“இரண்டு, நான்கு, ஆறடி உயர கட்டைகளை காலில் கட்டிக் கொண்டு ஆடும் போதும், நடக்கும் போதும் நாங்கள் படும் வேதனை சொல்லி மாளாது என்றாலும் மக்கள் ரசிக்கிறார்கள், மகிழ்கிறார் கள். ஆனால் எங்களது வாழ்க்கை மகிழ்ச்சி யாக இல்லை”. இது ஒரு கிராமிய கலைஞனின் ஆழ்மன தின் வலிமை வெளிபடுத்தும் வார்த்தைகள். அன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8 மணி. சென்னையின் புறநகர் எல்லைக்குள் நுழைந்ததும் நையாண்டி மேள வாத்தியம் நம்மை சுண்டி இழுத்தது. மறுபுறத்தில், வீதிகளை முழுக்க முழுக்க அலங்க ரித்த வண்ண மின்விளக்குகள். சிறு தெய்வங்கள் என்று அழைக்கப்படும் நாட்டார் தெய்வங்களின் உருவ கட்டவுட் அலங்காரம் என்று கண்களுக்கு விருந்து படைத்தன. சிறிது தூரம் சென்றதும் வீதியின் நடுவே முண்டி யடித்துக் கொண்டிருந்தது ஒரு கூட்டம். நையாண்டி இசைக்கலைஞர்களின் வாத்தியங்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்த இசைக்கும், தாளத்திற்கும் ஏற்ப பொய்க்கால் குதிரை, கரகாட்ட கலைஞர்களின் நடனம் மேலும் வேகம் எடுத்தது. இந்தக் காட்சி சுமார் 40 ஆண்டு களுக்கு முன்பு நான் பார்த்த எனது சொந்த ஊர் திரு விழாவை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.
இந்தக் கலைக்கு இப்போதும் மவுசு தான்!
தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாக வழக்கிலிருந்து வரும் நாட்டுப்புறக் கலை வடிவங்களில் பொய்க்கால் குதிரை ஆட்டமும் ஒன்றாகும். தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில் இந்த பொய்க்கால் குதிரை ஆட்டம் முற்றிலும் பொழுது போக்கின் அடிப்படையில் தோன்றிய ஒரு கலை யாகவே இருந்து வருகிறது. கிராமங்களில் கோவில் திருவிழா என்றால் கர காட்டம், காவடியாட்டம் அதற்கடுத்ததாக பொய்க்கால் குதிரை ஆட்டம் இல்லாமல் இருக்காது. இந்த கிராமியக் கலை நிகழ்ச்சிகளுடன் திரைப்பட ஆடல், பாடல் நிகழ்ச்சி களும் முக்கிய இடம் பிடிக்கும். எது எப்படி இருந்தாலும் பொய்க்கால் குதிரை, கரகாட்டத்திற்கு மவுசு குறைவ தில்லை. கிராம திருவிழாக்கள் மட்டுமன்றி அரசு விழாக்களி லும், அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களிலும், முக்கியப் பிரமுகர்களின் இல்ல திருமணங்களிலும் பொய்க்கால் குதிரை ஆட்டம் இடம் பெறுவது வழக்கம். விழாக்களில் மட்டுமல்ல தமிழ் மற்றும் பிற மொழி திரைப்படங்களிலும் பொய்க்கால் குதிரை ஆட்டம் இடம் பிடித்தது.
மரபின் வேர்கள்...
தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, ஒடிசா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் இந்த பொய்க்கால் குதிரை ஆட்டம் மிகவும் பிரபலமாகும். இந்தக் கலை உள்ளூர் மட்டுமின்றி கடல்கடந்தும் சென்று கொண்டி ருக்கிறது. இதனால்தான் தென்னக கலை பண்பாட்டு மையம் போன்ற அமைப்புகளும் இத்தகைய கிராமியக் கலைகளை மேம்படுத்தும் பணியில் தொடர்ந்து தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றன. தமிழகத்தின் தலைநகரில் பொய்க்கால் குதிரை, கர காட்டம் போன்ற கலை வடிவங்களை பார்ப்பது அபூர்வம் தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சங்கமம் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியபோது இத்தகைய கலைகள் சற்று பிரபலம் அடைந்தது என்றே சொல்ல வேண்டும். இக்கலையை இன்றும் பலரும் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளிலும் முக்கியத் துவம் கொடுத்து பயிற்சி தரப்படுகிறது. இரண்டடி, நான்கடி, ஆறடி உயரத்துக்கு கட்டையை காலில் கட்டிக் கொண்டு உண்மையான கால்களில் நின்று ஆடாமல் பொய்யான கால்களில் நின்று கொண்டு குதிரை போன்ற 20 கிலோவுக்கும் அதிகமான எடைகொண்ட உருவத்தை சுமந்துகொண்டு ஆடுவதால் இதற்கு “பொய்க்கால் குதிரை” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கலைஞர்கள் தங்கள் காலில் கட்டையை கட்டிக் கொண்டு நிற்கும்பொழுது ஒரே இடத்தில் நிலையாக நிற்க முடியாது. அங்குமிங்கும் தாளத்திற்கு ஏற்பவும் அசைந்து ஆட வேண்டும். இடையில் நிற்கும் பொழுது ஏதேனும் சுவர் அல்லது ஒருவரை பிடித்துக்கொண்டு தான் நிற்க முடியும்.
