tamilnadu

img

மார்க்சியமே வழிகாட்டி என ஏற்றுக்கொண்ட மீரட் ஆவணம் - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும்

இந்த சமயத்தில், முரண்பாடுகள் களையப்பட்டு ஒரு ஒருங்கிணைந்த அகில இந்திய மையத்தை உருவாக்கிக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் தொடர்பாளர்களுக்கும் இடையில் முக்கியமான பல விவாதங்கள் நடந்தன. இந்த விவாதங்களின் விளைவாக, 1936 ஜனவரியில் மீரட்டில் நடைபெற்ற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் இரண்டாவது தேசிய மாநாட்டில் ஒரு விரிவான ஆவணம் நிறைவேற்றப்பட்டது. அந்த ஆவணம்தான் மீரட் ஆவணம் என்று அன்றைக்கு பிரபலமாக பேசப்பட்டது. அந்த ஆவணம் இவ்வாறு கூறுகிறது: “காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியானது இரண்டு மிகப்பெரிய தேசிய போராட்டங்களின் அனுபவங்களிலிருந்து உருவானது. கடைசியாக நடந்த ஒத்துழையாமை இயக்கத்தின் நிறைவில் சில காங்கிரஸ்காரர்களால் இது உருவாக்கப்பட்டது. தேசிய இயக்கத்திற்கு ஒரு புதிய பரிணாமத்தை அளிக்க வேண்டியது அவசியம் என்று இந்த காங்கிரசார் நம்புகிறார்கள். தேசிய இயக்கத்தின் இலக்குகளை மறுவரையறை செய்ய வேண்டிய தேவை உள்ளது; அது செயல்படும் நடைமுறைகளை மாற்ற வேண்டியுள்ளது. இந்த பாதையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முன்முயற்சி, நமது நிகழ்கால சமூகத்தின் சக்திகளைப் பற்றி தத்துவார்த்த ரீதியாக ஆய்வுசெய்து உள்வாங்கிக் கொண்டவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. காங்கிரஸ் காரர்களாக இருக்கிற இவர்கள், இயல்பாகவே, இந்தப் பாதையில் செல்ல முற்பட்டு, மார்க்சியம்-சோசலிசத்தை ஏற்றுக்கொண்டவர்கள். இது இயல்பான ஒன்றே; ஏனென்றால், இந்த அமைப்பானது இன்றைய சூழலின் தேவைகளை எதிர்கொள்வதற்காக “ஒரு மந்திரச் சொல்லை உயர்த்திப்பிடிக்கிறது: “சோசலிஸ்ட். ‘சோசலிஸ்ட்’ என்ற பதத்திற்கு முன்பு காங்கிரஸ் என்ற பதத்தையும் இணைக்கிறோம்; இப்படி இணைப்பது, இந்த இயக்கம் அதிலிருந்து துவங்கியது என்பதை குறிப்பதற்காக மட்டுமே - தேசிய இயக்கத்தின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை ஒருங்கிணைக்கும் விதமாகவே இந்தப் பெயர் சூட்டப்படுகிறது. 

“நாட்டில் சோசலிச சக்திகள் ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அந்த சக்திகள் காங்கிரசுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் இருந்தன. தேசிய இயக்கத்தில் எந்த செல்வாக்கும் இல்லாமல் இருந்தன. எனவே, ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருந்த குழுக்களோடு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி எனும் இயக்கம் உருவாகியிருக்கிறது. இந்த இரண்டு சக்திகளுக்கும் இடையிலான இணைப்பு இப்போது தேவைப்படுகிறது. சரியான மற்றும் உணர்வுப்பூர்வமான உத்திகளை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் மேற்கொள்வது, அதன் மூலமாக பின்னர் ஒரு இணைப்பை உருவாக்கிக் கொள்வது என முடிவெடுக்கப்படுகிறது.

