tamilnadu

img

பொன்மலை தியாகிகள் நினைவை நெஞ்சில் ஏந்தி... - ஆர்.ராஜா

இந்தியா வீரஞ்செறிந்த போராட்டங்கள் பலவற்றை கண்ட ஆண்டு 1946. ரயில்வே தொழிலாளர்களின் வேலை நிறுத்த வாக்கெடுப்பு 1946 மே மாதம் பெரும் எழுச்சியுடனும், ஒற்றுமையுடனும் நடைபெற்றது. இப்படி ப்பட்ட அகில இந்திய ஒற்றுமை எழுச்சி முன்னெப்பொழுதும் ஏற்பட்டதில்லை. அதனால் வேலைநிறுத்த வாக்கெடுப்பில் தீவிரப் பங்காற்றியதற்காக திருச்சி பொன்மலை பணி மனையைச் சேர்ந்த 7 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது. இது தொழிலாளர் மத்தியில் குமுறலை ஏற்படுத்தி யது. இதை எதிர்த்து அப்பிரிவின் தொழிலாளர்கள் அனை வரும் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் துவங்கினர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் கள் அமைப்பும் குதித்தது. திட்டமிட்டபடி ஆகஸ்ட் 24 ஆம் தேதியன்று வேலைநிறுத்தம் துவங்கியது. தென்னக ரயில்வே க்கு உட்பட்ட 430 ரயில் நிலையங்களில் 300 நிலையங்கள் இழுத்து மூடப்பட்டன. வாரக்கணக்கில் ஒரு வண்டி கூட நகரவில்லை.

வேலை நிறுத்தத்தை உடைத்திட ஆங்கிலேய ரயில் நிர்வாகம் ஆசை வார்த்தைகள் பல கூறியது. 30 ரூபாய் வரை சம்பளம் வாங்குகிற தொழிலாளிகள் வேலைக்குத் திரும்பினால் அவர்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு என்றது. இத்தகைய முயற்சிகள் அனைத்தையும் தொழிலா ளிகள் துச்சமாகக் கருதி வெறுப்புடன் நிராகரித்தனர். அத னால் வீம்புக்காக பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுத்து அழைத்து வந்து ரயில் பெட்டிகளில் உட்காரவைத்து ஓரிரு ரயிலை ஓட்டினர். அதுவும் கேலிக்கூத்தாக முடிந்தது. செப்டம்பர் 2 ஆம் தேதியன்று நேரு தலைமையிலான இடைக்கால அமைச்சரவை தில்லியில் பதவியேற்றது.  இந்த பதவியேற்பு முடிந்து சரியாக 71 மணி நேரத்திற் குப் பின் பொன்மலையில் கொடூரமான தாக்குதல் தொடங்கி யது. செப்டம்பர் 5 ஆம் தேதி காலை 9 மணிக்கு பொன்மலை சங்கத்திடலில் தொழிலாளிகளும் அவர்தம் குடும்பத்தினரு மாக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்து தலைவர்களின் உரைகளை கேட்டுக் கொண்டிருந்தனர்.

அச்சமயத்தில் ஹாரிசன் என்பவனின் தலைமையில் மலபார் போலீஸ் படை சங்கத்திடலுக்குள் நுழைந்து முன்னறி விப்பின்றி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. திரண்டி ருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அங்குமிங்குமாகச் சிதறி ஓடினர்.  தங்கவேலு (26), தியாகராசன் (28), ராஜூ (26), ராமச்சந்திரன் (25), கிருஷ்ணமூர்த்தி (24) ஆகிய ஐந்து இளம் தோழர்கள் அதே இடத்தில் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியா யினார்கள். சங்கக் கட்டிடத்திற்குள் நுழைந்த போலீஸ்படை, சங்கத்தின் பொதுச்செயலாளர் அனந்தன் நம்பியாரின் கை, கால்களைக் கட்டி தடியால் அவரைத் தாக்கி குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கியது. துப்பாக்கி கூர்முனையினால் அவர் தலையில் இடித்து படுகாயப்படுத்தியது. நம்பியார் இறந்து விட்டதாகக் கருதி விட்டுச் சென்றது. 250க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் படுகாயப்படுத்தப்பட்டனர். நம்பியாரின் வயது முதிர்ந்த தாயின் வலது கை அடித்து முறிக்கப்பட்டது. இவ்வளவு அட்டூழியங்களையும் புரிந்த ஆயுதப்படை, சங்கத்தின் சொத்துக்களையும் சூறையாடியது. நம்பியாரை முதல் குற்றவாளியாகக் கொண்டு 273 தொழிலாளிகள் மீது சதிவழக்கு போட்டது.

பொன்மலையில் நடைபெற்ற சம்பவங்களைக் குறித்து அறிந்ததும் அகில இந்திய ரயில்வே ஊழியர் சம்மேளனத்தின் அப்போதைய தலைவராக இருந்த எஸ்.குருசாமி திருச்சிக்கு விரைந்து வந்தார். போலீஸ் தாக்குதல்களை நிறுத்தும் படியும், தொழிலாளிகளின் கோரிக்கைகளை ஏற்கும்படியும் அவர் நிர்வாகத்தை வற்புறுத்தினார். திருச்சி மத்திய சிறை யில் அடைக்கப்பட்டிருந்த ரயில்வே தொழிற்சங்கத் தலை வர்களை அரசாங்க அனுமதிபெற்று சந்தித்துப் பேசினார். தொழிலாளர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்திய பின்னருங்கூட அவர்களின் போராட்ட உணர்வு மழுங்கவில்லை என்பதையும், வேலைநிறுத்தம் தொடர்ந்து முழுவேகத்துடன் நடைபெறுவதையும் கண்ட ஆங்கிலேய ரயில்வே நிர்வாகம், எஸ்.குருசாமி மூலம் சில வாக்குறுதி களை அளித்தது. தண்டனை வழங்கும் முன் விசாரிக்கப்பட வேண்டும் என்பது தொழிலாளிகளின் உரிமையாயிற்று. இந்திய ரயில்வே தொழிலாளிகள் அனைவருக்கும் இது பயன ளித்தது. வேலைநிறுத்த காலத்திற்குப்பின்னர் அறிவிக் கப்பட்ட முதல் ஊதியக்குழு, ஊதிய விகிதங்களை மாற்றிய மைத்தது. அகவிலைப்படி கணிசமாக உயர்த்தப்பட்டது. ரயில்பாதை (ஓபன் லைன்) காங்கி ஊழியர், ஸ்டேசன் மாஸ்டர், பாயின்ட்ஸ்மேன் போன்ற இதர பல பிரிவினருக்கும் 8 மணி நேர வேலை என்பது உறுதியாக்கப்பட்டது. இந்த வெற்றி யானது தென்னகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் ரயில்வே தொழிலாளிகளின் கவுரவத்தையும், மதிப்பையும் வெகுவாக உயர்த்தியது. 273 பேர்களுக்கெதிராக போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. இந்த வெற்றியானது சாதாரண வெற்றியல்ல. பொன்மலை தியாகிகள் ஐவரும், அவர்தம் சக தோழர்களும், தலைவர்களும் சிந்திய ரத்தத்தில் கிடைத்த வெற்றியாகும். 

;