tamilnadu

img

மானிய விலையில் பெட்ரோல் கேட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

சென்னை, ஏப். 11- மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 20 லிட்டர் பெட்ரோல் 50 விழுக்காடு மானிய விலையில் வழங்க வேண்டும் என  அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட மையங்களில்  திங்களன்று (ஏப். 11) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அருகே மத்திய சென்னை மாவட்டத் தலைவர் டி.சுரேந்தரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், மாவட்டப் பொருளாளர் மனோகரன், நிர்வாகிகள் சிவக்குமார், ராஜன், சதாசிவம், விஜயன், கஸ்தூரி, ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து எஸ்.நம்புராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையில், ஒன்றிய அரசு கடந்த மார்ச் 22ஆம் தேதியில் இருந்து தற்போது வரை பெட்ரோல், டீசல் விலையை 11 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதனால் சாதாரண வாகனங்களுக்கு செலவாகும் பெட்ரோலை விட மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு கூடுதலாக பெட்ரோல் செலவாகும். தினசரி 20 ரூபாயில் இருந்து 30 ரூபாய் வரை கூடுதலாக செலவாகிறது. இதனால் அவர்கள் மாதத்திற்கு 1000 ரூபாய் வரை கூடுதலாக பெட்ரோலுக்கு மட்டும் ஒதுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விலை உயர்வால் மாற்றுத்திறனாளிகள் அன்றாடத் தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே உடனடியாக பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதுச்சேரி, சண்டிகர் மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 20 லிட்டர் பெட்ரோல் 50 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படுகிறது. இதை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும். இதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.