tamilnadu

img

ஓட்டல் ஊழியர் சாவில் சந்தேகம்: மனைவி புகார்

கடலூர், ஜன. 13- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் கள்ளப்புலியூரைச் சேர்ந்தவர் பா.தியாகராஜன் (48). இவர் கடலூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆனந்தபவன் உணவகத்தில் வேலை செய்து வந்தார். இதனால் அந்த உணவகத்திற்கான அறையிலேயே தங்கியிருந்தார். கடந்த 10ஆம் தேதியன்று பணி முடித்து விட்டு இரவில் அறையில் தூங்கியவர் மறுநாள் காலையில் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து, சக ஊழியர்கள் அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அவரது மனைவி கவிதாவிற்கு தெரிவிக்கப்பட்டது. அவர் சனிக்கிழமையன்று திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையத்தில் தனது கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தியாகராஜன் இறப்பிற்கு உரிய நியாயம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து துணை கண்காணிப்பாளர் க.சாந்தி முன்னிலையில் உணவக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு எட்டப்பட்டு தியாகராஜனின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் உணவக உரிமையாளர் சார்பில் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாதவன் கூறினார். இந்த உணவகத்தில் தொழிலாளர் நலச்சட்டத்தில் உள்ளபடி பணி பாதுகாப்பு, பிஎப், கிராஜூட்டி உள்ளிட்டவைகள் அமல்படுத்தப்படுவது இல்லை என சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன் குற்றம் சாட்டியுள்ளார்.