tamilnadu

img

வாக்காளர்களைக் கவர்ந்து இழுக்கும் கலைக்குழுக்கள் - சு.மதியழகன்

அதிமுக, பாஜக கூட்டணியினர் தங்கள் கட்சி தலைவர்களை அழைத்து கூட்டம் போடுவதற்குள் படாதபாடு பட்டுவிடுகின்றனர். ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமென்றால் மேடை, மைக்செட், சேர் உள்ளிட்ட செலவோடு ஆட்களை அழைத்து வருவதற்கும் பட்nமூஜட் போட வேண்டிய நிலையில் உள்ளனர். சொல்லப்போனால் அதுதான் கூடுதல் செலவினமாக இருக்கிறது. வாகனம், பிரியாணி, குவாட்டரோடு அன்றைக்கான கூலியையும் கொடுக்க வேண்டும். அழைத்துவரப்படும் ஆட்கள் தலைவர்கள் வரும்வரை சும்மா இருக்க முடியாது அல்லவா? இதனால், ஆடல் பாடல், கரகாட்டம், ராஜா ராணி ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றனர். மேற்படி அரசியல் கட்சிகளின் கொள்கைகளையோ, சாதனைகளையோ விளக்குவதாக அந்தக் கலைக்குழுக்கள் இருப்பதில்லை. அழைத்து வரப்பட்ட ஆட்களுக்கும் அந்தக் கட்சிக்கும் சம்மந்தமே இல்லாததைப் போலவே வெறும் கவர்ச்சியையும், ஆபாசத்தையும் மையப்படுத்தியே இந்தக் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. தலைவர்கள் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக கலைநிகழ்ச்சிகள் நிறுத்தப்படுகின்றன. வந்திருந்தவர்களும் கொடுத்த கூலிக்கு இதுவரை இருந்ததே போதும் என்று எழுந்து செல்ல ஆரம்பித்துவிடுகின்றனர். இப்படித்தான், பாஜகவின் தேசியத் தலைவர்கள் முதல் அதிமுக கூட்டணியில் உள்ள பெரும்பகுதியான தலைவர்களின் பிரச்சாரக் கூட்டங்கள் காலிச் சேர்களால் அலங்கரிக்கப்படுகின்றன.இதற்கு மத்தியில் மதுரை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக புதுகை பூபாளம், நாகர்கோவில் முரசு, வேலூர் சாரல் உள்ளிட்ட கலைக்குழுக்கள் மதுரைத்தொகுதி வாக்காளர்களை சந்தித்து வருகின்றன.


இக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் இலக்கிய ஆளுமைகளாகவும், தேர்ந்த அரசியல் அறிவு பெற்றவர்களாகவும் இருப்பதால் வாக்காளர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து மிக நேர்த்தியான முறையில் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.புதுகை பூபாளம் க.பிரகதீஸ்வரன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளராகவும், செந்தில், தவில் விநாயகம் மாநிலக்குழு உறுப்பினர்களாகவும் உள்ளனர். இதே போல முரசு ஆனந்த் மாநிலக்குழு உறுப்பினராக உள்ளார். வேலூர் சாரல் குழுவினரும் தமுஎகசவில் மாவட்டப் பொறுப்புக்களில் உள்ளனர். இவர்களின் நிகழ்ச்சிகளுக்கு வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. நிகழ்ச்சி தொடங்கும்போது சிறிய அளவில் இருக்கும் கூட்டம் இவர்களின் மேடை ஆளுமையால் மெல்ல, மெல்ல அதிகரித்து சிறிய ஊர்களிலும் பலநூறு பேரை மேடைக்கு முன்பாக இழுத்து வந்துவிடுகிறது. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை எளிய சொற்களாலும், விழிப்புணர்வுப் பாடல்களாலும், மிக நேர்த்தியான உடல் மொழியினாலும் எளிதில் மக்களிடம் கடத்தி விடுகின்றனர்.நீட் தேர்வு, ஸ்டெர்லைட், பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, ராணுவத்தை தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக தவறாக பயன்படுத்தும் முறை உள்ளிட்ட பாஜக மோடி அரசின் பல்வேறு மோசடிகளை உரித்துத் தொங்க விடுகின்றனர். மோடியின் அடிமையாகச் செயல்படும் ஈபிஎஸ், ஓபிஎஸ் கூடாரத்தால் தமிழகம் எந்தளவு வஞ்சிக்கப்படுகிறது என்பதை லாவகமாக எடுத்து வைக்கின்றனர். இந்த கலைநிகழ்ச்சிகள் தீவிரமான அதிமுக, பாஜக கட்சியினரையே யோசிக்க வைக்கிறது. மேற்படி கலை நிகழ்ச்சிகள் வாக்காளர்களை பெருமளவுக்கு கவ்விப் பிடித்து விழிப்படையச் செய்கிறது என்றால் அது மிகையில்லை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமைக்குரிய மதுரை. இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் போற்றி வளர்த்த மண் மதுரை. மதுரை மக்களின் மரபணுவிலேயே கலை ரசனை ஊறிக்கிடக்கிறது. பூபாளம், முரசு, சாரல் உள்ளிட்ட குழுக்களின் அரசியல் அலப்பரைகள் எதிர்க்கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனின் வெற்றிக்கு கட்டியம் கூறுகிறது.