“2019 மக்களவைத் தேர்தலானது, மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக நாடே திரண்டு நடத்தும் போர்” என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார். மும்பையில், தனது கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகையில் ராஜ் தாக்கரே மேலும் கூறியிருப்பதாவது: கடந்த 2014 முதல் நாடு முழுவதும்14 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால்,பிரதமருக்கு அவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க நேரமில்லை. ஆனால், தன்னை ‘சவுக்கிதார்’ என்று கூறி மோடிவித்தை காட்டுகிறார். 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பொய்யான புகைப்படங்களைக் காட்டி, குஜராத் முன்னேறி இருப்பதாக மோடி கூறினார். நாமும் அதை நம்பி, அந்த தேர்தலில் பாஜக-வை ஆதரித்தோம். ஆனால், மோடி சொன்னது அனைத்தும் மோசடி என்பது வெளிப் பட்டு விட்டது. பாகிஸ்தானிடம் போரிடப் போவதாக சொல்கிறார்கள். அதற்கு பணம் எங்கே உள்ளது? அரசை நடத்துவதற்கே பணமில்லாமல் ரிசர்வ் வங்கியிடம் பிச்சை எடுக்கும் லட்சணத்தில், பாகிஸ்தானுடன் எப்படி போரிட முடியும்? நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் வெறும் தேர்தல் மட்டுமல்ல; இது மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக நாடே திரண்டு நடத்தும் போர். இதில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, வாக்காளர் களுக்கு பாஜக நிச்சயம் லஞ்சம் அளிக்கும். யாரும் அதை மறுக்க வேண்டாம். அது நம்மிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம்தான். ஆனால், பாஜக-வைத் தண்டிக்க வேண்டும் என்பதை மட்டும் மறந்து விடக் கூடாது. இவ்வாறு ராஜ் தாக்கரே பேசியுள்ளார்.