tamilnadu

img

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

நாகர்கோவில், ஜூன் 30 ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பிரின்ஸ் பயஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது : கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட  உமா, க/பெ.செந்தில் குமார், என்பவருக்கு பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 25ஆவது வாரத்தில், குறை மாத குழந்தை 750  கிராம் எடையுடன் 2023 மார்ச் 20  அன்று ஆண் குழந்தை  பிறந்தது. மூச்சு திணறல் மற்றும் மிக எடை குறைவு, குறைமாதத்தில் பிறந்ததால் குழந்தை கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் (ஆசாரிப்பள்ளம்) பச்சிளம் குழந்தைகள் தீவிர நல சிகிச்சை பிரிவில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. அக்குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு நுரையீரல் வளர்ச்சிக்கான சர்ஃபாக்டண்ட் என்னும் விலையுயர்ந்த மருந்து செலுத்தப்பட்டது. தொடர்ச்சியாக 5 நாட்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. குறை மாதத்தினால் ஏற்படும் இரத்தசோகைக்காக இரத்தமும் செலுத்தப்பட்டது. குழந்தைக்கு இரத்தத்தில் கிருமி அளவு அதிகமாக இருந்ததால் உரிய ஆண்டிபயாடிக் மருந்துகள் தொடர்ச்சியாக செலுத்தப்பட்டது.

மேலும் குழந்தைக்கு செயற்கை சுவாச கருவியின் மூலம் சுவாசம் கொடுப்பது நிறுத்தப்பட்டு ஆக்சிஜன் வழங்கப்பட்டது. குழந்தையின் நிலை படிப்படியாக முன்னேறி ஆக்சிஜன் இல்லாமல் மூச்சு குழாய் துவாரம் வழியாக தானாக சுவாசிக்கத் தொடங்கியது மற்றும் உணவுக்குழாய் மூலம் பால் எடுத்துக் கொள்ள தொடங்கியது. உடல் வெப்பத்திற்காக கங்காரு மதர் கேர் (KMC) நாள்தோறும் அம்மாவின் மூலம் கொடுக்கப்பட்டது. கண் விழித்திரை இரத்த நாளங்கள் சிறப்பு கண் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு அதன் வளர்ச்சிக்கான மருந்தும் அளிக்கப்பட்டது. குழந்தையின் உடல் நிலை மற்றும் எடை படிப்படியாக முன்னேறி பிறந்த 60ஆவது நாள் 1.10 கிலோ எடையுடன் ஜூன் 20 அன்று  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. மேலும் தொடர் சிகிச்சைக்காக பச்சிளம் குழந்தைகள் தீவிர நல சிகிச்சை பிரிவில் சிறப்பு சிகிச்சைஅளிக்கப்பட்டது. இவ்வாறு மருத்துவக்கல்லூரி முதல்வர்  கூறினார்.  சிகிச்சையளித்த மரு. ரமேஷ்குமார்  மற்றும் மருத்துவ குழுவினரை பாராட்டினார்.