மின்ஊழியர்கள் 58 இடங்களில் தர்ணா!
மின் வாரியத்திலுள்ள 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழகம் முழுவதும் 58 மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு மின் ஊழியர்கள் செவ்வாயன்று (பிப். 25) தர்ணாவில் ஈடுபட்டனர். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. மத்தியசென்னை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்தில் அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ். ராஜேந்திரன் பங்கேற்று உரையாற்றினார். மத்திய சென்னை கிளைத் தலைவர் வி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்தபோராட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. திருவேட்டை, மத்திய அமைப்பின் மாநிலத் துணைத்தலைவர் எம்.தயாளன், மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், கிளைப் பொருளாளர் முருகவேல் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக பொதுச்செயலாளர் எஸ். ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “மின் வாரியத்தில் களப்பிரிவில் மட்டும் 32 ஆயிரம் ஆரம்பக்கட்ட பணியிடங்கள் உள்பட 60 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப 4 ஆண்டு களாக வலியுறுத்தி வருகிறோம்.
பணியாளர் பற்றாக்குறையால் பணிப்பளு அதிகரித்துள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு ஊழியர்கள் ஊனமடை கின்றனர், பலர் உயிரிழக்கின்றனர். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கொண்டு வந்து, பணியாளர் எண்ணிக்கையை குறைக்க திட்டமிடுகின்றனர். நுகர்வோரை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். வாரியத்தை தனியாரிடம் தரமாட்டோம் என்று கூறும் அரசு மறுபுறத்தில் ‘உதய்’ திட்டம் தவறு என தெரிந்த பிறகும் அதை ரத்து செய்யாமல் இருப்பது சரியல்ல. 1.12.2019 முதல் 16.05.2023 வரை பணியில் இணைந்தவர்களுக்கு 6 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 1.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்ற வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மார்ச் 25 தர்ணா 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி மார்ச் 25 அன்று மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெறும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், ஏப்ரல் மாத இறுதியில் கோட்டை (தலைமைச் செயலகம்) முற்றுகைப் போராட்டம் நடைபெறும். இவ்வாறு எஸ். ராஜேந்திரன் கூறினார்.