சென்னை,டிச.12- தமிழ்நாட்டில் நீரிழிவு முதுநிலை மேற்படிப்பு தொடங்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு மாநில அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- உலக அளவில் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் அதிக அளவில் இருக்கிறார்கள். இதனால் மத்திய அரசு மற்றும் தனிநபர்களின் சுகாதாரச்செலவு அதிகரித்து உள்ளது. அவசர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கா விட்டால் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரிக்கும். இதன் சுமை மருத்துவத்துறைக்கு மேலும் அதிகமாகும். தமிழ்நாட்டில் 10.4 விழுக்காடு பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட் டுள்ளனர். ஒன்றிய-மாநில அரசுகள் சில ஆண்டுகளாக சுகாதார காப்பீடு நீரிழிவு நோய் சிகிச்சை அளிக்க கவனம் செலுத்தி வருகிறது. எனவே நீரிழிவு முதுநிலை பட்ட மேற்படிப்பை (நீரிழிவு, ஊட்டச்சத்து, மெட்டா பாலிசம்) தொடங்க வேண்டும். இதனால் நாட்டில் சுகாதார நிபுணர்கள் அதிகரிக்க உதவும். இது மத்திய, மாநில சுகாதாரத் துறையில் நீரிழிவு சிகிச்சையை உயர்தரமாக செயல்படுத்த வழிவகுக்கும். மேலும், இது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட புற மருத்துவமனைகளிலும், மருத்துவ பிரிவுகள் உருவாக்க உதவும். நாட்டி லேயே முதல்முறையாக 1986-ஆம் ஆண்டு தமிழகத்தில் சென்னை மருத்துவக் கல்லூரியில் 2 ஆண்டு நீரழிவு பட்டயபடிப்பு தொடங்கப்பட்டது. இந்த பட்டப்படிப்புக்கு மட்டும் தான் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் வழங்கி உள்ளது. எனவே நீரிழிவு முதுநிலை பட்ட மேற்படிப்பு வகுப்பு தொடங்குவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.