tamilnadu

img

இந்நாள் டிச. 18 இதற்கு முன்னால்

1916 - வரலாற்றின் மிகநீண்ட யுத்தங்களில் ஒன்றும், மிகஅதிக மனித பாதிப்புகளை ஏற்படுத்தியவைகளில் ஒன்றுமான வெர்டன் சமர், ஜெர்மானியப் படைகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது. உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்கள், காயமடைந்தவர்கள் என்று ஏழிலிருந்து 10 லட்சம்பேர் வரை பாதிக்கப்பட்டதாகக் கணிக்கப்பட்டுள்ள இச்சண்டையில் சுமார் 4 லட்சம் பேர் உயிரிழந்தனர். முதல் உலகப்போரின்போது, சிறப்பான பாதுகாப்பு அரணாக விளங்கிய மியூஸ் குன்றுகளைக் கைப்பற்றி, அதன்மூலம் வெர்டன் கோட்டைகளின்மீது தாக்குதல் நடத்துவதற்காக இந்தப் படையெடுப்பை ஜெர்மனி மேற்கொண்டது. முந்தைய ஆண்டில் நடைபெற்ற சேம்பேனின் இரண்டாவது சண்டையில், ஏராளமான குண்டுகளை (28,42,400 களபீரங்கிக் குண்டுகள், 5,77,700 பெரிய குண்டுகள்!) அவசரப்பட்டு சுட்டுவிட்ட பிரெஞ்சுப் படைகளிடம் குண்டுகள் தீர்ந்தபின், ஜெர்மனி எளிதாக வென்றிருந்தது.

அதைப்போலவே, பிரெஞ்சுப் படைகளைத் தாக்குவதுபோல போக்குக்காட்டி, அவர்களைப் பதில் தாக்குதலில் ஈடுபடச்செய்து, அவர்களின் குண்டுகள் கையிருப்பு தீர்ந்தவுடன் எளிதில் வென்றுவிடும் திட்டத்துடன் ஜெர்மனி தாக்குதலைத் தொடங்கினாலும், மோசமான காலநிலையால், திட்டமிட்டபடி முன்னேற முடியாமற்போயிற்று! ஆனாலும் முன்னேறிய ஜெர்மன் படைகள், ஃப்ளூரி-டெவண்ட்-டவுவாமாண்ட் என்ற கிராமத்தையும் (கம்யூன்), சோவில்லி கோட்டையையும் கைப்பற்றின. இக்கிராமத்தை பிரெஞ்சுப் படைகள் மீண்டும் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஜூன் 23இலிருந்து ஆகஸ்ட் 17வரை 16 முறை இருதரப்பும் மாறிமாறிக் கைப்பற்றின.

இத்தாக்குதல்களால் இந்த கம்யூனின் மக்கள் முழுமையாக வெளியேறியதுடன், பிணங்கள், வெடிகுண்டுகள், நச்சு வாயுக்கள் என்று மாசுபட்டுப்போன இதன் மண்ணும் விவசாயம் செய்யமுடியாத அளவுக்குப் பாழ்பட்டுப்போய், மீண்டும் யாரும் இங்கு குடியேறவேயில்லை. இன்று அந்த இடத்தில் எங்கு வீடுகள், தெருக்கள் இருந்தன என்ற அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ‘பிரான்சுக்காக உயிர்நீத்த கிராமம்’ என்று இதனை பிரான்ஸ் கவுரவித்துள்ளது! 1914-15இல் ரஷ்யப் படைகளுக்கு ஏற்படுத்தியதுபோன்ற அதிக உயரிழப்பை ஏற்படுத்தி, பிரான்சை நிலைகுலையச் செய்வது என்று திட்டமிட்டிருந்த ஜெர்மனி, தொடர்ச்சியான மழை, பிரெஞ்சுப் படைகளுக்கு அமைந்திருந்த பாதுகாப்பான நில அமைப்பு ஆகியவற்றால் தோல்வியுற்றது. 

- அறிவுக்கடல்