tamilnadu

img

சீனிவாசராவின் அறிவுக் கண்ணை அகலத் திறந்த ஆசான்...

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, லெனின் எழுதிய ஏகாதிபத்தியம், அரசும் புரட்சியும் ஆகிய புத்தகங்களை சீனிவாசராவுக்கு அமீர் ஹைதர்கான் கொடுத்து படிக்கச் சொன்னார். இப்புத்தகங்களை படித்த சீனிவாசராவ் அமீர்ஹைதர்கானோடு நீண்ட விவாதத்தை மேற்கொண்டார். பின்பு மார்க்சிய- லெனினிய கோட்பாட்டை அவர் ஏற்றுக் கொண்டார். தனது அறிவுக்கண்ணை அகலத்திறந்த ஆசான் அமீர் ஹைதர்கான் என்று பின்பு சீனிவாசராவே குறிப்பிட்டுள்ளார்.

தென் கன்னடத்தில் பிறந்த பி.சீனிவாசராவ் 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டு கொதிப்படைந்து கல்லூரிப் படிப்பை உதறிவிட்டு தேசிய இயக்கத்தில் இணைந்தார். இதற்காக அவர் வீட்டைவிட்டு விரட்டப்பட்டார். ஊர் ஊராக சுற்றி விடுதலை இயக்கத்தில் பங்கேற்றார். பின்னர் சிங்கப்பூர் சென்று ஒரு உணவுக்கூடத்தை நடத்தி வந்தார். பிறகு 1930ல் பி.சீனிவாசராவ் இந்தியா திரும்பினார். கான்பூர் சதி வழக்கு, சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டம், மீரட் சதி வழக்கு போன்றவை தேசிய இயக்கத்தில் இவரை ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்தது.

1930களில் சென்னை நகரில் நடந்த பல போராட்டங்களில் பி.சீனிவாசராவ் தொண்டனாக பங்கேற்றார். அப்போது காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளானதோடு கைதும் செய்யப்பட்டார். 1932ல் அந்நிய துணிக்கடைகள் முன்பு நாள்தோறும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் ஒரு நாள் தவறாமல் சீனிவாசராவ் கலந்து கொண்டார். பிரிட்டிஷ் போலீசார் பலமுறை சீனிவாசராவை நையப்புடைத்துள்ளனர். ஆனாலும் அடுத்த நாள் போராட்டக் களத்தில் நிற்பார். இப்படி ஒரு நாள் மிகக் கொடூரத் தாக்குதல் அவர் மீது நடத்தப்பட்டது. துப்பாக்கிக் கட்டையால் அவரது முகத்திலும் புற முதுகிலும் குத்தினர். மயங்கி விழுந்தவரை விடாமல் பூட்ஸ் கால்களால் மிதித்தனர். சுயநினைவை இழந்த நிலையில் சீனிவாசராவை சாக்கடையில் வீசியெறிந்தனர். அப்போது பிரபல ஆங்கில பத்திரிகையொன்று காங்கிரஸ் தொண்டர் பி.எஸ்.சீனிவாசராவ், போலீசாரின் தாக்குதலில் இறந்துவிட்டார் என்று செய்தி வெளியிட்டது. ஆனால் சிலர் அவரை காப்பாற்றி சிகிச்சை அளித்தனர். இதில் இருந்து மீண்ட சீனிவாசராவ் அடுத்த மாதமே அன்னியத் துணிக்கடை மறியலில் கைதானார். 6 மாத காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையிலிருக்கும் போது சுபாஷ் சந்திர போஸ், முகுந்தலால் சர்க்கார், அமீர் ஹைதர்கான் ஆகியோரை சந்தித்து பேசினார்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, லெனின் எழுதிய ஏகாதிபத்தியம், அரசும் புரட்சியும் ஆகிய புத்தகங்களை சீனிவாசராவுக்கு அமீர் ஹைதர்கான் கொடுத்து படிக்கச் சொன்னார். இப்புத்தகங்களை படித்த சீனிவாசராவ் அமீர்ஹைதர்கானோடு நீண்ட விவாதத்தை மேற்கொண்டார். பின்பு மார்க்சிய- லெனினிய கோட்பாட்டை அவர் ஏற்றுக் கொண்டார். தனது அறிவுக்கண்ணை அகலத்திறந்த ஆசான் அமீர் ஹைதர்கான் என்று பின்பு சீனிவாசராவே குறிப்பிட்டுள்ளார். மீண்டும் ஒரு முறை சேலம் சிறையில் அமீர் ஹைதர்கானை சீனிவாசராவ் சந்தித்தார். சரியான கம்யூனிசப் பாதைக்கு சீனிவாசராவை அழைத்து வந்த பெருமை அமீர் ஹைதர்கானையே சாரும். சிறையிலிருந்து வெளிவந்த பின் சீனிவாசராவ் சுந்தரய்யாவுடன் இணைந்து தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தை உருவாக்க பல நிறுவனங்களிலும் தொழிலாளர் யூனியனை அமைத்தனர்.

