tamilnadu

img

விளையாட்டு...

மினி உலகக்கோப்பை கிரிக்கெட் - 2025 இன்றுடன் லீக் ஆட்டம் நிறைவு

ரிக்கெட் உலகில் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 9ஆவது சீசன் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (இந்திய அணியின் ஆட்டங்கள் மட்டும்) நடைபெற்று வருகிறது.  தற்போது இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறும் 12ஆவது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து (குரூப் ஏ) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்கும் வெறும் சம்பிரதாய ஆட்டம் தான். இரு அணிகளும் ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டதால், இந்த ஆட்டத்தின் வெற்றி, தோல்வி இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு எந்த  பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் யார் முதலிட அந்தஸ்துடன் முதலிடத்திற்கு  அரையிறுதிக்கு முன்னேறுவது என்ற எண்ணத்தில் இரு அணிகளும் தீவிர பயிற்சியுடன் களமிறங்குகின்றன. இதனால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும்  என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியா - நியூஸிலாந்து
இடம் : துபாய் சர்வதேச மைதானம்
நேரம் : மதியம் 2:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

6.27 மீட்டர்

போல் வால்ட்டில் ஸ்வீடன் வீரர் டுப்லாண்டிஸ் மீண்டும் உலக சாதனை

பிரான்ஸ் நாட்டின் கிளெர்மன்ட் பெர்ராண்ட் நகரில் ஆல்-ஸ்டார் தடகள தொடர்  நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் போல் வால்ட் பிரிவில் (கம்பு மூலம் உயரம் தாண்டுதல்) ஸ்வீடன் நாட்டின் அர்மன்ட் டுப்லாண்டிஸ் (25) மீண்டும் உலக சாதனை படைத்துள்ளார்.  பெர்ராண்ட் நகர மைதானத்தில் நடைபெற்ற போல் வால்ட் பிரிவின் முதல் சுற்றிலேயே (இறுதி சுற்றின் முதல் முயற்சி) டுப்லாண்டிஸ் 6.27 மீ அளவிற்கு உயரம் தாண்டி 11ஆவது முறையாக தனது உலக சாதனையை தானே முறியடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் போலந்து நாட்டின் சிலேசியாவில் நடைபெற்ற தடகள தொடரில் 6.26 மீ உயரம் தாண்டியதே உலக சாதனையாக இருந்தது. இதுவும் டுப்லாண்டிஸின் சாதனை என்ற நிலையில், தன்னுடைய சாதனையை மீண்டும் தானே முறியடித்துள்ளார்.  பிரான்ஸ் நாட்டின் ரெனாட் லாவில்லெனி 2014ஆம் ஆண்டு 6.16 மீ உயரம் தாண்டியதே உலக சாதனையாக 6 வருடத்திற்கு மேல் இருந்தது. 2020ஆம் ஆண்டு இந்த சாதனையை டுப்லாண்டிஸ் முறியடித்தார். அதன்பின் 5 ஆண்டுகளாக ஒரு சென்டிமீட்டர் அளவில் 11 முறை தனது உலக சாதனையை தானே முறியடித்தார். இதில் சுவாரஸ்யமான விஷயம்  கடந்த 11 மாதங்களில் 4 முறை தனது உலக சாதனையை தானே முறையடித்து அர்மன்ட் டுப்லாண்டிஸ் புதிய வரலாறு படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.