இந்த பொய்க்கால் குதிரை ஆட்டத்தை ஆண்-பெண் என்று தனித்தனியாகவும் குழுவாகவும் நடத்துவார்கள். இசை மற்றும் பாடல்களுக்கு ஏற்ப நளினமாகவும் நடப்பார்கள், ஓடுவார்கள், குதிப்பார்கள். பக்கவாட்டில் குதிரையை அடக்குவது, கடிவாளத்தை பிடித்து முன்னும் பின்னும் அசைத்து ஆடுவதை பார்க்கும் பொழுது குழந்தைகள் மட்டுமல்ல இளசுகளும், பெரிசுகளும் பரவசமடைவர். சுமார் இரண்டு மணி நேர ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தில் கிராமமே களைக் கட்டியது. நேரம் செல்லச் செல்ல கூட்டமும் சற்று கலையத் தொடங்கியது. ஆனாலும் கிராமியக் கலைஞர்களின் கால்களுக்கு மட்டும் ஓய்வு இல்லை. இரவு 11 மணியை தாண்டிய பிறகுதான் சற்று ஓய்வு கொடுத்தனர். அந்த இடைவேளையின் போது பொய்க்கால் குதிரை ஆட்டக் கலைஞர்களிடம் சிறிது நேரம் பேச்சுக் கொடுத்தோம். அவர்கள் கூறியது:
வாடாத வசந்த மலர்கள்!
தமிழ்நாட்டில் முதன் முதலாக இந்த பொய்க்கால் குதிரை ஆட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தவர் தஞ்சையை அடுத்த திருவையாறைச் சேர்ந்த ராமகிருஷ்ணன். இதனால் தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் எங்கள் கலை ஞர்கள் அதிகம் உள்ளனர். மதுரை மாவட்டங்களில் காலில் கட்டையை கட்டிக் கொள்ளாமல் வெறும் காலில் சலங்கை கட்டிக்கொண்டு பொய்க் குதிரையை சுமந்து கொண்டு ஆடும் மரபு உள்ளது. இதனால் இந்த ஆட்டத்தை ‘பொய்க் குதிரை’ என்றும் அழைக்கிறார்கள். மிகவும் பிரபலமான நாட்டுப்புறக் கலைகளில் பொய்க்கால் குதிரை ஆட்டமும் ஒன்று. இப்போது இந்த ஆட்டத்தை ஆடி வரும் கலைஞர்கள் மிகக் குறைந்த அளவே இருக்கின் றனர். காலில் கட்டையைக் கட்டி, குதிரையின் கனத்தையும் தூக்கி, காலில் சலங்கையும் கட்டி ஆடுவது ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல. திருவிழாக்கள் நடைபெறும் பங்குனி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வரைதான் இத்தொழில். மற்ற ஆறு மாதங்களுக்கு தொழில் கிடையாது. ஒரு சிலர் மட்டும் விவசாயம் என வேறு தொழிலுக்கு செல்கின்றனர். பொதுவாக நாங்கள் வறுமை யில் வாடினாலும், இந்த கிராமியக் கலை அழியக் கூடாது என்ற மன உறுதியை கொண்டுள்ளதால் முழுநேரமாக பொய்க்கால் குதிரை ஆட்டத்தை தொடர்ந்து வருகிறோம். மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டாலும் பல ஆண்டுகளுக்கு முன்பே தஞ்சையில் குடியமர்ந்த நாடி குடும்பத்தில் 80 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் கலை மாமணி டி.ஏ.ஆர். நாடி ராவ், 68 வயதைக் கடந்த அவரது மனைவி காமாட்சி ஆகியோர் பல தலைமுறைகளாக பொய்க்கால் குதிரை ஆட்டத்தை தொடர்ந்து வருவது எங்க ளைப் போன்ற கலைஞர்களுக்கு ஊக்கம் கொடுக்கிறது. பாரம்பரியமான கலைகளில் மிகவும் பிரசித்தி பெற்ற பொய்க்கால் குதிரையாட்டம் மற்றும் வாத்திய கலை ஞர்களின் வாழ்வாதாரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. அதிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கடந்த மூன்றாண்டு காலமாக எங்களது வாழ்க்கையை மிகவும் மோசமாக்கிவிட்டது.
ஆனாலும், நம்மோட மரபுக் கலைகளை எப்படியாவது அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதால் சின்ன வயசுல இருந்து பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் முழு மூச்சாக ஈடுபட்டு வரும் எங்களைப் போன்றோருக்கு பல்வேறு உதவிகளையும் சலுகைகளையும் வழங்கி அரசு ஊக்கப்படுத்த வேண்டும். இதற்காக அதிக நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசும் முதலமைச்சரும் எங்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும். இக்கலை வளர்வதற்கு பள்ளி, கல்லூரிகளிலும் பயிற்சி கொடுக்க வேண்டும். சங்கமம் போன்ற நிகழ்ச்சி களை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற தங்கள் எண்ணத்தையும் கோரிக்கையையும் பகிர்ந்து கொண்டனர். நமது மண்ணில் தோன்றி தழைத்திருந்த கலைகள் பலதும் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து போன நிலையில், மராத்திய மாநிலத்தில் இருந்து வந்த இந்த பொய்க்கால் குதிரை ஆட்டம் நமது மக்களோடு கலந்துவிட்டது. கொரோனா வைரஸ் பரவல் இந்த கலைஞர்களை மேலும் முடக்கிவிட்டது. இக்கலைஞர்களுக்கு மக்களின் ஆதரவு கண்டிப்பாக தேவை. இல்லையென்றால் இன்னும் எத்தனை ஆண்டு காலம் தொடரும் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.