tamilnadu

img

உங்களை உற்றுப் பார்க்கும் மலைப்பாம்பு (அல்லது) பாசிசத்தின் இந்திய முகம்

கொரோனா காலம் எல்லாவற்றையும் பூதக்கண்ணாடியில் பார்க்க வைத்திருக்கிறது. பாசிசத்தை மிகத் தெளிவாக இந்த காலத்தில் பார்க்கவும் உணரவும் முடிகிறது.

பாசிசத்தின் முகம் என்றால் அதை ஒரு மனிதரின் முகமாக நாம் பார்க்க முடியாது. நாம் பார்க்கிற காட்சிகள், கேட்கிற செய்திகள் அவை நமக்கு ஏற்படுத்தும் தாக்கங்கள், அதிலிருந்து பெறும் உணர்வுகள் என அனுபவங்களிலிருந்து பாசிசத்தின் முகத்தைப் பார்க்கலாம்.

2014ல் மோடி தலைமையிலான பிஜேபி அரசு ஆட்சிக்கு வந்தது. அப்போது அவர்தான் Face of BJP என்று, Face of Hindutva என்று ஆரவாரமாக பேசப்பட்டார். ஊடகங்கள் எல்லாம் அப்படித்தான் அறிவித்தன. அப்போது முன்வைக்கப்பட்ட ஒரு காட்சியைச் சொல்ல வேண்டும். பிரதமரானதும் மோடி அவரது தாயை சென்று பார்த்தார். ஏழைத்தாயின் மகன் என்று செய்திகள் வெளிவந்தன. அம்மாவின் காலைத் தொட்டு வணங்குகிற காட்சியை தொலைக்காட்சிகளில் நேரலையாக ஓளிபரப்பப்பட்டன/ பத்திரிகைகள் தங்கள் முன்பக்கத்தில் காட்டின. தாய்மையைப் போற்றுகிற ஒரு பிம்பம் மிகப் பெரிய அளவில் கட்டமைக்கப்பட்டது. தாயை மகன் வணங்குகிற அந்த காட்சியை முன்வைப்பதன் மூலம், இரக்கமான, பணிவான, பெண்களை மதிக்கிற முகமாகக் காட்டினார்கள்.

பாசிசத்தை அறிந்தவர்களுக்கு, இந்துத்துவாவை தெரிந்தவர்களுக்கு அந்த காட்சி முன்னுக்கு வராது. குஜராத் கலவரத்தில் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, அந்த சிசுவையும் வாளுக்கு இரையாக்கிய கொடிய காட்சி நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியாது. அதுதான் இந்திய பாசிசத்தின் முகமாக இருக்கிறது.

நாம் இப்படி உணரத் தலைப்படுவோமானால் இந்த ஆறு ஆண்டுகளில் ஏராளமான காட்சிகள் பாசிசத்தின் முகமாக முன்னால் நிற்கின்றன. பிரதமர் மோடியால் திடுமென ஓரிரவில் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளின் போது நாடு முழுவதும் நீண்ட வரிசையில் வெயிலில் வங்கிகளின் முன்பு காத்துக்கிடந்த அவலக் காட்சிகள் இந்திய பாசிசத்தின் முகம். எத்தனை விவசாயிகளின் மரணங்களைக் கடந்திருக்கிறோம். அவையெல்லாம் இந்திய பாசிசத்தின் முகம். நம் குழந்தை அனிதா. நீட் தேர்வின் மூலம் அவளது எதிர்காலத்தை கனவைக் கொன்று அவளையும் கொன்றார்கள். அது இந்திய பாசிசத்தின் முகம். ஜம்மு காஷ்மீரில் சின்னஞ்சிறு ஆசிபாவை கோவிலுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்துக் கொன்றார்களே அது பாசிசத்தின் முகம். பாசிசத்தின் முகங்களாய் எவ்வளவோ நம் முன்னால் காணக் கிடக்கின்றன. இந்துத்துவவை அம்பலப்படுத்திய விமர்சித்த எழுத்தாளர்கள் கல்புர்கியை, கௌரி லங்கேஷ்கரோடு கருத்துரிமையையும் சேர்த்து கொன்றார்களே அது பாசிசத்தின் முகம். ஆறு ஆண்டுகளின் எல்லா நாட்களும் அமைதி இழந்து, சந்தோஷம் இழந்து போயிருக்கின்றன. அது பாசிசத்தின் முகம். பசுக்களை பாதுகாக்கிறோம் என தலித் மக்கள் மீதும் சிறுபான்மை மக்கள் மீது நடத்திய தாக்குதல்கள் இந்திய பாசிசத்தின் முகம். சமீபத்தில் நடந்த டெல்லி கலவரத்தில் ஐயோ என நிர்க்கதியாய் வானம் பார்த்து கதறிய முதியவர் இந்திய பாசிசத்தின் முகம். கலவரத்தைத் தூண்டிய கபில் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் எனச் சொன்ன நேர்மையான நீதிபதி முரளிதரன் உடனடியாக பஞ்சாபிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அது இந்திய பாசத்தின் முகம். இதோ இன்றக்கு பார்க்கிறோம் புலம் பெயந்த தொழிலாளர்களின் நிலைமையை. நீண்ட சாலைகளில் அனாதரவாய் லட்சக்கணக்காக பெற்றோர்களை சுமந்தபடி, குழந்தைகளை சுமந்தபடி நடந்து சென்று கொண்டே இருக்கிறார்கள். தலைமுறைகளுக்கும் அழுது தீர்க்குமாறு, பார்க்கவே சகிக்காத ஆயிரமாயிரம் காட்சிகள் நம் கண் முன்னால் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. இதுவெல்லாம்தான் இந்திய பாசிசத்தின் முகமாக இருக்கிறது.

இப்படி நாம் பார்ப்பது பாசிசத்தின் இந்திய முகம். பாசிசத்துக்கு என்று பொதுவான ஒரு முகம் உண்டு. பாசிசம் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வெறு வடிவங்களில், முறைகளில் நுழையும். அதற்கென்று பொதுவான சில தன்மைகளும், இயல்புகளும் இருக்கின்றன. அதுதான் பாசிசத்தின் பொதுவான முகம். உலகளாவிய அனுபவங்களிலிருந்து அந்த முகம் காணக் கிடைக்கிறது.

