தட்டிக்கழிக்கிறதா தமிழக அரசு?
உலகையோ திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது கீழடி அகழாய்வு. அந்த வரிசையில் சேர வேண்டிய அழகன்குளம் அகழாய்வுப் பணிகளை, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது எனப் பொருமுகிறார்கள் அழகன் குளம் ஆர்வலர்கள். சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, மதுரைக் காஞ்சி ஆகியவற்றில் குறிப்பிடப்படும் மருங்கூர் பட்டினம்தான் இன்றைய அழகன்குளம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இராமநாதபுரத்திலிருந்து கிழக்கு நோக்கி 17 கி.மீ தூரம் பயணித்தால், வைகை ஆறு கடலில் கலக்கும் கழிமுகப் பகுதியில் அமைந்துள்ளது அழகன்குளம். இங்கு 1986 முதல் 2017ஆம் ஆண்டு வரை எட்டு கட்டங்களாக அகழாய்வை மேற் கொண்டது தமிழக தொல்லியல் துறை. இதன்மூலம், கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.12ஆம் நூற்றாண்டு வரை இந்த ஊர் மிகச் சிறப்பாக விளங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த அகழாய்வின் போது கிடைத்த பாசிகள், மணி செய்யும் கற்கள், சிப்பி, சங்கு வளையல்கள், அரிட்டைன், ஆம்போரா, ரௌலட்டட் ஆகிய ரோமானிய நாட்டு ஓடுகள், கறுப்பு- சிவப்பு நிற ஓடுகள், மௌரியப் பானை ஓடுகள், குறியீடுகள், ‘தமிழி’ எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் முதலியன அழகன் குளத்தின் பழமையை உலகுக்குப் பறை சாற்றின. இங்கு இதுவரை 13,000க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள் ளன. ‘அகழாய்வைத் தொடர்ந்தால் நிச்சயம் இன்னும் பல அபூர்வ தவல்கள் கிடைக்கும். ஆனால் ஏனோ தமிழக அரசு அகழாய்வுப் பணிகளைக் கிடப்பிலேயே போட்டு வைத்தி ருக்கிறது’ என்று குற்றச்சாட்டு எழுந்தி ருக்கிறது. இதுகுறித்து இராமநாதபுரம் தொல்லி யல் ஆய்வு நிறுவனத் தலைவர் ராஜகுரு விடம் பேசினோம். “இங்கு 1986-87 கால கட்டத்தில் இரண்டு குழிகள் தோண்டி முதல் அகழாய்வைத் தொடங்கினர். இங்கு கிடைத்த பொருட்கள் 2,360 ஆண்டுகள் பழை மையானவை என கார்பன் சோதனையில் அறியப்பட்டது. 1986ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் மட்டும் 193 குறியீடுகள் (மீன், நட்சத்திரன், மனித உருவங்கள் போன்ற வை) உள்ள ஓடுகளும், 60 தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஓடுகளும் கிடைத்துள்ளன. ரோமானிய ஓடுகளும், ரோமானிய மன்னர்க ளின் காசுகளும் அகழாய்வில் கிடைத்துள்ள தால், இங்கு ரோமானியக் குடியிருப்பு இருந்திருக்கின்றன என்பதையும், இங்கு உள்ள மக்களுடன் அவர்கள் வாணிபம் செய்து வந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. அழகன்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பானை ஓட்டில் ‘சமுதஹ’ எனும் சொல் உள்ளது. இலங்கை குகைக் கல்வெட்டுக ளிலும் இந்தச் சொல் காணப்படுகிறது. இதன்மூலம் தமிழகத்துக்கும் இலங்கை க்கும் பழங்காலம் முதல் தொடர்பு இருந் துள்ளதை அறியலாம். கிரேக்க கலை பாணி யில் ஒரு பெண் தன் குழந்தையை இடுப்பில் தாங்கி உள்ளதைப் போன்று சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு பானை ஓட்டில், மூன்று பெண் கள் விசிறியை தம் கைகளில் கொண்டும், ஒரு கையில் மதுக்குடத்தைத் தாங்கியும் காணப்படுகின்றனர். இவை எகிப்து பிரமிடு களில் உள்ள வண்ண உருவங்களைப் போன்று உள்ளன. அரேபியர்களுடன் இருந்த வணிகத் தொடர்புக்குச் சான்றாக அரபி எழுத்தில் எதப்பட்ட சங்கு ஒன்று கிடைத்துள்ளது.
