tamilnadu

img

கார் பந்தயம் : தடம் பதிக்கும் சீனா வீரர்! - சி.ஸ்ரீராமுலு

கார் பந்தயத்தில் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரேசில், இத்தாலி, மெக்சிகோ, கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, அர்ஜென் டினா, ஸ்பெயின், ஸ்வீடன், நெதர்லாந்து, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளே  ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஃபார்முலா-1 கார் பந்தயம் என்றதும் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் ஷூமேக்கர். ஜெர்மனியை சேர்ந்த சூமேக்கர் ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்று உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். செபாஸ்டின் வெட்டல், நிக்கி லூடா, ஜிம்மி கிளர்க் என ஐரோப்பிய வீரர்கள் கொடிக் கட்டி பறந்து வரும் கார் பந்தயத்தில், இது வரைக்கும் கால்பதிக்காமல் இருந்த சீனா அண் மைக்காலமாக கவனம் செலுத்தி வருகிறது.

  தடம் பதித்த சீனா...

டேபிள் டென்னிஸ், பேட்மிட்டன், ஒலிம்பிக் விளையாட்டுகளில் பதக்கங்களை குவித்து வரும் சீனா, முதன்முதலாக ஃபார்முலா 1 பந்த யத்திலும் தடம் பதிக்கிறது.  அந்த வகையில், 1999 ஆம் ஆண்டு ஷாங்கா யில் பிறந்து 12 வயது வரைக்கும் சீனாவில்  வளர்ந்தவர் குவான் யூ சோவ். சிறுவயதில் இருந்தே கார் பந்தயங்கள் மீது இருந்த ஆர்வத் தை தனது தந்தையிடமும் தெரிவித்திருக்கிறார்.  மகனின் ஆசையை நிறைவேற்ற ஷாங்காய் நகரின் பயிற்சிப் பள்ளி ஒன்றிற்கு அழைத்துச் சென்று அங்குள்ள கார் பந்தயத்தின் உள் மற்றும் வெளிப்புற தடங்கள் (பாதைகள்), பந்த யத்தின் நுணுக்கங்களையும் தெரிந்துகொள்ள உதவி செய்திருக்கிறார். 

முதல் வீரர்...

இதற்கிடையில், குவான் யூ சோவ் குடும்பம் இங்கிலாந்தின் ஷெஃபீல்டின் யார்க்ஷயர் நகரில் குடியேறியது.  எனினும், கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி, சீனாவின் ஜூனியர் கார்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 11 வயதில் பட்டத்தை வென்றார்.  தொடர்ந்து எட்டு முறை அந்த சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் நடக்கும் ரோட் டாக்ஸ் கார்ட் சாம்பியன்ஷிப் பந்தயங்களிலும் பங்கேற்று வெற்றி வாகை சூடினார். 14 வயதில் தேசிய அளவிலான ரோடாக்ஸ் மாக்ஸ், யூரோ சேலஞ்ச் ஜூனியர் சாம்பி யன்ஷிப் இரண்டையும் வென்று சாதனை படைத்தார். ஃபார்முலா- 4 இத்தாலிய சாம்பி யன்ஷிப் போட்டிக்கான தொடரில் தனது 16வது வயதில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்து,  ‘சிறந்த இளம் வீரர்’ என்ற பட்டத்தை பெற்ற முதல் சீன வீரர் ஆனார். ஐரோப்பிய ஃபார்முலா -3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் ஜெர்மன் ஆட்டோ பந்தய அணி யான மோட்டோ பார்க் அணியுடன் இணைந்து பங்கேற்று, அதிக புள்ளிகளை குவித்து ‘வெற்றி கரமான ஓபனர்’ பட்டத்தை வென்றார். அதைத் தொடர்ந்து, அபுதாபியில் நடந்த தொடரிலும் வெற்றி பெற்றார். பின்னர், பார்முலா -2 சாம்பியன்ஷிப் போட்டி யிலும் கால் பதித்து ஜெர்மனியின் மோட்டோ பார்க், பக்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் கலந்துகொண்டு தனது திறமையை முழுமையாக வெளிக் கொண்டு வந்தார்.

உலகின் மதிப்பு மிக்க வீரர்...

ஷூமேக்கர், செபாஸ்டின் வரிசையில் தானும் ஃபார்முலா-1 பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற கனவை நிறைவேற்ற பயிற்சி ஓட்டுநராக அனைத்து வகை பயிற்சிகளிலும் பங்கேற்று வெற்றி வாகை சூடினார். உலகத்தின் கவனத்தை சீனாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கும் மிகவும் திறமை சாலி வீரரான குவான் யூ சோவ், இப்போதே உலகின் மதிப்பு மிக்க வீரராக உருவெடுத்தி ருக்கிறார். பின்லாந்தின் மூத்த வீரர் கிமி ரைக்கோன் மிக விரைவில் ஓய்வு பெறுவதை அடுத்து, அந்த இடத்திற்கு சீனாவின் இளம் வீரரான குவான் யூ சோவ் புதிதாக ஒப்பந்தம் செய்துள்ளதை ஆல்ஃபா அணியின் தலைவர் ஃபெடரிக் உறுதி செய்துள்ளார். இதன் மூலம், வால்டேரி பொட்டாஸூடன் இணையவுள்ளார்.   தற்போது, குடும்பத்துடன் லண்டனில் வசித்து வந்தாலும் தாய்நாட்டுக்காக சீன வீரராக ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் பங்கேற்க இருப்பதை பெருமையாக  கூறும் குவான் யூ சோவ், ‘‘அனைத்து வகையிலும் ஆதரவு அளித்துவரும் ரசிகர்களுக்கும், சீன அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்’’. ஃபார்முலா 1 பந்தயத்தில் முதன்முதலாக பங்கேற்கும் சீன வீரர் என்ற பெருமையுடன் களம் காணும் 22 வயதாகும் குவான் யூ சோவ், சாம்பியன் பட்டத்தை வென்று திருப்புமுனை ஏற்படுத்தி நீண்ட நாள் கனவை நிறைவேற்ற அனைவரும் வாழ்த்துவோம்!

 

;