ஒரு நாட்டில் பெரும்பான்மை மக்களை பிரதிநிதிப்படுத்துவதாகக் காட்டிக்கொண்டு தன் இயக்கத்தை துவக்குகிறது பாசிசம். இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் என பாசிசம் ஆட்சியில் இருந்த நாடுகளில் அதுதான் நிலைமை. ஒரு நாட்டில் ஏற்கனவே இருக்கும் மோசமான வாழ்க்கை நிலைமைகளைக் காட்டி, பெரும்பான்மையான மக்களின் இந்தத் துயரங்களுக்கு சிறுபான்மை மக்களே காரணம் என தன் செயல்பாடுகளை வளர்க்கும். அதன் மூலம் பெரும்பான்மை மக்களை தங்களுக்கு ஆதரவாகத் திரட்டும். அதில் உளவியல் ரீதியான அணி திரட்டல் இருப்பதையும் சேர்த்து பார்க்கலாம்.

முன்பு ஒருமுறை ஓரிஸாவில் பாதிரியாரையும் அவரது குடும்பத்தினரையும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எரித்துக் கொன்றார்கள். அதை எதிர்த்து முற்போக்கு சக்திகளும், ஜனநாயக சக்திகளும் நாடு முழுவதும் கணடனக்குரல்கள் எழுப்பின. கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆரப்பாட்டங்கள் நடத்தினர். சாத்தூரிலும் கூட நடந்தது. கிறித்துவப் பள்ளிக் குழந்தைகளை சாலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்று அந்தக் கொலையைக் கண்டித்து ஊர்வலம் சென்றார்கள். அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த மக்களில் சிலர் அதுபற்றி பேசினார்கள். ”ஓரிஸாவில் பாதிரியார் ஒருவர் கொலை செய்யப்பட்டால் சாத்தூரில் இவர்களுக்கு என்ன வலிக்கிறது. இவர்களை யாராவது துன்புறுத்தினோமா?. இவர்களுக்கு இங்குள்ள இந்துக்கள் எதாவது பாதிப்புகளை ஏற்படுத்தினோமா? இவர்கள் ஏன் போராட வேண்டும் “ என்று உரையாடல் நடந்தது. முடிவாக அவர்கள் பேசிக்கொண்டதில்- “முஸ்லீம்களோ, இந்துக்களோ தங்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் ஒன்றாய் சேர்ந்து கொள்கிறார்கள். நாம் இந்துக்கள்தாம் பிரிந்து கிடைக்கிறோம். நாம் ஒன்றாய் சேர்வது கிடையாது” என்ற மனோபவம் வெளிப்பட்டது. ஆக, பெரும்பான்மை மக்களைத் திரட்டுவதற்கு சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, அதை எதிர்த்து சிறுபான்மை மக்கள் போராடுவதைக் காண்பித்து, பெரும்பான்மை மக்களைத் திரட்டுவது இதுதான் பாசிசத்தின் பொதுப்புத்தி. உத்தியும் ஆகும்.

எனவே பாசிசம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ந்து துவேஷத்தையும், வெறுப்பையும் விதைத்துக்கொண்டே இருக்கும். இந்த அனுபவங்கள் இந்தியாவில் நிறைய இருக்கின்றன. எல்லா நாடுகளிலும் இப்படித்தான். இத்தாலியிலும் அதுதான். ஆரிய இனம், அதுதான் உயர்ந்தது, ஆளப் பிறந்தது என்று சொல்லித்தான் பெரும்பான்மை மக்களைத் திரட்டினார்கள். இனத்தைக் காட்டி ஒரு தேசீயவாதம் முன்வைக்கப்பட்டது. அதே போல்தான் ஜெர்மனியில் ஹிட்லரும் ஆரிய இனத்தைப் போற்றி தேசியவாதத்தை கட்டி எழுப்பினான். சிறுபான்மையினராய் இருந்த யூதர்களை வெறுப்பதற்கு இனத்தூய்மை என்றெல்லாம் கூட பிரச்சாரங்கள் செய்தார்கள். யூதர்களே ஆரியர்களின் வாழ்வைப் பறித்துக் கொண்டதாய்ச் சொன்னார்கள். இப்படி பெரும்பான்மையினரின் ஆதரவு திரட்டி, தேசிய பெருமிதம், தேசபக்தி எல்லாம் ஊட்டி அதிகாரத்திற்கு வருவது பாசிசத்தின் பொதுவான ஒரு முகம்.

அதிகாரத்துக்கு வந்த பிறகு பாசிசம் அந்த நாட்டில் வேறு எந்தக் கட்சியையும் வைத்திருக்காது. வேறு எந்த அமைப்பும் இயங்க முடியாது. ஒரே ஒரு அமைப்பு, அதன் ஒரே தலைவர், அவர் மட்டுமே முடிவெடுப்பார். இத்தாலியில் அதுதான் நடந்தது. ஜெர்மனியிலும் அதுதான் நடந்தது. எனவே பாராளுமன்றம் தேவைப்படாது. பாராளுமன்றத்தையும் மொத்தமாக முடக்கி விடுவார்கள். ஜனநாயகத்தை முழுவதுமாய் குழி தோண்டி புதைப்பதுதான் பாசிசத்தின் அடுத்தக்கட்ட வேலை. முழுக்க முழுக்க சர்வாதிகாரத் தன்மை நிலைநிறுத்தப்படும். இது பாசிசத்தின் பொதுவான முகம்.

பாசிசம் தொழிலாளர்களுக்கு முற்றிலும் விரோதமானது. தொழிலாளர்கள் அவர்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும். ஏனென்றால் தொழிலாளர்கள் இயல்பிலேயே ஜனநாயகத்தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். தங்கள் உழைப்புக்கேற்ற ஊதியத்தை கோருகிறவர்களாக இருக்கிறார்கள். அதற்காக போராடுகிறவர்களாக இருக்கிறார்கள். உழைக்கிறவர்கள்தாம் பெரும்பாலும் சுயமரியாதைக்காரர்களாக இருப்பாரகள். எனவே பாசிசம் தொழிற்சங்கங்களை முடக்கும். அதன் மூலம் தொழிலாளர்களை கேள்வி கேட்க நாதியற்றவர்களாய் ஆக்கும். முழுமையாக அரசுக்கு தங்களையும் தங்கள் உழைப்பையும், வாழ்க்கையையும் அர்ப்பணம் செய்து கொள்ளும் அடிமைகளாகிப் போவார்கள் தொழிலாளர்கள். இது பாசிசத்தின் பொதுவான முகம்.