2016-17ல் 8 ஆம் கட்டமாக விரிவான அகழாய்வு மேற்கொள்ள, தமிழக அரசு 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. இதில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம். கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் 52 குழிகளுக்கும் மேல் தோண்டப்பட்டன. இதில் 13,000 பழங்காலப் பொருள்கள் கண்டறியப்பட்டன. மனிதன் முதல்முதலாகப் பயன்படுத்திய வெள்ளி முத்திரைக்காசுகள், சதுர வடிவிலான செப்புக்காசுகள் என 50க்கும் மேற்பட்டவை கிடைத்துள்ளன. கூட்டல் குறி போன்ற முத்திரை, சுடுமண் பொம்மை, சுடுமண் குழாய்கள், இரும்புப் பொருள்கள், யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், கல் மணிகள், சங்கு ஆபரணங்கள், கல் மணி கள், சங்கு ஆபரணங்கள், கண்ணாடி மணிகள் போன்றவையும் இதில் அடங்கும். தமிழகத்தில் அழகன்குளத்தில் மட்டுமே பழங்கால மண்பாண்டங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. எனவே, இங்கு கண்டெடுக் கப்பட்டுள்ள குறியீடுகளை சிந்து சமவெளி எழுத்துக்களுடன் ஒப்பிட்டுப் படிக்கப்பட நட வடிக்கை எடுப்பதுடன், புதிய தொழில் நுட்பத்தில் மீண்டும் ஆய்வை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
அழகன் குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் வழக்கறிஞருமான அசோகன், “உலகின் பல்வேறு நாடுகளுடன் வாணிபத் தொடர்பு கொண்ட துறைமுகமாகவும், சங்க கால பாண்டியர் துறைமுகமாகவும் அழகன் குளம் இருந்துள்ளதை ஆய்வுகள் காட்டு கின்றன. இங்கிருந்து மதுரை செல்லும் பெரு வழி, வைகையின் கரை வழியில் இருந்தி ருக்க வேண்டும். இந்தப் பாதையில்தான் கீழடி உள்ளது. 1986 முதல் 1998ஆம் ஆண்டு வரையில் ஆறு கட்டங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் வெறும் 19 குழிகள் மட்டுமே தோண்டப்பட்டன. இதன் ஆய்வறிக்கை 2005ல் வெளியிடப்பட்டது. ஆனால் 7 மற்றும் 8ஆம் கட்டங்களில் 55க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டி ஆய்வு செய்யப்பட்டன. அதிகளவில் நிதியும் ஒதுக்கப்பட்டது. இதன் ஆய்வறிக்கை இன்னும் வெளியிடப்பட வில்லை. இந்த ஆய்வுகளின் போது கண்டெ டுக்கப்பட்ட தொன்மையான பொருள்களை யெல்லாம் ஒருநாள் மட்டும் இங்கு பார்வைக்கு வைத்தனர். அகழாய்வுகள் நடைபெறும் இடங்களிலேயே அங்கு கிடைக்கும் தொன் மைப் பொருள்களைக் கொண்ட அருங்காட்சி யகங்களை, பல நாடுகள் அமைத்து வரு கின்றன. ஆய்வுப் பொருள்களைக் காண வந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், தொடர்ந்து ஆய்வு கள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறிச் சென்றார்.
ஆனால் அவர் வந்து சென்ற பிறகு தோண்டப்பட்ட அத்தனை குழிகளும் மூடப் பட்டதுடன், இங்கு கிடைத்த பொருள்களை யும் எடுத்துச் சென்று விட்டனர். அழகன் குளத்தில் தமிழக அரசு தனது அகழாய்வுப் பணிகளை மீண்டும் தொடர்வதுடன், ஏற்கெ னவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை யும் வெளியிட வேண்டும்” என்றார். இதுகுறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் கேட்டோம். “அழகன் குளம் அகழாய்வுகள் தொடர்பான ஆய்வ றிக்கையை விரைவில் வெளியிட இருக்கி றோம். ஆய்வறிக்கையை தயார் செய்து வந்த சிவானந்தம், கீழடி ஆய்வுப் பணிகளுக்குச் சென்றதால் தாமதமாகிவிட்டது. மேலும் அழகன்குளத்தில் ஏற்கெனவே நடந்த ஆய்வில் சங்கு தொடர்பான தொழிற்கூடம் இருந்தது தெரியவந்தது. எனவே, அங்கு மீண்டும் ஆய்வைத் தொடர திட்டமிட்டுள் ளோம். விரைவில் அதற்கான அனுமதி பெறப் பட்டு அடுத்தக்கட்ட ஆய்வுப்பணிகள் மேற் கொள்ளப்படும்” என்றார்.
நன்றி: ஜூனியர் விகடன் (23.10.19)