tamilnadu

img

பேராசிரியர் நா.வானமாமலை - எஸ்.ஏ.பெருமாள்

கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 9

ஒரு காலத்தில் உ.வே.சாமிநாதய்யர் பண்டைய இலக்கியங்களைத் தேடிக் கண்டுபிடித்து நூல்களாக்கி வெளியிட்டுத் தமிழுக்குப் பெருமை சேர்த்தார். அதேபோல் நாட்டார் வழக்காற்றியலுக்கு பெருமைசேர்த்தவர் பேரா.நா.வானமாமலை ஆவார். தமிழகமெங்கும் அலைந்து திரிந்து நாட்டார் பாடல்களை சேகரித்து பிரசுரித்தார். இக்கதைப் பாடல்களை அவர் தொகுக்கும்போது அவற்றின் குறைகளையும் கொச்சையான சொற்களையும் நீக்கினார். பாடல்கள் உலவும் ஊர்கள், பாடல்களை சேகரித்துத் தந்தவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டார். பாடல்களுக்கான விளக்கக்  குறிப்புகளையும் இணைத்துத் தந்தார். பேராசிரியரின் பெரு முயற்சி இல்லாவிட்டால் அவை நமக்குக் கிடைத்திராது. முத்துப்பட்டன் கதை, வீணாதி வீணன் கதை, ஐவர் ராசாக்கள் கதை, மாலையம்மன் கதை, தாலாட்டு, வீரபாண்டியக் கட்டபொம்மு கதை, கண்ணடியன் படை போர், மூன்றுலகு கொண்ட அம்மன் கதை, ராமப்பையன் அம்மானை, வெட்டும் பெருமான் கதை, ரவிக்குட்டி பிள்ளை போர், சிவகங்கை அம்மானை, சிவகங்கைக் கும்மி, பூலித்தேவன் சிந்து, காத்தவராயன் கதை, கான்சாகிப் சண்டை ஆகியவை நா.வா.தொகுத்தவற்றில் முக்கியமானவையாகும். இப்பாடல்களின் முதல் தொகுப்பு 1960ல் “தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்” என்ற பெயரில் வெளியானது. உ.வே.சா.வின் தேடல்காலத்தில் அவருக்கு ஏற்பட்ட சுவாரசியங்களைப் போலவே நா.வா.வுக்கும் பல நேர்வுகள் ஏற்பட்டன. உதாரணமாக தோழர் ஆர்.நல்லகண்ணு யாரிடமோ கண்டுபிடித்து ஐவர் ராசாக்கள் கதை என்ற ஏட்டுப் பிரதியை நா.வா.விடம் கொடுத்தார். சுமார் எண்பதுஏடுகளில் கரையான், பூச்சிகள் அரித்த துவாரங்களோடு அவை இருந்தன. அதில் குலசேகர பாண்டியனின் பிறப்பு வளர்ப்பு மட்டுமே வில்லுப்பாட்டு வடிவில் இருந்தது.

அதேபோல் 1828ல் வெளியிடப்பட்ட நூல்கள் சிலவும் கிடைத்தன. அவற்றில் காணாமல் போன பல பக்கங்களைத் தேடிக்கண்டுபிடித்தார் நாவா. இத்துறையில் பிரிட்டிஷ் அறிஞர்கள் எட்கார்  தர்ஸ்டன் போன்ற சிலர் ஆய்வு செய்து நூல்களை வெளியிட்டுள்ளனர். அதன்பின் தமிழில் பண்டித நடேச சாஸ்திரிகள் இதில் அக்கறை காட்டினார். கி.வா.ஜெகநாதன், பெ.தூரன், மு.அருணாசலம் போன்றோரும் தேடலில் ஈடுபட்டனர். ஆயினும் நா.வா.வின் உழைப்பும் அதனால் கிடைத்த பலன்களும் அதிகம். அக்காலத்தில் அவரை நடமாடும் பல்கலைக்கழகம் என்று அழைத்தோம். நா.வா. 17.12.1917ல் நான்குநேரியில் பிறந்தார். தனது கல்வியை நான்குநேரியிலும் ஏர்வாடியிலும் துவக்கி நெல்லையில் இண்டர் மீடியட்டும் பின்பு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பும் படித்தார். அத்தை மகள் சீதையம்மாளை திருமணம் செய்து கொண்டார். நான்குநேரி, கோவில்பட்டி, தென்காசி, மதுராந்தகம் ஆகிய ஊர்களில் ஆசிரியராய் பணியாற்றினார். இக்காலத்தில் சீதையம்மாள் காலமானதால் பத்மாவதியம்மாளை திருமணம் செய்து கொண்டார்.

