லக்னோ\புதுதில்லி, செப்.14- வாரணாசி ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஏற்றதுதான் என்று மாவட்ட நீதிமன்றம் கூறியிருப்பது 1991 வழி பாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு நேரெதி ரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அடுத்துள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச்சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்திருக்கிறது. இந்த சிலைக்கு ஆண்டுக்கு ஒருமுறை பூஜைகளும் நடத்தப்படுகின்றன. இதனிடையே இந்த அம்மன் சிலைக்கு தினமும் பூஜை நடத்த அனுமதிக்கக் கோரி, தில்லியைச் சேர்ந்த 5 இந்துப் பெண்கள் பெயரில் வாரணாசி நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தவும், வீடியோ பதிவு செய்யவும் உத்தர விட்டது. அதன்படி ஞானவாபி மசூதி வளா கத்தில் 3 நாட்கள் நடைபெற்ற கள ஆய்வுக்கு இடையிலேயே குழுவில் இடம்பெற்ற ஒரு வர், மசூதியின் நுழைவாயிலில் அமைந்துள்ள நீர் தேக்கும் தொட்டியில் சிவலிங்கம் இருப்பதாக தகவலை கசிய விட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யது.
அதனடிப்படையில் சிவலிங்கம் கண்டு பிடிக்கப்பட்டது என கூறப்படும் பகுதியை சீல் வைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, முஸ்லிம்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன்மீது, கடந்த மே 17 அன்று விசார ணை நடத்திய உச்ச நீதிமன்றம், ‘சிவலிங்கம்’ கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் பகுதியை பாதுகாக்கவும், அதேநேரம் மசூதி யில் முஸ்லிம்கள் நமாஸ் செய்ய அனு மதிக்கவும் கடந்த மே 17 அன்று உத்தரவு பிறப்பித்தது.
அதேநேரம், ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் தினமும் வழிபாடு நடத்துவதற்கு அனுமதி கோரும் மனு விசாரணைக்கு உகந்ததா? என்பதை வாரணாசி மாவட்ட நீதிமன்றமே முடிவு செய்யும் என்றும் கூறிவிட்டனர். இந்நிலையில், வாரணாசி மாவட்ட நீதிமன்றம், ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததா? என்பது குறித்து முதலில் விசாரித்தது.
அப்போது, “ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தக் கோருவது, 1947 இல் உள்ள வழிபாட்டுத் தலங்களின் மத அந்தஸ்தை முடக்கும் 1991 சட்டத்தை (வழிபாட்டுத் தலங்கள் சட்டம்) மீறும் செயலாகும். இத்தகைய மனுக்களின் அடிப்படையில் மசூதிகளுக்கு சீல் வைப்பது பொதுக் குழப்பம் மற்றும் வகுப்புவாதத்திற்கு வழி வகுக்கும். இது, நாடு முழுவதும் உள்ள மசூதிகளை பாதிக்கும்” என்று வாதிட்ட னர். இரு தரப்பினரின் வாதம் முடி வடைந்ததையடுத்து செப்டம்பர் 12-ஆம் தேதி வரை தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், திங்களன்று (செப். 12) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட நீதிபதி ஏ.கே. விஷ்வேஷா, ஞானவாபி மசூதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததே என்றும், இவ்வழக்கில் செப்டம்பர் 22 முதல் விசார ணை துவங்கும் என்றும் தீர்ப்பளித்ததுடன், முஸ்லிம்கள் தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவு பிறப்பித்தார். வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக ஞானவாபி மசூதி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
சிபிஎம் அரசியல் தலைமைக் குழு கண்டனம்
வாரணாசி நீதிமன்றத்தின் முடிவு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஞானவாபி மசூதி வழக்கில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் மேற்கொண்டுள்ள முடிவு, 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் இலக்குகளை முற்றிலும் மீறுவது ஆகும். இந்த மசூதிக்குள் சென்று வழிப்பட உரிமை கோரி (இந்து அமைப்புகள் சார்பில்) தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் விசாரணைக்கு ஏற்புடையவைதான் என்றும், மேற்கண்ட சட்டத்தால் இது தடுக்கப்படவில்லை என்றும் இந்த நீதிமன்றம் கூறியிருக்கிறது.
நீதித்துறையில் உள்ள ஒரு பகுதியினர் இப்படி சட்டத்தை தவறான முறையில் வியாக்கியானம் செய்வது, அந்த சட்டத்தின் தன்மையையே மாற்றும் அளவிற்கு கடுமை யான விளைவுகளுக்கு இட்டுச் செல்லக் கூடியது. இது தடுக்கப்பட வேண்டும். மத்தியில் ஆளும் கட்சியானது, சிறுபான்மை சமூகங்களை குறிவைக்கும் பொருட்டு வரலாற்றைத் திரித்து, சிதைத்து தவறான முறையில் விளக்கங்கள் அளிப்பதில் முனைப்பாக உள்ளது என்பதில் எந்த ரகசியமும் இல்லை. இன்றைய மசூதிகள், ஒரு காலத்தில் இருந்த கோவில்களை தரைமட்டமாக்கி, அந்த இடங்களில்தான் கட்டப்பட்டன என்று கூறுவது நீண்டகால மாக இவர்கள் தங்களது மதவெறி நிகழ்ச்சி நிரலுக்காக - மத உணர்வுகளை கிளறிவிடும் பொருட்டு பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழிமுறையாக உள்ளது. 1991 வழிபாட்டு தலங்கள் சட்டமானது மதநல்லிணக்கம் காக்கும் தேசிய நலனை உறுதிப்படுத்துவதில் ஒரு முக்கியப் பங்கு வகித்து வருவதாகும்; இந்தச் சட்டம் மதுரா மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் உள் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனுக் களின் சூழ்ச்சிகளை தடுத்து நிறு்த்தக் கூடியது. எனவே, 1991 ஆம் ஆண்டு சட்டத்தினை அதன் முழுமையான உணர்வு மற்றும் நோக்கத் த்தின் அடிப்படையில் உறுதியாக அமலாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.