மதுரை:
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தியதைத் தொடர்ந்து ,மதுரை-தேனி ரயில் பாதை பணி நான்கு மாதத்தில் நிறைவுபெறும். அதைத் தொடர்ந்து ரயில்கள் இயக்கநடவடிக்கை எடுக்கப்படும்.மத்திய அரசின் ஒப்புதலோடு சாதாரண பயணிகள் ரயில் இயக்கப்படும் என்றும் மதுரை-புனலூர் ரயில் கோவில்பட்டியில் நிற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் தெரிவித்துள்ளார்.
மதுரை கோட்டத்தில் பயணிகள் ரயில்களைஇயக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ரயில்வே கோட்ட மேலாளர் வீ.ரா.லெனினை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செவ்வாயன்று சந்தித்து விவாதித்தார். கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனா தொற்று நோய் பரவலால் மத்திய அரசு ஊரடங்கு அமல்படுத்தியதன் காரணமாக ரயில்வே நிர்வாகம் மார்ச் மாதம் 24.03.2020 முதல் அனைத்து பயணிகள் ரயில் இயக்கத்தையும் ரத்து செய்தது. தற்போது தொற்று நோய் பரவல் படிப்படியாக குறைந்துள்ளதால் மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தியுள்ளது. தமிழக அரசு அனுமதி வழங்கியும் ரயில்வே நிர்வாகம் பயணிகள் ரயில்களை முழுமையாக இயக்க முன்வரவில்லை.
மதுரை-இராமேஸ்வரம் ரயிலை இயக்கிடுக!
மதுரையிலிருந்து இராமேஸ்வரத்திற்கு பயணிகள் ரயில் இயக்கவில்லை. கொரோனாவிற்கு முன்பு காலை 6.50, மதியம் 12.40,மாலை 6.10 மணி என மூன்று சாதாரணகட்டண பயணிகள் ரயிலும் திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் கன்னியாகுமரியில் இருந்து இராமேஸ்வரம் வரை செல்லும் விரைவுக் கட்டண ரயில்களும் இயக்கப்பட்டன. மறு மார்க்கத்தில் இராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு மேற்கூறிய மூன்று நாட்கள் ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது எந்தப் பயணிகள் ரயில்களும் இயக்கப்படவில்லை. இது ரயில் பயணிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. மதுரை-இராமேஸ்வரம் மார்க்கத்தில் மீண்டும் ரயில்களை இயக்க வேண்டும். மதுரையிலிருந்து விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு காலை 7.15, பகல் 11.15, மாலை 5.15 மணி என தினமும் மூன்றுசாதாரணக் கட்டண ரயில்களும் பொதிகை விரைவு கட்டண பயணிகள் இரயிலும் இயக்கப்பட்டது. தற்போது பொதிகை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மதுரை-செங்கோட்டை ரயிலில் பயணித்த மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாதாரண கட்டண ரயில்களைமீண்டும் இயக்க வேண்டும். மதுரை-திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம்-பழனி-உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி வழியாக கோயமுத்தூருக்கு காலை 7.30 மணிக்குசாதாரண கட்டண பயணிகள் ரயில் இயங்கியது. இந்த வழித்தட பயணிகள் ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும். 200 கிலோமீட்டருக்கு அதிகமாக விரைவுக் கட்டண பயணிகள் ரயில் இயக்கப்படும் என்ற ரயில்வே வாரிய உத்தரவால் சாதாரணக் கட்டணங்கள் அனைத்தும் விரைவு கட்டணங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் சாதாரணக் கட்டணம் கொண்டுவர வேண்டும்.
ஊதியத்தில் கால் பங்கு பயணச் செலவு
மதுரை நகர் பகுதியில் உள்ளவர்கள் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் சென்று பேருந்தில் பயணம் செய்யவேண்டியுள்ளது. மதுரையிலுள்ள தொழில் நிறுவனங்கள் பெரிய,சிறிய நிறுவனங்களில் பணிபுரிந்து முன்பு ரயிலில் பயணித்து வந்த தொழிலாளர்கள் சிறு வியாபாரிகள், மாணவர்கள் சீசன் டிக்கெட் எடுத்து பயணம் செய்தனர். தற்போது பயணிகள் வண்டிகள் இயக்கப்படாததால் அனைவரும் அதிகக் கட்டணம் உள்ள பேருந்துகளில்பயணம் செய்து தங்களது ஊதியத்தில் கால்பங்கை பயணத்திற்காக செலவு செய்யும் அவலநிலை உள்ளது. எனவே அனைத்து ரயில் மார்க்கங்களிலும் சாதாரண பயணிகள் கட்டண ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.மதுரை-புனலூர் வழித்தடத்தில் இயங்கும் சாதாரணக் கட்டண ரயில் விரைவுக் கட்டண ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. அதேசமயம் சாத்தூர், கோவில்பட்டி போன்ற முக்கிய நிறுத்தங்கள் எடுக்கப்பட்டுவிட்டன. இதனால் சாத்தூர், கோவில்பட்டியில் இருந்து கேரள மாநிலத்திற்கு பயணம் செய்த தொழிலாளர் கள், வியாபாரிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மீண்டும் சாத்தூர், கோவில்பட்டியில் நிறுத்தம் வேண்டும். மேலும் சாதாரண கட்டணமாக மாற்ற வேண்டும்.
ரயிலில் பொதுப்பெட்டிகள் இல்லை
தற்போது இயக்கப்படும் விரைவு கட்டணரயில்களில் குறிப்பாக விழாக்கால சிறப்பு ரயில்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக தூத்துக்குடி-மைசூர்விரைவு கட்டண ரயில் என விழாக்கால ரயிலாக பெயர் மாற்றப்பட்டு தட்கல் கட்டணம்வசூல் செய்யப்படுகிறது. பொதுப்பெட்டிகள் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள் ளது. முன்பதிவு செய்துதான் பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் அமல்படுத்தப் பட்டுள்ளது. இதை மாற்றவேண்டும். கொரோனாவிற்கு முன்பு மகளிர் மட்டும் பயணிக்க கார்டு பெட்டிக்கு அருகில் உள்ள பயணிகள் பெட்டி பயன்படுத்தப்பட்டது. இப்போது மகளிர் மட்டும் பயணம் செய்யும் பெட்டிகள் பொதுப்பெட்டியாக மாற்றப்பட்டுள்ளது. இதை மாற்றி ஏற்கனவே இருந்தவாறு மகளிர் மட்டும் பயணம் செய்யும் பெட்டியை மீண்டும் இணைக்க வேண்டும்.
கொரோனாவிற்கு முன்பு மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ரயில் பயணச் சலுகைக் கட்டணம் தற்போது ரத்துசெய்யப்பட்டுள்ளது. மீண்டும் மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.மனுவைப் பெற்றுக்கொண்ட ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் கூறுகையில், புனலூர் விரைவு ரயில் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏறுவதற்கான ஏற்பாடு செய்யப்படும். மதுரை- போடி ரயில் பாதை பணிகள் நான்கு மாதங்களில் முடிவுபெறும். அதைத் தொடர்ந்து ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மார்க்கத்தில் இருந்து கிளம்பும் பிற ரயில்கள் இயக்குவது தொடர்பாக மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.