தமிழகத்தின் தலைசிறந்த பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளரான பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் இன்று திருநெல்வேலியில் காலமானார்.
முனைவர் தொ.பரமசிவன் இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லுரி, மதுரை தியாகராசர் கல்லூரி, மற்றும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் ஆகியவற்றி பேராசிரியராக பணிபுரிந்தார். இவர் அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோவில், தெய்வம் என்பேதார், வழித்டங்கள், பரண், சமயம், சமயங்கயின் அரசியல், வீடு பூக்கள், இந்து தேசியம், நாள் மலர்கள், உரைக்கல், மானுட வாசிப்பு, பாளையங்கோட்டை, மஞ்சள் மகிமை, மரபும் புதுமையும், இதுவே சனநாயகம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.
பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் முன்நிறுத்தின. அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.