வயது ரிச்சர்ட் ஆகியோரின் உதவியுடன், கார்ல் உருவாக்கி வைத்திருந்த கார்களில் ஒன்றை தெருவுக்கு இழுத்து வந்தார் பெர்த்தா. வீட்டிலேயே ஸ்டார்ட் செய்தால் கார்ல் விழித்து விடுவார் என்பதால் அப்படிச் செய்த பெர்த்தா, இரு மகன்களுடன் தாய் வீட்டிற்குச் செல்வதாகவும் கவலைப்பட வேண்டாம் என்றும் ஒரு குறிப்பை கார்லுக்கு எழுதி வைத்துவிட்டுச் சென்றார். ஜெர்மனியில் அவர்கள் வீடு இருந்த மான்ஹைம் என்ற இடத்திலிருந்து, தாய் வீடு இருந்த ஃபோர்ன்ஸைம் என்ற இடத்திற்கு 107 கி.மீ. பயணிக்க வேண்டும்! எவ்வளவு எரிபொருளுக்கு எவ்வளவு தொலைவு போகும் என்ற மைலேஜ் கணக்கெல்லாம் பார்க்க எந்த வழிமுறை யும் இல்லை... வழியில் எரிபொருள் நிரப்ப வசதியும் கிடையாது... முதன்முறையாக, சரியாகச் சொன்னால், ‘சோதனை ஓட்டமாக’ நெடுந்தொலைவு பயணிக்கப் போகும் வாகனம் என்பதால், பழுதுகள் நேரலாம்... எல்லாவற்றை யும் எதிர்பார்த்த பெர்த்தா, மருந்துக் கடைகள்  இருக்கும் ஊர்களின் வழியாகவே செல்லத் தேர்ந்தெடுத்த வழிதான் 107 கி.மீ.! அது சரி, எதற்காக மருந்துக் கடைகள்? ஆய்வுக் கூடங்களில் கரைப்பானாகவும், சுத்தம் செய்யும் பொருளாகவும் பயன்படுத்தப்பட்ட, லிக்ரோய்ன் என்ற திரவம் மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதை எரிபொரு ளாகப் பயன்படுத்தித்தான் அந்தக் கார் இயங்கியது! அவ்வாறு, வைஸ்லாச் என்ற இடத்தில் அவருக்கு லிக்ரோ ய்ன் திரவத்தை வழங்கிய மருந்துக் கடை(மெடிக்கல் ஷாப்) உலகின் முதல் எரிபொருள் நிரப்புமிடம் ஆகியது!

ஏறத்தாழ 13 மணி நேரம் நீடித்த அந்தப் பய ணத்தின்போது, பெர்த்தா எதிர்பார்த்தபடியே பழுதுகளும் ஏற்பட்டன. எரிபொருள் குழாய், ஸ்பார்க் பிளக் போன்ற வற்றின் பழுதுகளை, உடையின் பாகங்களையும், கொண்டை ஊசி (ஹேட் பின்) உள்ளிட்டவற்றையும் கொண்டு  தானே சரி செய்தார் பெர்த்தா. மரத்தாலான பிரேக் பழுதானபோது, செருப்புத் தைப்பவரைக்கொண்டு, தோலைப் பொருத்தச் செய்தார் பெர்த்தா. இதுவே பின்னா ளைய, மாற்றும் பட்டைகொண்ட ப்ரேக்குகளுக்கு அடிப்படையாக அமைந்தது. செயினின் பழுதை சரி செய்துகொடுத்த கொல்லர் பட்டறை, உலகின் முதல் கார் பழுதுநீக்குமிடம் ஆகியது! என்ஜின் சூடான போதெல்லாம், கிணறு, ஓடை மட்டுமின்றி கிடைத்த அழுக்குத் தண்ணீரையும் ஊற்றிக் குளிர்வித்து பய ணித்த பெர்த்தா, தானும், பிள்ளைகளும் பதுகாப் பாக தாய்வீடு சென்றடைந்து விட்டதை தந்தி மூலம் கார்லுக்குத் தெரிவித்தார். மீண்டும் 107 கி.மீ. பயணித்து ஊர் திரும்பியபின் பெர்த்தா அறிவுறுத்தியபடி, கார்ல் பொருத்திய மூன்றாவது கியர், காரின் செயல்பாட்டில் முக்கிய முன்னேற்றமாக அமைந்தது. இந்தப் பயணத்தின் போது, வழியெங்கும் பொது மக்கள் ‘வினோத வாக னத்தைப் பார்த்து’ அலறிய டித்து ஓடினர். அருகில் வந்து  பார்த்தனர். செய்தியாளர் கள் (அன்றைக்கே!) கேள்வி களால் துளைத்து, ஏராள மாக எழுதினர். அவற்றைப்  படித்தவர்கள், கார்களைப் பார்க்க பென்ஸின் ‘கேரே’ ஜூக்குப் படையெடுத்தனர். விற்பனையும் தொடங்கியது!  ‘ஓவர்நைட்ல ஒபாமா’ என்று  சொன்ன மாதிரி, ஒரே  பயணத்தில், காருக்கான  சந்தையை உருவாக்கி விட்டார் பெர்த்தா!