“நமது முன்னால் உள்ள உடனடி இலக்கு என்னவென்றால், தேசிய இயக்கத்தை ஒரு உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக வளர்த்தெடுப்பதுதான்; அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவது மற்றும் உள்நாட்டில் நடைமுறையில் இருக்கிற சுரண்டல் சமூக அமைப்பு முறையிலிருந்தும் விடுதலை பெறுவது என்ற இலக்குடன் கூடிய இயக்கமாக வளர்த்தெடுப்பதுதான். இதற்காக, இந்த இயக்கம் தற்போதைய நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ தலைமையிடமிருந்து பிரிந்து வரவேண்டியது அவசியமாகிறது; இந்த இயக்கத்தை புரட்சிகர சோசலிச தலைமையின்கீழ் கொண்டுவர வேண்டியது அவசியமாகிறது. இந்த இலக்கினை, காங்கிரசுக்குள்ளேயே அணிதிரட்டப்பட்ட முறையில் செயல்படுகிற மார்க்சிய - சோசலிஸ்ட்டுகளின் குழுவால் மட்டுமே செய்துமுடிக்க முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தற்போதைய சூழலில், நமது கட்சி மட்டுமே இந்த இலக்கினை நிறைவேற்ற முடியும். காங்கிரசுக்குள் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் வலுப்பெறுவதும் தெளிவுபெறுவதும் அதற்குள் நமது கட்சியின் பலமும் செயல்பாடும் பெரிய அளவிற்கு அதிகரிப்பதைப் பொறுத்தது. கட்சியின் இந்த இலக்கை நிறைவேற்றுவதற்காக, நாட்டில் இயங்கும் இதர பல ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை நாம் ஒருங்கிணைக்க வேண்டியதும் அவசியமாகிறது. 

“இந்த இலக்கில் உறுதியுடன் நின்று காங்கிரஸ் மேடைகளில் நமது கட்சி ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைபாட்டை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். காங்கிரஸ் முன்பு முழுமையான சோசலிசத் திட்டத்தை முன்வைக்கிற ஒரு தவறை நாம் செய்துவிடக்கூடாது. ஏகாதிபத்திய எதிர்ப்பு திட்டம் என்பது, தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கீழ் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்த மக்களை இந்த இயக்கத்தில் அணிதிரட்டும் விதமாக செழுமைப்படுத்தப்பட வேண்டும்.  “ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற சிந்தனைகளை நமது கட்சி அதன் தத்துவார்த்த அடிப்படைகளிலிருந்து அணுக வேண்டும்; சாத்தியமான அளவிற்கு தேவையான விதத்தில் அதற்கான உத்திகளை பின்பற்ற வேண்டும். பல்வேறு நிகழ்வுகளின் சூழலில் சகிப்பின்மையோடு அல்லது பொறுமையில்லாமல் செயல்பட்டு நாம் எக்காரணம் கொண்டும் தனிமைப்பட்டுவிடக்கூடாது. காங்கிரஸ் கட்சியின் தேசக்கட்டுமானம் தொடர்பான திட்டத்தை தடுத்துநிறுத்தவோ அதில் தலையீடு செய்யவோ கூடாது. மாறாக விஞ்ஞானப்பூர்வமாக அந்த நடவடிக்கைகளை விமர்சிக்க வேண்டும்; அம்பலப்படுத்த வேண்டும்.

“காங்கிரசில் நடக்கும் தேர்தல்களில், அதன் கமிட்டிகளையோ அல்லது அலுவலகங்களையோ எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்தக்கூடாது; அதேபோல இந்த நோக்கத்திற்காக அரசியல் ரீதியாக விரும்பத்தகாத குழுக்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவும் கூடாது. “இது, நமது கட்சி தனது சொந்த மேடையில் சோசலிச திட்டத்தை பிரச்சாரம் செய்யக்கூடாது என்று பொருள்படாது. நமது சொந்த மேடையில் கட்டாயம் சோசலிசப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். அதை இன்னும் அமைப்பு ரீதியாகவும், தீவிரமாகவும் செய்ய வேண்டும்.

“நமது கட்சியின் சொந்தத் திட்டம் என்பது அவசியம். ஒரு மார்க்சிய திட்டமாக இருக்க வேண்டும். அப்போதுதான் கட்சி தனது இலக்கை நிறைவேற்றுவதை நோக்கி முன்னேற முடியும். ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் தங்களது இலக்கை அடைய மார்க்சியம் மட்டுமே வழிகாட்ட முடியும். எனவே கட்சி உறுப்பினர்கள் அவசியம் புரட்சிக்கான வழி என்ன என்பதை முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும்; வர்க்கப்போராட்டத்தின் தத்துவார்த்த மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்; அரசு என்ன செய்யும், அதன் இயல்பு என்ன என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்; அந்த அடிப்படையில் சோசலிச சமூகத்தை நோக்கி முன்செல்லும் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்”.

(தொடரும்)

;