கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.1000 இருக்கும் என்று சீரம் நிறுவனத் தலைவர் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் உலகம் முழுவதும் உள்ள மருத்துவ விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல ஆய்வுகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில் தில்லியில் நேற்று மாலை நடந்த இந்துஸ்தான் டைம்ஸ் தலைமை உச்சி மாநாட்டில் பேசிய சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனாவாலா கூறியதாவது:- ஆக்ஸ்போர்ட் கோவிட் -19 தடுப்பூசி 2021 பிப்ரவரியில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயது மூத்தவர்களுக்கும், ஏப்ரல் மாதத்தில் பொதுமக்கள் தேவைக்காகச் சந்தையில் விற்பனைக்கு வரும் . 2 டோஸ் கொண்ட இந்த தடுப்பூசியின் விலை 1000 ரூபாய் என்றளவில் இருக்கும்.
2024க்குள் ஒவ்வொரு இந்தியருக்கும் தடுப்பூசி போடப்படும். அனைவருக்கும் கிடைக்க 2 அல்லது 3 ஆண்டுகள் தேவைப்படும் என்பதற்கு, தடுப்பூசியின் விலை, கொள்முதல் நேரம், மக்களின் விருப்பம் ஆகியவையே காரணம். என்று தெரிவித்துள்ளார்.