காரை பெர்த்தா உரு வாக்க வில்லையென்றாலும், அதை நெடுந்தொலைவு இயக்கிப் பார்த்து, அவர் கொண்டுவந்த முன்னேற்றங்கள், காரை பயன்பாட்டுச் சாத்தியம் ஆக்குவதில் முக்கியப் பங்கு வகித்தன என்பதை, கார்ல் மட்டும் சொல்லவில்லை, மெர்சிடஸ்-பென்ஸ் நிறுவனமும் நினைவுகூர்கிறது! முன்னேற்றங்கள் மட்டும் பெர்த்தாவுடையதல்ல! பென்ஸ் நிறுவனத்திற்கான மூலதனமே, பெர்த்தாவுடையதுதான்! ஆம்! நம் ஊரின் வரதட்சணையைப் போன்ற நடைமுறை அப்போதைய ஐரோப்பிய நாடுகளில் இருந்தது. வசதியான குடும்பத்தில் 1849 மே 3இல் பிறந்த கேசிலி பெர்த்தா ரிங்கர் என்ற இயற்பெயர்கொண்ட பெர்த்தா, தன் வரதட்சணைக்காக வைத்திருந்த நிதியை, திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, தொழிலுக்கு நிதியின்றித் தடுமாறிய எந்திரவியல் பொறியாளரான கார்ல் பென்ஸ் தொழிற்சாலை தொடங்குவதற்கு அளித்து, அத்தொழிற்சாலையின் முதலீட்டாளரானார். திருமணம் ஆகாத பெண்கள் முதலீடு செய்வதற்கு அனுமதி அளித்த அன்றைய ஜெர்மென் சட்டங்கள், திருமணமான பெண்ணிற்கு அந்த உரிமை யை அளிக்காததால், கார்லை யே திருமணம் செய்து கொண்டாலும், திருமணத் திற்குப்பின் முதலீட்டாளர் என்ற உரிமையை பெர்த்தா இழந்தார். ஆனாலும், ஆர்வத்தை இழக்கவில்லை. கடுமையான நிதி நெருக்கடி யில் குடும்பம் தவித்தாலும், சிக்கனமாகக் குடும்பம் நடத்தி, சேமிக்க முடிந்த தொகையை எல்லாம் வழங்கி, கணவருக்குப் பொருளாதார உதவிகளைச் செய்தார். ஆனா லும், உருவாக்கிய கார்களை விற்க முடியாததால், தொழில் வெற்றியடையவில்லை. கார்களின் திறனை உலகுக்கு உணர்த்தி, கார்லின் தொழிலை வெற்றியடையச் செய்யும் பணியைத்தான், இந்தப் பயணத்தின்மூலம் நிறைவேற்றினார், பெர்த்தா!

தொடர்வண்டியின் பொறி (என்ஜின்) இயங்கும் விதத்தை, சிறுமி பெர்த்தாவுக்கு அவர் தந்தை விளக்கியபோதே, அவருக்கு வாகனங்கள் மீதான ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. செல்வச் செழிப்புடன் பிறந்தா லும், பெண் குழந்தைக்கு உயர் கல்விக்கு அனுமதியில்லை. உண்மையில், பெர்த்தா பிறந்த போது, அவர் தந்தை, தன் குடும்பக் குறிப்பில், ‘துரதிர்ஷ்டவச மாக, மீண்டும் ஒரு பெண் குழந் தைதான்’ என்று எழுதுமள வுக்குத்தான், அன்றைய ஜெர்மன் பெண்களின் நிலை  இருந்தது. ஆனால், தந்தை யின் அந்த 5 சொற்கள் கொண்ட  குறிப்புதான், தங்கள் தொழிலை வெற்றியாக்கியே தீரும் மன உறுதியை பெர்த்தா வுக்கு அளித்தது என்று மெர்சிடஸ்-பென்ஸ் நிறுவனம், தங்கள் வலைத் தளத்தில், பெருமையோடு குறிப்பிடுகிறது! மூலதனம் அளித்து, காரை ஓட்டிப் பரிசீலித்து,கியர், ப்ரேக்  உள்ளிட்ட முக்கிய முன்னேற்றங்களையும் செய்த பெர்த்தா,  உயர்கல்வி மறுக்கப்பட்டிருந்தாலும், அவரது 95ஆவது பிறந்த நாளன்று, ஜெர்மனியின் கார்ஸ்ரூ தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கவுரவ செனெட்டர் ஆக்கப்பட்டார். அடுத்த இரண்டு நாட்களில் அவர் மறைந்தாலும், மோட்டார் வாகன சாதனையாளர்களுக்கான ‘ஆட்டோமொபைல் ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் இடம்பெற்ற முதல் கணவன்-மனைவி என்ற பெருமை நிலைத்திருக்கிறது! அவர் பயணித்த பாதை முழுவதும், பெர்த்தா பென்ஸ்  நினைவுப் பாதை என்று பெயரிடப்பட்டு, மனிதகுலத்திற்கான தொழில்துறை நினைவுச் சின்னமாகப் பராமரிக்கப்படுகிறது!
 

;