tamilnadu

img

தலித் சிறுவர்களை கையால் மலம் அள்ள வைத்து சித்ரவதை.... நடவடிக்கை எடுக்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்....

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் கிராமத்தில் தலித் பகுதியைச் சேர்ந்தசிறுவர்கள் ஐந்து பேரை சாதி ஆதிக் கத்தைச் சேர்ந்த சிலர் கையால் மலம்அள்ளவைத்து சித்ரவதை செய்துள்ளனர். 

தகவலறிந்த தீண்டாமை ஒழிப்புமுன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.செல்லதுரை, மாவட்டச் செயலாளர் எம்.கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழுஉறுப்பினர்கள் எஸ்.அகஸ்டின், எஸ்.பி.டி.ராஜாங்கம் ஆகியோர் நேரில் சென்று தலித் பகுதி மக்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது:“எங்கள் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் பிரதீப்(13), அரவிந்த்(15), தினேஷ்(15), சிம்பு(13), சஞ்சய்(18)ஆகிய ஐந்து மாணவர்களும் அப்பகுதியிலுள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில் வழக்கம்போல் திறந்த வெளியில் மலம் கழிக்கச் சென்றுள்ளனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த சாதி ஆதிக்க வகுப்பைச் சேர்ந்தசிலர், மேற்கண்ட சிறுவர்களை அப்பகுதி முழுவதும் உள்ள மலத்தை கோணிச் சாக்கில் கையால் அள்ள வைத்து, வேறு பகுதியில் கொட்ட வைத்து சித்ரவதை செய்துள்ளனர். அவர்கள் மறுத்தபோது, அடித்து துன்புறுத்தி மனிதகுலமே வெட்கி தலைகுனியக்கூடிய செயலில் ஈடுபடுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதாக தெரிவித்தனர். 

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் அப்பகுதிக்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த அநாகரிக செயலில் ஈடுபட்ட சாதிஆதிக்கத்தைச் சேர்ந்த ஆறு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலித் பகுதி சிறுவனின் தாய் சித்ரா புகார்அளித்ததை தொடர்ந்து அபினேஷ்(21),சிலம்பரசன்(22), செல்வகுமார்(22) ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், இத்தகைய அநாகரிகமான செயலில் மொத்தம் ஆறு பேர்ஈடுபட்டுள்ளதாகவும், அதில் 3 பேரைமட்டுமே போலீசார் கைது செய்துள்ளனர். மீதியுள்ள 3 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்தசம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கழிப்பறை வசதிஅமைத்துத் தர வேண்டும். மேலும்,அப்பகுதியின் இருதரப்பு மக்களிடையே பேருந்து நிறுத்த இடத்தில் அடிக்கடி மோதல் ஏற்படுவதால் நிழற்குடை அமைத்து பொதுவாக பயன் படுத்தும் விதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்பகுதியில் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் சிவன் கோவிலில் தலித் மக்களும் வழிபாடு செய்ய உத்தரவிட வேண்டும். அப்பகுதியில் மோதல் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;