இதிலிருந்து இன்னொன்று மிகத் தெளிவாகத் தெரியும். எப்போது தொழிலாளர்களுக்கு பாசிசம் விரோதமானதோ அப்போதே அது முற்றிலும் முதலாளித்துவத்திற்கு, பெரு முதலாளிகளுக்கு ஆதரவானது என்பதை புரிந்து கொள்ள முடியும். முதலாளிகளுக்கு அனைத்துச் சலுகைகளையும் எடுத்துக் கொடுக்கிற, அவர்களின் நலன் காக்கிற அரசாக பாசிசம் இருக்கிறது. இந்தியாவில் அதனை மிகத் தெளிவாக நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், இந்தோனேஷியா என பாசிசம் அதிகாரத்தில் இருந்த அனைத்து நாடுகளிலும் இதுதான் கதி.

பாசிசத்துக்கும், கார்ப்பரேட்களுக்கும் ஒரு கூட்டு இருக்கிறது. இது ஒரு தேசத்தின், அமைப்பின் நிலைமைகளிலிருந்து உருவாகிறது. முதலாளித்துவம் முடிந்த வரை ஜனநாயகத்தன்மை கொண்டதாக தன்னைக் காட்டிக் கொள்ளும். ஜனநாயக அமைப்புக்குள் இருந்தபடியே தான் விரும்பும் அளவுக்கு வருமானத்தை நிதி மூலதனத்திலிருந்து பெற முடியுமானால், அது தன்னை ஜனநாயகத்தன்மை கொண்டதாய் பாவனை செய்யும். எப்போது ஜனநாயக நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, தன்னால் பெரிய அளவுக்கு வருமானத்தை பெற முடியவில்லையோ, அப்போது முதலாளித்துவம், பலவந்தமாக வருமானத்தைத் திரட்டத் துணியும். அதுவரையிலிருந்த ஜனநாயகத் தோற்றங்களை களைந்துவிட்டு சர்வாதிகாரத் தனமை கொண்டதாக மாறும். இப்படி முதலாளித்துவம் நிலைமைகளுக்கேற்ப இரண்டு முகங்களையும் கொண்டதாக இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு வரை அமெரிக்கா போன்ற நாடுகள் அடிக்கடி ‘ஜனநாயகம், ஜனநாயகம்’ என கூப்பாடு போட்டதைப் பார்த்திருப்போம். கம்யூனிச நாடுகளில் ஜனநாயகம் கிடையாது, தாங்கள்தான் ஜனநாயகக் காவலர்கள் போலவும் தங்களால்தான் ஜனநாயகம் உயிர் வாழ்வதைப் போலவும் முதலாளித்துவ நாடுகள் எல்லாம் பீற்றிக்கொண்டு இருந்தன. உலகத்தின் பொதுப்புத்தியும் அதற்கு சம்மதித்து இருந்தது. சமீப காலங்களில் அப்படி ஜனநாயகத்தை தூக்கிப் பிடித்து பேசுவது நின்று போயிருக்கிறது. இந்த நாடுகள் எல்லாம் சர்வாதிகாரத்தை நோக்கி, பாசிசத்தை நோக்கி போய் விட்டன அல்லது போய்க்கொண்டு இருக்கின்றன என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். முதலாளித்துவமும், பாசிச இயக்கமும் கூட்டு சேர்ந்து கொள்ளும்.

முதல் உலகப் போருக்கும், இரண்டாவது உலகப் போருக்கும் இடையில் இத்தாலியிலும், ஜெர்மனியிலும் இப்படிப்பட்ட கூட்டுகள் நிகழ்ந்தன. அந்த நாடுகளில் பெரிய அளவுக்கு பொருளாதார நெருக்கடிகள் அப்போது ஏற்பட்டு இருந்தன. மக்களின் வாழ்க்கை பெருமளவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தது. அந்த நிலைமைகளுக்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம் என குற்றம் சாட்டி, தேசம் குறித்து அவர்கள் கவலைப்படவில்லை என - தேசீயவாதத்தை முன்வைத்து நாங்கள் மகிமைமிக்க கடந்த காலத்தை மீட்கிறோம் என - ஆட்சிக்கு வந்தவர்கள்தாம் முசோலினியும், ஹிட்லரும்.
ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த காலத்தில் இருந்த ஜனநாயகத்தன்மைகளை அழித்தொழித்தார்கள். அவர்களோடு முதலாளித்துவம் ஒருங்கிணைந்து இருந்தது. இது பாசிசத்தின் பொதுவான முகம்.

அடுத்து மிக மிக மோசமாக சித்தரிக்கப்படவும், பாதிக்கப்படவும் இருப்பது பெண்கள். பாசிசம் குறித்து நிறைய பேசினாலும், பெண்கள் குறித்து பாசிசம் என்ன கருத்து கொண்டு இருக்கிறது என்பது பற்றி குறைவாகவே பேசி வருகிறோம். குழந்தைகளைப் பெற்றெடுப்பது, குடும்பத்தை பேணுவது தவிர பெண்களுக்கு வேறு வேலை இல்லை என்று பாசிசம் பூரணமாக கருதுகிறது. ஹிட்லர் ஆட்சியில் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் என சொல்லப்பட்டது. நடைமுறைபடுத்தப்பட்டது. அதன் மூலம் இரண்டு காரியங்களை ஹிட்லரால் செய்ய முடிந்தது. ஜெர்மனியில் வேலையின்மை அதிகமாக இருந்தது. பல இளஞர்கள் இதனால் பாதிக்கப்பட்டு இருந்தனர். பெரும்பான்மையினராய் கருதப்பட்ட ஜெர்மானியர்களுக்கும் இதனால் அதிருப்தி இருந்தது. பெண்கள் வேலை செய்யத் தேவையில்லை என்பதை நடைமுறைப்படுத்தி, அந்த வேலை வாய்ப்புகள் எல்லாம் ஆண்களுக்கு கொடுக்கப்பட்டது. பெண்களில் வீடுகளுக்குள் மீண்டும் அடைக்கப்பட்டனர். தூய்மையான ஜெர்மானியக் குழந்தைகளை பெற்று தரும் பெண்களுக்கு அரசு பரிசு வழங்கும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது. யூதர்களுக்கு எதிரான ஒரு இனத் தூய்மையையும் அதன் மூலம் முன்வைக்கப்பட்டது. பொதுவெளியில் உழைக்கும் பகுதியினரிலிருந்து பெண்கள் நீக்கம் செய்யப்பட்டார்கள். இந்தியாவில் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்தும், “பெண்கள் வேலைக்கு செல்லாமல், கணவனையும், குடும்பத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டும்” என பேசியிருக்கிறார். இந்தியாவிலும் வேலையின்மை அதிகமாக இருக்கிறது. இந்த நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தால், இங்கும் பாதிக்கப்படப் போவது பெண்கள் என்பது தெரிய வரும். ஆக பெண்களை மிக இழிவான நிலையில் வைத்திருப்பது பாசிசத்தின் முகம்.

