இம்பால், ஜன.31- நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூரில் முதல் முறையாக சரக்கு ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. மியான்மர் எல்லையில் உள்ள மணிப்பூர் மாநிலம் சமீபத்தில்தான் ரயில்வே வரைபடத்தில் இடம்பிடித்தது. இம்மாநிலத்துக்கு கடந்த 6-ஆம் தேதி பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. அசாம் மாநிலம் சில்சார் நகரிலிருந்து மணிப்பூரின் பொங்கைசுங்பாவ் ரயில் நிலையம் வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், மணிப்பூர் மாநிலம் தமங்லாங் மாவட்டம் ரானி கைடின்லியு ரயில் நிலையத்துக்கு முதல் முறையாக 27ஆம் தேதி சரக்கு ரயில் சென்றடைந்தது. அப்போது உள்ளூர் மக்கள் பாரம்பரிய நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “மணிப்பூர் மாநிலத்துடனான தொடர்பு மேம்படும். அம்மாநிலத்தின் வர்த்தகம் ஊக்கம் பெறும். அம்மாநிலத்தின் அற்புதமான பொருட்கள் நாடு முழுவதும் பயணிக்கும்” என பதிவிட்டுள்ளார். மேலும் மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வடகிழக்கு மாநில மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, ரயில்வே கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் பிரதமர்மோடியின் கண்காணிப்பில் நடைபெறுகிறது” என பதிவிட்டுள்ளார்.