tamilnadu

img

சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு செவ்வஞ்சலி

தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் உருவப்படத்திற்கு சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆர்.பத்ரி, வெ.ராஜசேகரன், ஏ.ஆறுமுக நயினார், பொருளாதார அறிஞர் பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மக்கள் ஒற்றுமையை பாதுகாத்து, வர்க்கப் போராட்டத்தின் முன்னணி தளபதியாக விளங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் மறைவுக்கு தமிழ்நாடு மாநிலக்குழு செவ்வஞ்சலி செலுத்தியுள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான  தலைவரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள மக்களின் இதயங்களில் நிறைந்திருப்பவரு மான தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் அக்டோபர் 1 சனிக்கிழமையன்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செவ்வஞ்சலியையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது,

கண்ணூர் மாவட்டத்தில் பிறந்த தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு  தனது மாணவப் பருவம் முதலே வீரஞ்செறிந்த போராட்டங்களில் பங்கேற்றார். கண்ணூர் மாவட்டத்தில் மதவெறியர்களால் திட்டமிடப்பட்டு கலவரங்கள் நடத்தப்பட்ட போது, அந்த பிரதேசம் முழுவதும் தீவிரமாக செயல்பட்டு மதநல்லிணக்கத்தையும் மக்கள்  ஒற்றுமையையும் பேணிப் பாதுகாத்திட்ட மகத்தான தலைவர் தோழர்  கோடியேரி பாலகிருஷ்ணன். அவசர நிலை காலத்தின் போது மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 18 மாதங்கள் கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டு, காவல்துறையின் கடும் சித்ரவதைக்கு உள்ளான வர். கேரளத்து மக்களின் நலன் காக்கவும், நாடு  முழு வதும் உள்ள பாட்டாளி மக்களின் நலன்  காக்கவும், வர்க்கப் போராட்டத்தின் முன்னணி தளபதிகளில் ஒருவ ராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்தி யவர்.

தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் கிளைச் செயலாளர் பொறுப்பில் துவங்கி, மாணவர் சங்க மாநிலச் செயலாளர், வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர், மத்தியக்குழு உறுப்பினர், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், மூன்று முறை கேரள மாநிலச் செயலாளர் என பல்வேறு பொறுப்பு களில் சிறப்பாக பணியாற்றி தடம் பதித்தவர். 1982 இல் முதல்முறையாக தலசேரி தொகுதியிலிருந்து கேரள சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட அவர், தொடர்ந்து 1987, 2001, 2006, 2011 தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்று உள்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் திறம்பட செயல்பட்ட வர். கேரள மக்களின் நலன்களுக்காகவும், மாநில  வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்ட தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் அவர்களின் மறைவு இடது சாரி இயக்கத்திற்கும், முற்போக்கு சக்திகளுக்கும் பேரிழப்பாகும். கட்சியின் தமிழ்நாடு  மாநிலக்குழு அவருக்கு தனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது. தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் குடும்பத்தாருக்கும், கேரள மக்களுக்கும், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது ஆறுதலை  தெரிவித்துக் கொள்கிறது. தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் மறைவை யொட்டி கட்சி நிகழ்ச்சிகளை மூன்று நாட்களுக்கு ரத்து செய்து கட்சிக் கொடியை அரைக்கம்பத்திற்கு பறக்கவிட்டு இரங்கல் அனுஷ்டிக்க வேண்டுமென கட்சி அணிகளை மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.