குழந்தைகள் நிலைமையும் அப்படித்தான். பிறந்ததிலிருந்து முற்றிலும் அரசுக்கு அடிமைகளாகவே வளர்க்கப்படுவார்கள். அவர்களுக்கான சுதந்திரம், சுயத்தன்மை, பரந்து விரிந்த உலகில் அவர்களுக்கான இடம் இல்லாமல் கடிவாளம் பூட்டப்பட்டவர்களாகவே வைத்திருப்பார்கள். தேசம், தேசீயவாதம், ஒரு தலைவனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பது என்று பழக்கப்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கான கல்வி முறையும், பாடத்திட்டங்களும் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும். இது பாசிசத்தின் முகம்.

இந்த பொதுவான முகத்தை இத்தாலியில் பார்க்கலாம். ஜெர்மனியில் பார்க்கலாம். இந்தியாவிலும் பார்க்கலாம். இப்போது இந்தியாவில் பாசிசம் ஆட்சியதிகாரத்தில் இருக்கிறது. நிலைமைகள் இன்னும் மோசமாகலாம். பாசிசத்தின் முகம் இன்னும் பூதாகரமாகத் தெரியலாம். பாசிசத்தின் பொதுவான முகத்திலிருந்து பாசிசத்தின் இந்திய முகம் என்ன வகையில் தனித்தன்மைகள் கொண்டதாக இருக்கிறது என்பதையும் பார்க்கலாம்.

ஜெர்மனியில் நாஜிக் கட்சியை ஆரம்பித்து, தேசியவாதத்தை முன்னெடுத்து ஏழெட்டு வருடங்களில் ஹிட்லர் ஆட்சியதிகாரத்தைப் பிடித்து விடுகிறான். பத்துப் பனிரெண்டு ஆண்டுகளில் அவனது பாசிச ஆட்சி வீழ்ந்து விடுகிறது. இத்தாலியில் முசோலினி ரஷ்யப் புரட்சியைப் பாராட்டி, பாசிஸ்ட் என அறிவித்துக் கொண்டு கட்சி ஆரம்பித்து, சில ஆண்டுகளில் தேசீயவாதத்தை எழுப்பி இத்தாலிய தொழிலாளர்களுக்கு எதிராக பெரு முதலாளிகளோடு கூட்டு சேர்ந்து ஆட்சியை பிடிக்கிறான். அவனும் இரண்டாம் உலகப் போரோடு அழிந்து போகிறான். இருவரும் மக்களைக் கவர்வதற்கு ஆரம்பத்தில் சோஷலிஸ்ட்களாய் காட்டிக் கொண்டவர்கள். ஆட்சிக்கு வந்ததும் முதலில் கம்யூனிஸ்டுகளை நசுக்கினார்கள்.

இந்தியாவிலோ, இங்கு இருக்கும் இந்துத்துவ பாசிசம் நூறு வருடம் வரலாறு கொண்டதாய் இருக்கிறது. எண்பது தொண்ணூறு வருடங்களுக்குப் பிறகுதான் அதன் மெல்ல நகர்ந்து வந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கிறது. உலகிலேயே இவ்வளவு நீண்ட ஆயுள் கொண்டதாய் ஒரு பாசிச அமைப்பு இருக்கிறதென்றால் அது இந்திய பாசிசம்தான். 1917ல் முசோலினி அப்படி ஒரு கட்சியும், இயக்கமும் ஆரம்பித்த பிறகுதான் பாசிசம் என பெயர் சூடப்பட்டது. அந்தப் பெயராலேயே உலகில் இருக்கும் பாசிச அரசுகள் அடையாளம் காணப்படுகின்றன. அதற்கு முன்பும் பாசிசத்தன்மைகள் கொண்ட ஆட்சிகளும், நிகழ்வுகளும் பெயர் இல்லாமல் இந்த முகத்தோடு இருந்திருக்கவேச் செய்யும்.

இங்கு இந்துத்துவா என்னும் பாசிசம் ஒவ்வொரு காலத்திலும் அதிகாரத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு சதிகளிலும், அழித்தொழிப்புகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறது. சாதிகளாய் மக்களை பிரித்து வைத்து வர்ணாசிரமத்தின் மூலம் அதிகாரத்தை தக்க வைத்துக்கொண்டதிலிருந்து அதன் வரலாறு துவங்குகிறது. அதனை எதிர்த்துத் தோன்றிய ஜனநாயகக் கூறுகளைக் கொண்ட மதங்களை அழித்து அல்லது அவைகளை விழுங்கி செரித்து வளர்ந்து இருக்கிறது. அது ஒரு நீண்ட நெடிய வரலாறு. அதற்குள் இப்போது ஆழமாகச் செல்லவில்லை.

