tamilnadu

img

மறைந்த தோழர் என்.ராமகிருஷ்ணனின் வாழ்க்கை குறிப்பு....

மதுரை 

***தோழர் என்.ராமகிருஷ்ணன்***

பிறப்பு: செப்டம்பர் 1942

பெற்றோர் : எஸ்.நரசிம்மன்-ராமானுஜம்

படிப்பு : எஸ்எஸ்எல்சி

1958-59: நியூ செஞ்சுரி புத்தக நிலைய விற்பனையாளர்

1960: மதுரையில், கம்யூனிஸ்ட் கட்சி நாளிதழான 'ஜனசக்தி' ஏட்டின் உதவி செய்தியாளர் (நிருபர்).

1961-1964: சென்னை 'ஜனசக்தி' நாளிதழில் பணி- முதலில் எழுத்தர், பின்னர் காசாளர் 1962லிருந்து செய்திக் களஞ்சிய பொறுப்பாளர் (நூலகம்) ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் 'ஜனசக்தி'யின் முதல் நூலகர் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் (1946) கடைசி நூலகர் என்.ராமகிருஷ்ணன் (1962-64) நூலகர் என்ற முறையில் 'ஜனசக்தி' ஆசிரியர் குழு உறுப்பினர் தோழர் ஜீவா ஆசிரியர் தோழர் கே.முத்தையா பொறுப்பாசிரியர் உதவி ஆசிரியர்களாக தோழர்கள் வி.ராதாகிருஷ்ணன் இலங்கை கே.ராமநாதன், ஐ.மாயாண்டிபாரதி, மாஜினி மற்றும் சோலை ஆகியோர் இருந்தனர். `ஜனசக்தி' ஆசிரியர் குழுவில் அச்சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், உறுப்பினர் அல்லாதவர்களும் இருந்தனர். அவர்களில் என்.ஆர்.தான் குறைந்த வயதுக்காரர் (வயது 20).

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் புகுந்துவிட்ட திரிபுவாதப் போக்கை எதிர்த்து 1963ஆம் ஆண்டில் சென்னையில் `தீக்கதிர்' வார இதழ் துவக்கப்பட்டது. இதில் முன்னின்றவர் கோவையைச் சேர்ந்த கட்சியின் மாகாண கவுன்சில் உறுப்பினர் எல்.அப்பு என்ற அற்புதசாமி. அவரோடு சேர்ந்து அதை உருவாக்கியவர்கள் தோழர்கள் சோலை, எம்.என்.ராவுண்ணி, கோவை ஈஸ்வரன் மற்றும் என்.ராமகிருஷ்ணன் ஆகியோராவர்.

1964 ஏப்ரலில் கம்யூனிஸ்ட் கட்சி டெல்லியில் உடைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானவுடன் என்.ஆர். மற்றும் இரண்டு தோழர்கள் 'ஜனசக்தி'யிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பகிரங்கமாக 'தீக்கதிர்' பணியில் இறங்கினர். 1965-66ல் என்.ஆர். இதர தோழர்களுடன் ஓராண்டு சிறைவாசம். விடுதலையான பின் தீக்கதிர் உதவி ஆசிரியர் 1966ல் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆனார்.

1969 துவக்கத்தில் டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற அலுவலகப் பணிக்காக வரும்படி கட்சியின் அரசியல் தலைமைக்குழு அவரைப் பணித்தது. அதன்படி அவர் 1969 முதல் 1983 வரை 15 ஆண்டுகள் டெல்லியில் கட்சிப்பணி  செய்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அச்சமயத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 25 முதல் 35 உறுப்பினர்கள் வரை இருந்தனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும், அதே சமயத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு பணிக்கும் வேலைகளையும் என்.ஆர். செய்துவந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் அலுவலகமானது மத்தியக்குழுவின் டெல்லி உபகுழு அலுவலகமாகும். 1976 வரை கட்சியின் மத்தியக்குழு அலுவலகம் கல்கத்தாவிலிருந்து செயல்பட்டு வந்தது. 1977ல்தான் அது டெல்லிக்கு மாற்றப்பட்டது. என்.ஆர்.நாடாளுமன்ற கட்சி அலுவலகக் குழுவின் காசாளரும் ஆவார்.

என்.ஆருக்கு வெகு காலமாகவே கம்யூனிஸ்ட் இயக்கத்தின் போராட்ட வரலாறு, அதன் சாதனைகள், தலைவர்கள் மற்றும் செயல்வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுத வேண்டும் என்ற விருப்பம் இருந்து வந்தது. எனவே 1983ஆம் ஆண்டில் தன்னை நாடாளுமன்ற அலுவலகக்குழு பணியிலிருந்து விடுவித்து தமிழ்நாட்டிற்கு திரும்பிச் செல்ல அனுமதிக்குமாறு கட்சியின் அரசியல் தலைமைக்குழுவை கேட்டுக்கொண்டார். கட்சித் தலைமையும் அதை ஏற்று அவரை விடுவித்தது.

1983 அக்டோபரில் மதுரைக்கு வந்த என்.ஆர். சிறிது காலத்திற்குப்பின் தோழர் என்.வரதராஜன் அவர்கள் கேட்டுக்கொண்டபடி 'தீக்கதிர்' விளம்பரப் பொறுப்பாளரானார். சுமார் 3 ஆண்டு காலம் தமிழகம் முழுவதும் சென்று பல நூற்றுக்கணக்கான வர்த்தக நிறுவனங்களுக்குச் சென்று குறிப்பாக ஜவுளி நிறுவனங்கள், பீடி நிறுவன உரிமையாளர்களைச் சந்தித்துப் பேசி ஒப்பந்த விளம்பரங்கள் வாங்கினார். பல நகரங்களில் விளம்பர முகவர்களை நியமித்தார். தீக்கதிருக்கு பல சிறப்பு மலர்கள் தயாரித்துக் கொடுத்து விளம்பரங்கள் வாங்கி கணிசமான தொகை கிடைக்கச் செய்தார்.

மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டையொட்டி தீக்கதிருக்காக உலகத்தமிழ் மாநாட்டு சிறப்பு மலரை என்.ஆர்.தயாரித்துக் கொடுத்தார். பின்னர் சுதந்திரப் பொன்விழா மலர் `தீக்கதிர் தொழில் மலர்', `தீக்கதிர் விவசாய மலர்' இரண்டு முறை `மருத்துவ மலர்', `பி.ராமமர்த்தி நினைவு மலர்', `கே.ரமணி நினைவு மலர்' போன்ற சிறப்பு மலர்களை தீக்கதிருக்காக தயாரித்துக் கொடுத்தார். 1987ஆம் ஆண்டு முதல் 'செம்மலர்' பொங்கல் மலர் பலவண்ண அட்டையுடன், ஏராளமான விளம்பரங்களுடன் வெளிவரச் செய்தார். அது முதல் `செம்மலர்' தொடர்ந்து பல வண்ண அட்டை விளம்பரங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது.

பின்னர் `தீக்கதிர்' நிர்வாகமே விளம்பரங்கள் சேகரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதால் என்.ஆர். தன் முழுக்கவனத்தையும் எழுத்துத்துறையில் திருப்பினார். இதில் அவருக்கு 'சவுத்விஷன்' புத்தக நிறுவன உரிமையாளர் தோழர் எம்.பாலாஜி அவர்கள் பேருதவி புரிந்தார். என்.ஆரின் முதல் புத்தகம் முசாபர் அகமது வாழ்க்கை வரலாறு ஆகும். அது அவரது 46வது வயதில் வெளிவந்தது. அதன்பின் 2020அம் ஆண்டுவரை 76 புத்தங்கள் தமிழில் எழுதியுள்ளார்.அவர் ஆங்கிலத்தில் 10 புத்தகங்கள் எழுதியுள்ளார்.ஆங்கிலத்திலிருந்து 25 புத்தகங்களும், பிரசுரங்களும் தமிழாக்கம் செய்துள்ளார்.சுமார் 200 கட்டுரைகள் எழுதியுள்ளார்.

அவர் ஆங்கிலத்தில் எழுதி தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் முன்னுரையுடன் வெளியிட்டுள்ள 'உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் - ஒரு சுருக்கமான வரலாறு' (முதல் பாகம் 1844-1917) என்ற புத்தகமானது அந்த வரிசையில் உலகில் முதலாவது வந்த புத்தகமாகும். அது  விரைவில் தமிழில் வெளிவர உள்ளது. அவர் எழுதிய இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு முதல் பாகம் (1920 முதல் 1964 வரை) வெளிவந்தள்ளது.`தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்' (1917-1964) என்ற நூலும் அதைத் தொடர்ந்து தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயக்க வரலாறு (1964-2014) என்று நூலும் வெளிவந்துள்ளது.இவை நீங்கலாக மதுரை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, வடாற்காடு, முகவை மாவட்ட கட்சி வரலாறுகள் வெளிவந்துள்ளன. இன்னும் சில மாவட்ட வரலாறுகள் வெளிவர உள்ளன.

இது தவிர தோழர்கள் பி.ராமமூர்த்தி, எஸ்.ஏ.பெருமாள், கே.முத்தையா மற்றும் பி.ஆர்.பரமேஸ்வரன் ஆகியோரின் கட்டுரைகளைத் தொகுத்து, முறைப்படுத்தி 300 முதல் 400 பக்க அளவில் தொகுப்பு நூல்களாக வெளியிட்டுள்ளார்.

தோழர் பி.ராமமூர்த்தி அவர்களின் நாடாளுமன்ற முக்கிய ஆங்கில உரைகளைத் தொகுத்து என்.ஆர். முறைப்படுத்தியுள்ளார். விரைவில் அது வெளிவர உள்ளது.காரல் மார்க்ஸ் 200வது ஆண்டையொட்டி தீக்கதிர் நாளிதழில் வாரத்திற்கு ஒரு முறையாக 52 வாரங்கள் மார்க்ஸ்-எங்கெல்ஸ் குறித்தும், மார்க்சியம் குறித்தும் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் மார்க்ஸ்-எங்கல்ஸ் நூல்கள் குறித்தும் என்.ஆர்.கட்டுரைகள் குறிப்புகள் எழுதியுள்ளார். அதேபோல் `ரஷ்யப் புரட்சி நூற்றாண்டு' மற்றும் 'இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு காலத்தில்' `தீக்கதிரில்' என்.ஆர். பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

என்.ஆர். தமிழில் சுமார் 6 ஆயிரம் பக்கங்கள் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் சுமார் 2 ஆயிரம் பக்கங்கள் எழுதியுள்ளார். அவருடைய நூல்களை `சவுத்விஷன்', `பாரதி புத்தகாலயம்' `நியூ செஞ்சரி புத்தக நிலையம்' `கிழக்குப் பதிப்பகம்' மற்றும் `காலம் வெளியீடு' ஆகியவை வெளியிட்டுள்ளன.

;