tamilnadu

img

2018-19 பட்ஜெட்டை விட 63 பணக்காரர்களின் சொத்து மதிப்பு அதிகம் 

இந்தியாவில் கடந்த 2018-19 ம் ஆண்டு நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 63 இந்திய பணக்காரர்களிடம் அதிக சொத்து உள்ளது என்ற தகவல் ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. 
உலக பொருளாதார மன்றத்தின் 50வது ஆண்டு கூட்டம் வரும் 21 முதல் 24ம் தேதி வரை சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ளது.  இதையொட்டி  ஆக்ஸ்பாம் , டைம் டூ கேர் எனும் தலைப்பில் நடத்திய  ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. 
உலக மக்கள் தொகையில் 60 சதவீத அடித்தட்டு மக்களுக்கு ( 460 கோடி ) தேவைப்படும் நிதியைக் காட்டிலும், வெறும் 2 ஆயிரத்து 153 பணக்காரர்கள் அதிக அளவிலான சொத்துகளை வைத்திருக்கின்றனர்.   இந்திய மக்கள் தொகையில் 1 சதவீதம் அளவுக்கு இருக்கும் பணக்காரர்கள், 70 சதவீத ஏழைகளுக்கு (95.3 கோடி பேர்) தேவையானதை விட  அதிக சொத்துகளை வைத்துள்ளனர். இந்தியாவில் 2018-19ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட, 63 பணக்காரர்கள் அதிக சொத்துகளை வைத்திருக்கின்றனர். ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் உயர் தலைமை நிர்வாக அதிகாரி சம்பாதிப்பதை சம்பாதிக்க ஒரு  வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு  22,277 ஆண்டுகள் ஆகும்.
உலகில்  பெண்கள் மற்றும் சிறுமிகள் ஒவ்வொரு நாளும் 1250 கோடி  மணிநேரம் ஊதியம் பெறாத பராமரிப்புப் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இது உலகளாவிய பொருளாதாரத்தில்  ஆண்டுக்கு குறைந்தது 10.8 டிரில்லியன் அமெரிக்க டாலர் பங்களிப்பு ஆகும்.  இது உலக தொழில்நுட்பத் துறையின் மூன்று மடங்கு அதிகமாகும்.
இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஒவ்வொரு நாளும் 32,6 கோடி  மணிநேரம் ஊதியம் பெறாத பராமரிப்புப் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இது இந்திய பொருளாதாரத்தில் ஆண்டுக்கு குறைந்தது ரூ.19 லட்சம் கோடி  ஆகும். இது 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் முழு கல்வி வரவு செலவுத் திட்டத்தின் 20 மடங்கு ஆகும் ( 93,000 கோடி ரூபாய்). உலகின் 22 பணக்கார ஆண்களுக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எல்லா பெண்களையும் விட அதிக செல்வம் உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் பணக்காரர்களில் ஒரு சதவிகிதம் பேர்  தங்கள் செல்வத்திற்கு வெறும் 0.5 சதவீத  கூடுதல் வரி செலுத்தினால்  முதியவர்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் 11.7 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க தேவையான முதலீட்டிற்கு சமம் ஆகும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

;