இந்துத்துவா அல்லது பிராமணிய மேலாதிக்கம் என்பது ஸ்வஸ்திக் சின்னத்தோடு ஆர்.எஸ்.எஸ்ஸாக அறியப்பட்டு, அதற்கு பாசிசம் என்னும் முகம் காணப்பட்டு நூறு வருடங்களாகி இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளலாம். இந்த நூறு வருடத்தில் இந்திய பாசிசம் அதிகாரத்தை நோக்கி நகர்வதில் அதற்கு ஒரு தடையை பின்னடைவை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு மகாத்மா காந்திக்கும், அவரது மரணத்திற்கும் இருக்கிறது. அவரது இறுதி காலக் கட்டங்களில் காந்தி வல்லபாய் படேலுக்கு எழுதிய கடிதங்களில், மற்றும் முக்கிய ஆவணங்களில் ஆர்.எஸ்.எஸ் மீதான விமர்சனங்களையும், கோல்வார்கரோடு அவருக்கு இருந்த முரண்பாடுகளையும் பார்க்க முடிகிறது. ஆர்.எஸ்.எஸ்ஸை இந்திய மக்களிடையே செல்வாக்கு பெற்ற காந்தி அம்பலப்படுத்தி சென்றிருக்கிறார். இந்துத்துவா சக்திகளின் வேகம் மிகப் பெரிய அளவில் மட்டுப்படுத்தப்பட்டது.

இன்னொரு காரணமும் உண்டு. அது உலகளாவியது. உலக அரங்கில் ஹிட்லர், முசோலினி அழிவுகளுக்குப் பிறகு தங்களை பாசிஸ்ட் என்றோ பாசிச இயக்கத்தைச் சார்ந்தவர் என்றோ அழைத்துக்கொள்ளவும், அடையாளப்படுத்தப்படவும் பெரும் தயக்கம் ஏற்பட்டு இருந்தது. அந்த அளவில் அவர்கள் அம்பலப்பட்டு இருந்தனர். மிகப் பெரிய கொலைகாரர்களாக அறியப்பட்டு இருந்தார்கள். ஜெர்மனி வதை முகாம்களில் நடந்த மனிதப் படுகொலைகளை வரலாறு தாங்க முடியாத வலியோடு பதிவு செய்து வைத்திருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் உலகம் பாசிசம் என்ற சொல்லை பயத்தோடு பார்த்தது. பாசிசத்தின் மீதான வெறுப்பும் உலகின் பொதுப்புத்தியாக இருந்தது.

இந்துத்துவா அமைப்புகள்தாம் இந்தியாவின் பாசிச சக்திகள் என தெரிகிறது. இந்தியாவில் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பாசிச முகம் இருப்பது நமக்குத் தெரிகிறது. ஆனால் அவர்கள் ஒருபோதும் தங்களை பாசிஸ்ட்கள் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படி அழைக்கப்படுவது மக்களிடமிருந்து தங்களை தனிமைப்படுத்தி விடும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இன்னும் கூட சொல்ல வேண்டுமானால், அவர்கள் தங்களை ஒரு தேசீயவாதி என்று சொல்வதற்குக் கூட தயங்குகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் மோகன் பகவத், “நாம் நம்மை நேஷனலிஸ்ட் என்று அழைக்கக் கூடாது. நம்மில் சிலர் அப்படி அழைக்கிறார்கள். அது பாசிஸ்ட் என்ற வார்த்தையோடு தொடர்புடையதாக அறியப்படும்” என எச்சரிக்கிறார்.

ஆக பாசிஸ்ட் என்றோ, நேஷனலிஸ்ட் என்றோ பார்க்கப்படாமல் எப்படி மக்கள் தங்களை பார்க்க அவர்கள் நினைக்கிறார்கள்? இந்தியாவில் அவர்கள் இந்துக்கள் என்று அழைக்கப்பட விரும்புகிறார்கள். இந்துக்கள், இந்து கலாச்சாரம், இந்து பண்பாடு, தூய்மையான இந்துக்கள் என்னும் சொல்லாடல்களை முன்னெடுத்து மக்களிடம் நெருங்கினார்கள். இந்த அடையாளங்களோடு வரும் போதுதான் அவர்கள் ராமரை கையிலெடுத்தார்கள். அதைத் தொடர்ந்த அயோத்தி பிரச்சினை, அத்வானியின் ரத யாத்திரை, வட இந்தியாவில் நடந்த கலவரங்கள், உலகமே அதிர்ந்து போகுமளவுக்கு குஜராத்தில் கட்டவிழித்து விடப்பட்ட வன்முறைகள், படுகொலைகள் எல்லாம் நமக்குத் தெரியும். பார்த்திருக்கிறோம்.

ஏறத்தாழ இதே காலத்தில்தான் சோவியத் உடைகிறது. உலகில் முதலாளித்துவ அமைப்பின் கைகள் ஒங்குகின்றன. அதே வேளையில்தான் பாபர் மசூதியும் இடிக்கப்படுகிறது. சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் சூழ்ந்த காலமாகிறது. குழப்பங்களோடு நாட்கள் வரத் துவங்கின. முதலாளித்துவ நெருக்கடிகள் ஒருபுறம் அதிகரிக்க அதிகரிக்க இந்தியாவில் பாசிச சக்திகளின் வளர்ச்சியும் அதிகரித்தது. பாசிச சக்திகளுக்கும், கார்ப்பரேட்களுக்கும் இடையே புரிதல் வளர்ந்தது. பாசிச சக்திகளின் அடுத்த அத்தியாயம் பிறக்கிறது. இப்படி காலச்சூழல்களோடு பொருத்திப் பார்க்கிற போது இந்திய பாசிசத்தின் முகம் தெரியும். அடக்கி வைத்திருந்த கொடூரமான, இரக்கமற்ற குணங்களை எல்லாம் வெளிப்படுத்த ஆரம்பித்தது. இரை நெருங்க நெருங்க வேகம் கொள்ளும் மிருகத்தின் பாய்ச்சல் அது.

இத்தாலியிலும், ஜெர்மனியிலும் இதனைப் புரிந்து கொள்வதற்குள் படு வேகத்தில் பாசிசம் அனைத்தையும் கபளீகரம் செய்து விட்டது. அனைவரும் செய்வதறியாமல் திகைத்துப் போயிருந்தார்கள். இந்தியாவில் பாசிசத்தின் முகத்தையும், பாய்ச்சலையும் ஜனநாயக சக்திகளும், முற்போக்கு சக்திகளும் புரிந்து கொண்டனர். பாசிசம் குறித்த ஆபத்தை ஓரளவுக்கு அறிந்து கொண்டனர். இது ஒரு நம்பிக்கையளிக்கும் விஷயம்தான். குறிப்பாக கம்யூனிஸ்ட்கள், பெரியாரிஸ்ட்கள், அம்பேத்கரிஸ்ட்கள் பாசிசத்திற்கு எதிரான கருத்துக்களை, நடவடிக்கைகளை பரப்ப முன்வந்தனர். பாசிசம் வருவதையும், மக்களை பாசிசத்தை நோக்கி நகர விடாமலும் எச்சரித்தனர். சித்தாந்த ரீதியாக வலுவான எதிர்ப்பு சக்திகளாய் அவை இருந்தன.

