புதுதில்லி:
உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்சாகர்மாவட்டத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த தலித் சிறுமியை, பாலியல் வன்புணர்வு மேற்கொண்டவனின் உறவினர்கள் எரித்துக் கொலை செய்தகொடூரச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் யோகிஆதித்யநாத் முதலமைச்சராக உள்ளார். இங்கு சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொலைகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன.நவம்பர் 17 செவ்வாய்க்கிழமையன்று அந்தச் சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். பின்னர் தீக்காயங்களுடன் அவர் தில்லி, சப்தர்ஜங்க் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு 65 சதவீத அளவிற்கு தீக்காயம் இருந்திருக்கிறது. பின்னர் அன்று மாலை அந்த சிறுமி உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், தலித் சிறுமி ஆகஸ்ட் 14 அன்று ஹரிஷ் என்கிற சைதா என்பவனால்பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாகவும், அவன் மீது இந்தியத்தண்டனைச் சட்டம் 376 ஆவது பிரிவு மற்றும்தலித்/பழங்குடியினர் வன்கொடுமைத் தடைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம் ஆகியவற்றின் உரிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டு அவன் சிறையில் அடைக்கப்
பட்டிருக்கிறான் என்றும், அவனுக்குப் பிணைகிடைக்கவில்லை என்றும் ஆத்திரமடைந்த உறவினர்கள் இக்கொலைபாதக நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.
சம்பவத்தன்று, குற்றம் சாட்டப்பட்டவனின் அத்தையும் மாமாவும் மற்றும்ஐந்து பேருடன் சேர்ந்துகொண்டு, தலித்சிறுமியின் வீட்டிற்குச் சென்று, அச்சிறுமியின்மீது பெட்ரோலை ஊற்றி எரித்திருக்கின்றனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஏழு பேர் மீது முதல் தகவல் அறிக்கைப்பதிவு செய்து, மூன்று பேரை கைது செய்துள்ளனர். (ந.நி.)