tamilnadu

img

தீக்கதிர் விற்பனையை பன்மடங்கு பெருக்குவோம்! - கே.பாலகிருஷ்ணன்

ஊடக உலகில் ‘உண்மையின் பேரொளி’ என்ற முத்திரை வாக்கியத்துடன்  மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் எண்மப் பதிப்பு என ஐந்து பதிப்புகளாக தீக்கதிர் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஒன்றிய ஆட்சியாளர்கள் பெரும்பாலான ஊடகங்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து உண்மைச் செய்திகளுக்கு மூடுதிரை போட்டு மறைத்து பொய்யையும், புனைகதைகளையும் அன்றாடம் அவிழ்த்து விட்டுவரும் நிலையில் உழைக்கும் மக்களின் போராட்டச் செய்திகளை எட்டுத்திசைக்கும் எடுத்துச் செல்லும் வாய்மையின் தூதுவனாக தீக்கதிர் ஏடு செயல்பட்டு வருகிறது. ‘கட்சிப் பத்திரிகை, கட்சியின் அமைப்பாளன்’ என்பார் மாமேதை லெனின். அவர் தொடங்கிய ‘இஸ்கரா’  ஏட்டின் பெயரை தமிழில் தாங்கி வெளிவரும் தீக்கதிர் ஏடு, மார்க்சிய-லெனினிய வெளிச்சத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. 1963-ஆம் ஆண்டு தன்னுடைய புரட்சிகரப் பயணத்தை தீக்கதிர் வார இதழாக தொடங்கியது. பின்பு நாளேடாக மலர்ந்தது. அன்று முதல் இன்று வரை இடையறாது இந்த ஏடு வெளிவந்து கொண்டிருப்பது ஒரு சாதனைச் சரித்திரமாகும். கொரோனா கொடுங்காலத்தில் பல ஏடுகள் வெளிவர முடியாத சூழலில் கூட தீக்கதிர் எண்மப் பதிப்பாக இயங்கி வந்ததோடு அன்றாடம் செய்திகளையும், கருத்துக்களையும் டிஜிட்டல் வடிவத்தில் வாசகர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அர்ப்பணிப்புமிக்க தலைவர்கள் மற்றும் ஊழியர்கள், முகவர்கள், செய்தியாளர்களின் பேருழைப்பே இந்த பெருமிதம்மிக்க சாதனையைச் சாத்தியமாக்கியிருக்கிறது.

ஜனநாயக தீபத்தை ஊதி அணைக்க முயன்ற அவசரநிலைக்காலம் எனும் இருண்ட காலத்திலும் தீக்கதிர் தன்னுடைய வர்க்கக் கடமைகளிலிருந்து விலகவில்லை. கடுமையான இடர்பாடுகளுக் கும் தணிக்கைக்கும் மத்தியில் தனது பயணத்தை துணிச்சலுடன் மேற்கொண்டது. தகவல் தொழில் நுட்ப யுகம் என்று அழைக்கப்படுகிற இந்த நூற்றாண்டில் காலத்தின் தேவைக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு தீக்கதிர் வளர்ந்து வந்துள்ளது. அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் பத்திரிகைகளில் தமிழகத்தின் நான்கு திசைகளிலிருந்தும் நான்கு பதிப்புகளாக வெளிவருவது தீக்கதிர் மட்டுமே என்று பெருமையாகச் சொல்ல முடியும். தீக்கர் ஏட்டின் வளர்ச்சி என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியில் ஒருங்கிணைந்த ஒன்றாகும். 60-ஆண்டுகளில் எத்தனையோ மலர்கள், சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளது தீக்கதிர். தமிழக வரலாற்றை தேடுவோரின் ஆவணக் காப்பகமாகவும் நம்முடைய ஏடு விளங்குகிறது. உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகவும் மதச்சார்பின்மை, கூட்டாட்சி போன்ற விழுமியங்களுக்கு எதிராகவும், பாசிசப்படையினர் அடக்குமுறைகளை ஏவி விடுகிற இந்தக் காலத்தில் உழைக்கும் மக்களின் வாளும் கேடயமுமாகச் சுழல்கிறது தீக்கதிர்.

இன்றைக்கு ஒன்றிய ஆட்சியாளர்கள் பின்பற்றும் மதவெறி மற்றும் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாகவும் செய்திகளையும், கருத்துக்களையும் தாங்கி வரும் ஏடு இது. தாய்மொழியின் உரிமைக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும் இடையறாது முழங்கி வருகிறது தீக்கதிர். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், லாக்கப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்த்து போரிடும் ஏடு இது. மக்கள் ஒற்றுமை, மனித நேயம், மதச்சார்பின்மை, கருத்துரிமை, படைப்புரிமை போன்ற உயரிய கொள்கைகளுக்காக போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டச் செய்திகளை மக்களிடம் அன்றாடம் கொண்டு சேர்க்க அயராமல் பணியாற்றுகிறது தீக்கதிர்.

சமூக நீதிக்கான சமர்க்களத்தில் சமசரமின்றிப் போராடும் இந்த ஏடு எத்தனையோ அநீதிகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. நீதியின் பக்கம் நிமிர்ந்து நின்று வருகிறது. தீண்டாமை உள்ளிட்ட சமூகக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவோரின் கைவாளாகச் சுழழும் ஏடு இது. மறைக்கப்பட்ட உண்மைகளின் மீது வெளிச்சம் பாய்ச்சும். பெரும் பணியை தீக்கதிர் செய்து வருகிறது.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடாக இருந்தபோதும் ஒட்டு மொத்த இடதுசாரி ஜனநாயக மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் முகமாகவும் ஒளிர்கிறது தீக்கதிர். தீக்கதிர் கடந்து வந்த பாதை என்பது நெருப்பாற்றை நீந்திக் கடந்த வரலாறாகும். மக்கள் ஜனநாயகப் புரட்சியை இலக்காகக் கொண்டு பொதுவுடைமைக் கொள்கையை திசையெட்டும் சேர்க்கும் தீக்கதிரின் பெரும் பணி தொடரட்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழமைப்பூர்வ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீக்கதிரின் விற்பனையை பன்மடங்கு பெருக்குவோம். வீடுகள் தோறும் தீக்கதிர் ஏட்டின் வெளிச்சம் பரவட்டும்.   வைரவிழா கண்டுள்ள தீக்கதிர் ஊடக உலகின் வைரமாய் ஒளிரட்டும்.

;