இதில் கம்யூனிஸ்ட்கள் மிக முக்கிய பங்காற்றினர். ஆபத்தை புரிந்து கொண்ட அவர்கள் பாசிசத்திற்கு எதிராக காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவு அளித்தனர். அந்த காலக்கட்டமும் மிக முக்கியமானது. இடதுசாரிக் கட்சிகளின் யோசனைப்படி ஓரளவுக்கு ஜனநாயக ரீதியான நடவடிக்கைகள், அடித்தட்டு மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் நலத்திட்டங்கள் அமல்செய்யப்பட்டன. நூறு நாள் வேலைத் திட்டம், தகவல் உரிமைச் சட்டம் என பலவற்றைச் சொல்ல முடியும். இவை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளிடையே முரண்பாடுகள் முன்னுக்கு வந்தன. காங்கிரஸ் இடதுசாரிக் கட்சிகளை புறக்கணித்தது.

இதன் விளைவாக, காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், அது முழுக்க முழுக்க முதலாளித்துவ கட்சிகளின் ஆதரவோடு, பெரு முதலாளிகளுக்கு சேவகம் செய்வதே லட்சியமாக அடுத்த ஐந்து வருட ஆட்சி நடத்தத் துணிந்தது. முறிலும் மக்கள் விரோத ஆட்சியாக அமைந்தது. ஊழலில் அம்பலப்பட்டது. அடுத்த தேர்தலில் இந்திய பாசிசம் ஆட்சிக்கு வருவதற்கு சகல சூழல்களையும் ஏற்படுத்தி வைத்திருந்தது காங்கிரஸ்.

ஒரு குறைந்த பட்ச திட்டத்தின் அடிப்படையில் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவில் காங்கிரஸ் இருந்த போது, இந்திய பாசிசத்தை வீழ்த்த முடிந்தது. இடதுசாரிக் கட்சிகளை காங்கிரஸ் புறக்கணித்தபோது பாசிசத்துக்கு அது இரையானது. நாட்டையும் இரையாக்கி விட்டது. அதன் விளைவைத்தான் இப்போது பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

இந்த ஆறு ஆண்டுகளும் தொடர்ந்து மக்களை ஒரு பதற்றத்திலேயே வைத்திருக்கிறது அரசு. மக்களை கீழ்படிய பழக்குவது பாசிசத்தின் தன்மை. அது ‘லெப்ட்’, ‘ரைட்’ என்று உத்த்ரவிட்டுக்கொண்டே இருக்கிறது. அது நில் என்றால் அனைவரும் நிற்க வேண்டும். உட்கார் என்றால் அனைவரும் உட்கார வேண்டும். ஓடு என்றால் அனைவரும் ஓட வேண்டும். வரிசையில் போய் நில் என்றால் நிற்க வேண்டும். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மக்களை ஓட வைத்தது. வரிசையில் போய் நிற்க வைத்தது. பண மதிப்பு இழப்பு நடவடிக்கை என்பது தோல்வி என்றும், மக்கள் விரோதமானது என்றும், கருப்புப் பணத்தை பிடிக்கவில்லை என்றும் நாம் பேசுகிறோம். இன்னொரு பக்கம் அரசு சாதித்தது என்னவென்றால் இந்த மக்களை கீழ்படிய வைத்தது. அரசு சொல்கிற படி கேட்க வைத்தது. ஜி.எஸ்.டி, ஆதார் என எதாவது சொல்லி மக்களை அலைக்கழிக்க வைத்தது. எதாவது ஒரு பயிற்சியைத் தொடர்ந்து கொடுத்து ஒரு பதற்றத்தில் மக்களை வைத்துக்கொண்டே இருக்கிறது.

இதனால் மக்களிடம் அவநம்பிக்கைகளை விதைத்துக்கொண்டே இருக்கிறது. அருகில் இருப்பவர்களையே நம்ப முடியாத சூழலை ஏற்படுத்துகிறது. வேறு வழியில்லை என்னும் நிலைமைக்குத் தள்ளுகிறது. இந்த உளவியலை பயன்படுத்தி, ‘ஒரு தலை, பல கால்கள்’ என்பதை ஏற்க வைக்கிறது. அதாவது ஒரு தலை. அதுதான் சிந்திக்கும். பேசும். ஆணையிடும். கால்கள் அனைத்தும் ஒன்று போல அதற்கு கட்டுப்பட்டு நடக்கும். கூடவே நடக்கும் கால்களோடு தன் கால்களும் இருக்கின்றன என்பது எதொவொரு விதத்தில் மனிதனுக்கு நம்பிக்கையளிக்கிறது என்கிறார் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் எரிக் ஹோப்ஸ்வாம்.

இங்கு மக்களுக்கு அரசு மேல் பெரும் அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது. விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மாணவர்கள், வேலையில்லாமல் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தலிதகள், சிறுபான்மை மக்கள், பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கருத்துரிமைக்கு அச்சமூட்டுவதாக அறிவுஜீவிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நீதிமன்றம் சுயம் இழந்து அர்த்தமிழந்து போய் இருக்கிறது. பாராளுமன்ற நடவடிக்கைகள் குறைந்து செயலிழந்து இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் பாராளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட கேள்வி-பதில் வாக்குறுதிகளில் முன்னூற்றுச் சொச்சம் நிறைவேற்றப்படவில்லை. பிஜேபி ஆட்சியில் ஆயிரத்து ஐநூற்றுச் சொச்சம் கேள்வி-பதில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எங்கும் அவநம்பிக்கைகள் விதைக்கப்படுகின்றன. எதிர்காலம் குறித்த இருண்மை ஆக்கிரமிக்கிறது. இதிலும் பாசிசம் ஒரு வெற்றியை அடைந்திருக்கிறது. ஜனநாயக சக்திகளுக்கு அச்சத்தையும், பதற்றத்தையும் தந்திருக்கிறது.

