புதுச்சேரி,
புதுச்சேரியில், அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசு ஊழியர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என புதுவை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களவை தேர்தல் தேதிகள் வெளியாகி உள்ள நிலையில், தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த தேர்தல் நெறிமுறைகளை சரியாக செயல்படுத்தவும், தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்திட அனைத்து முயற்சிகளும் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த தேர்தலின் போது மாநில மத்திய அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபடுவதாக பல புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றும் பொழுது நடுநிலையோடு செயல்பட வேண்டும். தேர்தல் நடக்கும் காலத்தில் ஊழியர்கள் நடுநிலையோடு செயல்படுவதை மக்கள் உணர வேண்டும். அரசியல் கட்சி அல்லது வேட்பாளருக்கும் ஆதரவாக அரசு ஊழியர்கள் செயல்படக்கூடாது. ஓட்டு பதிவின் போது ஊழியர்கள், வேட்பாளர்களுக்கு ஆதரவாக தங்கள் செல்வாக்கை பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்தலின் போது தேர்தல் முகவர்களாக, வாக்குச்சாவடி முகவர்களாக மற்றும் வாக்கு எண்ணுகை முகவர்களாக செயல்பட தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையாக 6 மாத சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரி வழங்கிய செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.