tamilnadu

img

மும்பை குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தைப்புலியை வனத்துறையினர் பிடித்தனர்

மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை வனத்துறையினர் பிடித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் அந்தேரி, மரோல் விஜய் நகர் பகுதியில் உட்லேண்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 8 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பு கட்டிடம் ஆரேகாலனி எல்லை சுவரில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் தான் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை 10 மணியளவில் விஜய் நகர் பகுதிக்குள் சிறுத்தைப்புலி புகுந்தது. அந்த நேரத்தில் உட்லேண்ட் கட்டிடத்தில் 5-வது மாடியில் வசித்து வரும் பிரமோத் என்பவர் தரை தளத்தில் நிறுத்தியிருந்த தனது காரை எடுக்கச்சென்றார். அப்போது காருக்கு அடியில் சிறுத்தைப்புலி ஒன்று படுத்து இருப்பதை அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.


தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் குடியிருப்புவாசிகளை கதவை பூட்டிவிட்டு வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரித்தனர். பின்னர் கட்டிடத்தின் தரை தளத்தில் இருந்து சிறுத்தைப்புலி தப்பிவிடாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதையடுத்து சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு வனத்துறையினர் சிறுத்தைப்புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் சிறுத்தைப்புலியை வேன் மூலம் சஞ்சய் காந்தி தேசிய பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.


மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சிறுத்தைப்புலி காட்டில் கொண்டு விடப்படும் என வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளனர்.