புதுதில்லி, ஏப்.5-
மாற்றுக் கருத்து கொண்டவர்களை எதிரிகளாக பாவிப்பது ஆபத்து என்றும்,இந்திய ஜனநாயகத்தின் சாராம்சமே, பன்முகத்தன்மையை போற்றிப் பாதுகாப்பதுதான் என்றும், மோடி - அமித்ஷாவுக்கு, பாஜக மூத்தத் தலைவரான எல்.கே. அத்வானி மறைமுகமாக உபதேசம் செய்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில் அத் வானி கூறியிருப்பதாவது:“பாஜக-வின் நிறுவனர்களில் ஒருவர்என்ற முறையில் கட்சியின் நிறுவன தினத்தை முன்னிட்டு என்னுடைய எண்ணங்களை நாட்டு மக்களோடும், லட்சக்கணக் கன பாஜக ஊழியர்களோடும் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன். அதற்கு முன்னர் 1991 முதல் எனக்கு பேராதரவும், அன்பும் அளித்து வந்த காந்திநகர் தொகுதி மக்களுக்கு எனது நன்றியைத்தெரிவிக்கிறேன்.எனது 14 வயதில் நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்தேன். அப்போது முதல் நாட்டுக்காக பணியாற்றி வருகிறேன். என்னுடைய அரசியல் பயணம் பாரதிய ஜனசங்கம், பாரதிய ஜனதா கட்சி என்று 70 ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த இருஅமைப்புகளின் நிறுவன உறுப்பினர்களில்நானும் ஒருவன் என்பது பெருமைக்குரிய விஷயம். என் வாழ்வில் வழிகாட்டித் தத்துவம் என்பது, ‘முதலில் நாடு, அடுத்து கட்சி, தனிநபர் அதற்குப் பிறகு’ என்பதுதான். இந்தக்கோட்பாட்டின்படிதான் இதுவரை வாழ்ந்திருக்கிறேன். இனியும் தொடருவேன். ஜனநாயகத்தின் சாரம் என்னவெனில் பன்முகத் தன்மைக்கு மதிப்பளிப்பதும், கருத்துச் சுதந்திரமும்தான். பாஜக அதன் துவக்க காலத்தில் இருந்தே அரசியல் ரீதியாக தம்முடன் வேறுபடுபவர்களை எதிரிகளாகக் கருதியதில்லை. அவர்கள் நம்போட்டியாளர்கள் என்றே கருதியிருக்கிறது.
அதேபோல நமது இந்திய தேசியவாதம்என்ற கொள்கையிலும் நம்மோடு உடன் படாதவர்களை ‘தேசத் துரோகிகள்’ என்று ஒருபோதும் கருதியதில்லை. பாஜக இந் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனிநபர் என்ற அளவிலும், அரசியல் ரீதியாகவும் உள்ள சுதந்திரத்தைக் காப்பாற்ற கடமைப்பட்டிருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால், உண்மை, நாட்டுக்கான அர்ப்பணிப்பு, கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் ஜனநாயகம் ஆகியவற்றின் மூலமாகவே கலாச்சார தேசியவாதத்தையும், நல்லாட்சியையும் தரமுடியும் என்பதில் பாஜக எப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கிறது. எமர் ஜென்சி காலத்தில் நடந்த நாயகத் தன்மை வாய்ந்த போராட்டம்தான் மேற்கண்ட அம்சங்களைக் காப்பாற்றியிருக்கிறது.தேர்தல் என்பது ஜனநாயகத் திருவிழாதான். எனினும், தேர்தல் என்பது இந்திய ஜனநாயகத்தின் அனைத்து தரப்பினரும் பங்கெடுக்கும் நேர்மையான சுயபரிசோதனையாக அமைய வேண்டும். அரசியல் கட்சிகள், ஊடகங்கள், தேர்தலைநடத்தும் அமைப்பு இவை எல்லாவற்றுக் கும் மேல் மக்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.” இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.இதனிடையே, பாஜகவின் கொள்கையை அத்வானி மிகத் தெளிவாக விளக்கிஇருக்கிறார்; அத்வானி போன்ற தலைவர்கள் பாஜக-வை வலிமைப்படுத்துவது பெருமையாக இருக்கிறது; தான் பாஜக-வின் தொண்டராக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என்று அத்வானியின் அறிக்கையை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். அதாவது, தன்னை ஓரங்கட்டிய மோடி - அமித்ஷாவை, வெளியில் தெரியாத அளவிற்கு ஊமைக்குத்தாகவே அத் வானி குத்தியுள்ளார் என்றால், பிரதமர் மோடி வலிக்காதது போலவே, சிரித்துச் சமாளித்துள்ளார்.