நிலைமைகளை கூர்ந்து கவனித்தோமானால், திட்டமிட்டு செயல்படுவோமானால், நம்பிக்கையான பல சூழல்கள் நம்முன் நிறைந்து இருப்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

இந்திய பாசிசத் தன்மைகளுக்குளேயே முக்கியமான முரண்பாடுகள் இருக்கின்றன. பாசிசம் என்பது ஒற்றைத் தன்மையை கோருவது மட்டுமல்ல, ஒற்றைத் தலைமையைக் கொண்டு இருப்பதுமாகும். அதாவது பாசிச அரசுக்கு எதிராக உள்ளேயும் ஒன்று இருக்க முடியாது. வெளியேயும் ஒன்று இருக்க முடியாது.

அரசுக்கு எதிராக பேசியதால் உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் இடமாற்றம் செய்யப்படுகிறார். இந்த கொரோனா காலத்தில் சமீபமாக அரசுக்குள்ளிருந்த அதிகாரிகள் சிலர், நெருக்கடிகளை சமாளிப்பதற்கு பெரு முதலாளிகளிடமிருந்து நிதி திரட்டும் ஆலோசனை ஒன்றை முன்வைத்தனர். அவர்களை அரசு சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது. அரசுக்குள்ளிருந்து தனியாக சிந்திக்கவோ, பேசவோ கூடாது என்று மூர்க்கத்தனமாக சொல்லப்படுகிறது. அரசுக்கு உள்ளே இருப்பதை ஓரளவுக்கு நெருக்கி விழுங்கிக்கொண்டு இருக்கிறது.

அரசுக்கு வெளியே இருக்கிற ஊடகங்கள் அரசுக்கு எதிராக பேசுவதில்லை. விழுங்கப்பட்டு விட்டது. ஆனால் வெளியே மக்கள் நூற்று முப்பது கோடி மக்கள் இருக்கிறார்கள். அதில் ‘அரசுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட, மக்களில்லாத தேசம் மீது பக்தி கொண்ட, முன்பின் யோசிக்காத அடிமைச் சங்கிகள் கூட்டம் அந்த மக்களில் இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையான மக்கள் அரசுக்கு எதிராக இருந்து கொண்டுதான் அரசை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பெருமளவில் அதிருப்தி இருக்கிறது. அந்த அதிருப்தியை ஒருமுகப்படுத்த முடிந்தால், ஒன்றிணைக்க முடிந்தால் பாசிசத்தை வீழ்த்த முடியும். அதற்கு முன்மாதிரி தமிழ்நாடுதான். கடந்த பாராளுமன்றத்துக்கு முன்பு தமிழ்நாட்டில் தொடர்ந்து மக்களின் போராட்டங்கள் நடந்த வண்ணம் இருந்தன. ஜல்லிக்கட்டு போராட்டம், மாணவர்கள் போராட்டம், தொழிலாளர்கள் போராட்டம், தஞ்சை விவசாயிகள் போராட்டம், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம், மீத்தேனுக்கு எதிரான போராட்டம், நீட் தேர்வு முறைக்கு எதிரான போராட்டம், எட்டுவழிச்சாலைக்கு எதிரான போராட்டம் என அலை அலையாய் போராட்டங்கள் எழுந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவுதான் இந்திய பாசிசத்திற்கு தமிழ்நாட்டில் இடமில்லாமல் போனது. மக்களை ஒருமுகப்படுத்துவதற்கு இத்தகைய போராட்டங்கள் அவசியம். இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து இந்த முயற்சியில் ஈடுபடுவதன் மூலம் இதனை சாத்தியப்படுத்தலாம்.

ஒற்றைத் தலைமையைக் கொண்டது பாசிசம் என்று ஏற்கனவே பார்த்தோம். அதில் இந்திய பாசிசத்திற்கு ஒரு சிக்கல் இருக்கிறது. முரண்பாடுகள் இருக்கின்றன. இந்தியப் பாசிச அமைப்பின் பீடமாய் இருக்கிற ஆர்.எஸ்.எஸ்ஸின் வழிகாட்டுதலில்தான் அரசு செயல்பட்டாலும் நேரடியாக ஆர்.எஸ்.எஸ் அரசியலில் பங்கு பெறவில்லை. ‘அமைப்பை விட தலைவர்கள் முக்கியமானவர்கள் அல்ல’ என ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து சமீபகாலமாக அவ்வப்போது குரல்கள் வருவதைப் பார்க்க முடிகிறது. மக்களிடம் செல்வாக்கு பெற்றவராக, ஒரு ஆளுமையாக, அவரே எல்லாவற்றையும் தீர்மானிப்பவராக நாட்டின் பிரதமர் உருவெடுப்பதை அந்த பாசிசத்தின் பீடம் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறது. உலகில் நாம் பார்த்தறிந்த பாசிச முறைகளில் இது வித்தியாசமானது. பார்ப்பனிய மேலாதிக்கத்தை கோருகின்ற இந்திய பாசிச பீடம் இதை எப்படி கையாள்கிறது என்பதை கவனித்து வியூகத்தை அமைக்க வேண்டும்.

சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பை இந்திய பாசிசம் பரப்பிக்கொண்டு இருக்கிறது. பசு மாட்டை முவைத்து, லவ் ஜ்ஹாத்தை முன்வைத்து, தீவீரவாதிகளாகக் காட்டி அவர்களை தேசியத்திற்கும் இந்துக்களுக்கும் விரோதிகளாய் சித்தரித்துக்கொண்டே இருக்கிறது. அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தி அதை காட்சிகளாய், செய்திகளாய் முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைப்பது போல வேகமாகவும், மிகப் பெரும் அளவிலும் இந்த வெறுப்பு பரவவில்லை .

