கடந்த 27-ஆம் தேதி, நாட்டு மக்களுக்கு மிக முக்கிய உரையாற்றப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதை அடுத்து, பகல் 12.26 மணி அளவில், ’மிஷன் சக்தி’ திட்டமான விண்ணில் உள்ள செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தும் ’ஏசாட்’ சோதனை வெற்றி அடைந்ததை தனது உரையில் அறிவித்தார்.
இதனை அடுத்து, நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதுபோன்ற அறிவிப்பை ஒரு பிரதமர் வெளியிடுவது தேர்தல் நடத்தை விதிமுறை மீறலாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்திலேயே ’மிஷன் சக்தி’ ரகசியத்தை மோடி அரசு வெளியிட்டுள்ளது என ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து ப.சிதம்பரம் தன் ட்விட்டர் பதிவில், “விண்வெளிக் கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் பல ஆண்டுகளாக நமக்கு இருந்தது. புத்திசாலி அரசுகள் இந்த ரகசியத்தை காப்பாற்றினார்கள். பாஜக அரசு இந்த ரகசியத்தை வெளியிட்டது துரோகம். மேலும் தேர்தல் நேரத்தில் இந்த ரகசியத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தேர்தல் தோல்வி பயம் தான் காரணம்”. இவ்வாறு பதிவிட்டிருந்தார்.