1934ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டதால் சென்னை மாகாணத்தில் தோழர்கள் காட்டே, பி.ராமமூர்த்தி, ஜீவா, சி.எஸ்.சுப்ரமணியம், ஏ.எஸ்.கே.அய்யங்கார், கே.முருகேசன், வி.கருப்பையா ஆகியோரோடு பி.சீனிவாசராவ் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியாக செயல்பட்டார். 1936ல் சேலத்தில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டில் அதன் முதல் செயலாளராக தோழர் பி.சீனிவாசராவ் தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தில் கம்யூனிச இயக்க ஸ்தாபனத்தை உருவாக்கிய தோழர் பி.எஸ்.ஆர். என்று அன்போடு தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மகத்தான தலைவரை உருவாக்கிக் கொடுத்தவர் அமீர் ஹைதர்கான் என்பதை பார்க்கும் போது உண்மையில் அமீர் ஹைதர்கானின் ஆளுமை நம்மை பிரமிக்க வைக்கிறது. தேடித் தேடி ஊழியர்களை, தலைவர்களை, உருவாக்கிய மிகப்பெரும் அறிவுஜீவியான அவர் பிறரை, தன்னை நோக்கி ஈர்க்கும் ஆற்றலையும் பெற்றிருந்தார் என்பது நமக்கு வியப்பாகவே இருக்கிறது. 

இத்தகைய பெருமை மிகுந்த அமீர் ஹைதர்கான் 1900 ஆண்டில் ராவல்பிண்டிக்கு அருகிலுள்ள (தற்போது பாகிஸ்தான் நாட்டில் உள்ளது) கல்வார் மாவட்டத்தில் கலியன் இலாரியன் என்ற கிராமத்தில் பிறந்தார். குடும்ப வறுமையினால் சிறு வயதிலேயே ஹைதர்கான் தனது ஊரைவிட்டு புறப்பட்டு சென்றார். அவரது ஊருக்கு அருகிலுள்ள மவுலாதாத் என்பவர் மூலம் ஜெர்மன் கப்பல் ஒன்றில் சிறு அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். 1915 முதல் 1916 வரை கப்பல் மாலுமியாக பணியாற்றினார். 1918ல் மாலுமியாக டோக்கியோ, ஹாங்காங் துறைமுகங்களுக்கு சென்றார். அதே ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க பிரஜை ஆவதற்காகப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். பின்னர் அமெரிக்க போக்குவரத்து சர்வீசில் பணியாற்றினார். 1921ல் நியூயார்க் நீதிபதி முன்பு அமெரிக்க பிரஜை எனக் கருதப்படுவார் எனும் உரிமை பெற்றார்.

1921ல் நியூயார்க் மாகாணத்தில் ஒலியன் என்ற இடத்தில் ரயில்வே தொழிற்சாலையில் கான் பணிபுரிந்தார். விமான ஓட்டியாகப் பயிற்சிபெற்று லைசென்சும் பெற்றார் அமீர்ஹைதர்கான். டெட்ராய்ட் நகரில் உள்ள பாக்கார்ட் மோட்டார் கம்பெனியில் சிறிது காலம் வேலை செய்தார். அமெரிக்காவில் இந்துஸ்தான் கதார் கட்சியுடன் தொடர்பு கொண்டார். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. 1926 ஜனவரியில் கதார் கட்சியினர் 5 பேரும் தோழர் அமீர் ஹைதர்கானும் மாஸ்கோவிலுள்ள கீழைநாட்டு பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெறுவதற்காக அனுப்பப்பட்டனர். ஹைதர்கான் 1928ல் இந்தியா திரும்பினார். பம்பாயில் சவுரி என்ற இடத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். கம்யூனிஸ்ட் அகிலத்திற்கும் இந்திய கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையே ரகசியத் தொடர்புகளுக்கும் கடிதப் போக்குவரத்திற்கும் அமீர் ஹைதர்கான் ஏற்பாடு செய்தார்.

...தொடரும்

;