ஜெர்மனியில் யூதர்களின் மீது இத்தகைய வெறுப்பு பரப்பப்பட்டது. அவர்கள் லட்சம் லட்சமாக வதை முகாம்களில் கொல்லப்பட்டனர். வரலாற்றின் ரத்தம் தோய்ந்த பக்கங்கள் அவை. யூதர்களை அவ்வளவு பெரும் எண்ணிக்கையில் கொன்றதற்கு பாசிச அரசு உத்தரவிட்டாலும் கொன்றது சாதாரண ஜெர்மானியர்களே. அப்படி இரக்கமற்று அவ்வளவு பேரைக் கொல்வதற்கான வெறுப்பு எப்படி மண்டியது என்பது அதிர்ச்சியானது. ஜெர்மனியின் மக்கள் தொகையில் யூதர்கள் ஒரு சதவீதம் போலவே இருந்தனர். ஆனால் அவர்கள் கடன் வழங்கும் நிறுவனங்களில் 43 சதவீதத்திற்கும் மேலாக உரிமையாளர்களாக இருந்தனர். பல வங்கிகளின் இயக்குனர்களாக இருந்தனர். ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் 13 சதவீதத்திற்கும் மேலாக டாக்டர்களாக இருந்தனர். 8 சதவீதத்திற்கு மேலாக வக்கீல்களாக இருந்தனர். அரசாங்கத்தின் முடிவெடுக்கும் அதிகாரிகளாய் பலர் இருந்தனர். எனவே தங்கள் வாழ்வை பறித்துக்கொண்டவர்கள் யூதர்கள் என ஒரு சதவீத மக்கள் மீது 99 சதவீத மக்களின் வெறுப்பையும், கோபத்தையும் கிளறிவிட முடிந்தது.

இந்தியாவில் அப்படி மக்கள் தொகையில் மிகக்குறைவான சதவீதத்தில் இருந்துகொண்டு கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம், மூலதனம் எல்லாவற்றையும் யார் கையகப்படுத்தி இருக்கிறார்கள் எனப் பார்த்தால் அது வேறு கதை.

இந்திய பாசிசம் வெறுப்பை கக்கும் சிறுபான்மை மக்கள் இந்தியாவில் 20 சதவீதத்திற்கும் மேலாக இருக்கிறார்கள். அவர்கள் மீது எதிர்ப்பை முழுமையாக திரட்டுவதும், அவர்களை ஒடுக்குவதும் எளிதான காரியம் அல்ல. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் அதனை நாம் பார்க்க முடிந்தது. அடங்கிப் போக மாட்டோம் என்று தேசமெங்கும் அவர்கள் தெருவில் இறங்கிப் போராடியதை பார்க்க முடிந்தது. பெண்களும், மாணவர்களும் காட்டிய உறுதியைப் பார்த்து பாசிச அரசு உண்மையில் மிரண்டு போனது. பின்வாங்கவும் செய்தது.

எனவே இந்திய பாசிச அரசு அதிகாரத்தில் இருந்து கொண்டு நடத்தும் இரக்கமற்ற, அராஜகமான அத்தனைக்கும் பிறகு, அதற்கு எதிரான மனநிலை மக்களிடம் இருப்பதும், அது வெளிப்படுவதும் நம்பிக்கையான காட்சிகளும், நிகழ்ச்சிப் போக்குகளும் ஆகும்.

இந்திய பாசிசம் ஒரு மலைப் பாம்பு போன்று இருக்கிறது. அது நெருங்கி வந்து வாயைப் பிளந்து காட்டுகிறது. உங்களை உற்றுப் பார்க்கிறது. உங்கள் கண்களில் பயம் தெரிகிறதா என அளக்கிறது.

பாராளுமன்றம் முடக்கப்படுகிறது. நீங்கள் அதைப் பார்க்கிறீர்கள். மலைப்பாம்பு உங்களை உற்றுப் பார்க்கிறது. உங்கள் கண்களில் பயம் தெரிகிறதா என்று அளக்கிறது.

நீதிமன்றத்தை அர்த்தமிழக்கச் செய்து, உங்களுக்கு நீதி, நியாயம் எதுவும் கிடைக்காது, நான் வைத்ததுதான் சட்டம் என்கிறது. மலைப்பாம்பு உங்களை உற்றுப் பார்க்கிறது. உங்கள் கண்களில் பயம் தெரிகிறதா என்று அளக்கிறது.

பசுவைக் காப்பதாக, லவ் ஜிகாத் என்பதாக சிறுபான்மையினர் மீது நர வேட்டைகள் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. அதைக் காட்சிப்படுத்தி கொக்கரிக்கிறார்கள். மலைப்பாம்பு உங்களை உற்றுப் பார்க்கிறது. உங்கள் கண்களில் பயம் தெரிகிறதா என்று அளக்கிறது.

மாநில உரிமைகள் மறுக்கப்படுகின்றன. கல்வி, வேலைவாய்ப்புகள் எல்லாம் உங்களுக்கு இல்லை என சொல்கிறது. எதிர்காலம் கேள்விக்குறியதகிறது. மலைப்பாம்பு உங்களை உற்றுப் பார்க்கிறது. உங்கள் கண்களில் பயம் தெரிகிறதா என்று அளக்கிறது.

இதோ, புலம் பெயந்த தொழிலாளர்களின் அவலம் காணச் சகிக்காததாய் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பார்க்கும் காட்சிகள் பெரும் வதையாய் இருக்கிறது. ஈரக்குலை அறுந்து போகிறது. அரசு எதாவது இரக்கத்தோடு அவர்களுக்குச் செய்யாதாவென மருகி நிற்கிறோம். நான் இரக்கமே இல்லாதவன் என்று அவர்கள் செத்து வீழ்வதைப் பார்த்தும் அசையாமல் இருக்கிறது. மலைப்பாம்பு உங்களை உற்றுப் பார்க்கிறது. உங்கள் கண்களில் பயம் தெரிகிறதா என்று அளக்கிறது.

நீங்கள் பயந்து போவீர்களென்றால், செயலிழந்து போவீர்கள். உங்களை விழுங்குவதற்கு அதுவே ஏதுவான தருணம். அதற்காக காத்து இருக்கிறது மலைப் பாம்பு.

பயமின்றி, ஆதரவான சக்திகளோடு எழுந்து நிற்க முடியும். இடதுசாரிகளும், அம்பேத்கரிஸ்டுகளும், பெரியாரிஸ்டுகளும், காந்தியமும் சேர்ந்து எழுந்து நின்றால் மக்களோடு யானையாக உயர்ந்து நிற்கும். மலைப்பாம்பு உங்கள் காலடியில் கிடக்கும்.

மலைப்பாம்புகளால் ஒரு போதும் யானையை விழுங்க முடியாது. அதன் வயிறு கிழிந்து போகும்.

அப்படி முசோலினியும், ஹிட்லரும் வரலாற்றில் கிழிந்துதான் தரையில் கிடந்தார்கள்.