நா.வா. தனது கல்லூரிக் காலத்திலேயே கம்யூனிஸ்ட் ஆனார். தினசரி பல மணி நேரம் நூல்களை வாசிக்கும் அவர் மார்க்சிய-லெனினிய நூல்களையும், கம்யூனிசக் கோட்பாடுகளையும் கற்றுத் தேர்ந்தார். தனது சொந்த ஊரில் இளைஞர் சங்கம், விவசாயிகள் சங்கம், கட்சிக் கிளையை தோற்றுவித்தார். தோழர்கள் ஆர்.நல்லகண்ணு, ப.மாணிக்கம், வி.எஸ்.காந்தி, என்.டி.வானமாமலை, சு.பாலவிநாயகம் ஆகியோர் இவரது சகதோழர்களாக இருந்தனர். மார்க்சிய வகுப்புகள் நடத்த பல ஊர்களுக்கும் சென்று எளிய முறையில் போதித்து வந்தார். இவரது வகுப்புகளைக் கேட்டவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகினர். நா.வா.ஒரு பதிப்பகத்தை துவக்கி நூல்களை வெளியிட்டார். தோழர்கள் தொ.மு.சி.ரகுநாதன், தி.க.சிவசங்கரன் இவருடன் நெருக்கமாக இருந்தனர். பதிப்பகத்தோடு டுடோரியல் காலேஜ் துவக்கி பரீட்சைகளில் தோல்வியடைந்த மாணவர்களைத் தேற்றி வெற்றி பெறச் செய்தார். சில ஊர்களில் கிளைகளையும் ஆரம்பித்தார். 1948ல் கம்யூனிஸ்ட்டுகள் மீது அடக்குமுறைக் காலத்தில் நெல்லை சதிவழக்கில் நா.வா.குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். கைது செய்து சிறையிலடைக்கப்பட்டவர் போதுமான சாட்சியம் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார். “ஆராய்ச்சி” என்ற நா.வா.வின் மாத ஏடு பிரபலமானதாகும். பலரை அறிவுஜீவிகளாக மாற்றிய பத்திரிகை இது. என் போன்ற பலரும் வளர ஆராய்ச்சி உதவியது. இதில் வந்த பல ஆய்வுகள் வரலாற்றியல் - இயங்கியல் - தர்க்கவியல் கோட்பாடுகளை உள்ளடக்கியதாகும். அதனால் வாசகர்களின் அறிவை மேம்படுத்தியது. அவர் விட்டுச் சென்ற பணிகளை தோழர்கள் ஆ.சிவசுப்பிரமணியம், தோதாத்ரி, முத்துமோகன் போன்றவர்கள் தொடர்ந்து வருகிறார்கள். புதிய தலைமுறைகள் நா.வா.விட்டுச் சென்ற ஆய்வுப் பணிகளைத் தொடர வேண்டியுள்ளது. 2.2.1980ல் அவரது மூத்தமகன் கிருஷ்ணமூர்த்தி இல்லத்தில் மூளையில் ரத்தக்குழாய் வெடித்ததால் நா.வா.காலமானார்.

;