நாகப்பட்டினம், ஏப்.9-
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், நாகை நாடாளுமன்றத் தொகுதிக்குப் போட்டியிடும்இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்வெற்றி வேட்பாளர் எம்.செல்வராஜை ஆதரித்து, செவ்வாய்க் கிழமை அன்று, உதயநிதி ஸ்டாலின்,நாகப்பட்டினம் அபிராமி திருவாசல் முன்பு பரப்புரையாற்றினார். கலைஞர் பிறந்த ஊரான நாகை மாவட்டம், திருக்குவளையில், செவ்வாய்க்கிழமை காலை, உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையைத் துவக்கினார். அதன்பின்னர்,அன்று காலை 10 மணிக்கு நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பரப்புரையாற்றினார்.கூட்டத்திற்கு, திமுக நாகைத் தெற்கு மாவட்டச் செயலாளர் என்.கெளதமன் தலைமை வகித்தார். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் திமுக அமைச்சருமான உ,மதிவாணன் முன்னிலை வகித் தார். தி.மு.க.நாகை நகரச் செயலாளர் போலிஸ் பன்னீர் வரவேற்புரையாற்றினார்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், உதயநிதி ஸ்டாலினைப் பாராட்டிச் சால்வை அணிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அ.சீனிவாசன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் நாகை நாடாளுமன்றத் தொகுதியின் சி.பி.ஐ வேட்பாளருமாகிய எம்.செல்வராஜ் பேசும்போது, “காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்திடவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்திடவும், விவசாயிகளின் பயிர்க்கடன், மாணவர்களின் கல்விக்கடன் போன்றவற்றைத் தள்ளுபடி செய்திடவும், நாகையில் துறைமுகம், மீனவர் களுக்குத் தனி அமைச்சகம், அமைத்திடவும், வேதாரணியம் உப்பு ஏற்றுமதியை சர்வதேச அளவிற்குக் கொண்டு செல்லவும், புதிய ரயில்பாதைகள் அமையவும் மற்றும் மக்களின் பல்வேறு நலன்களுக்காகவும் பாடுபடுவேன்” என்று உறுதியளித்தார்.தி.மு.க. நாகை ஒன்றியச் செயலாளர் க.ராஜேந்திரன் நன்றி கூறினார். ஏராளமானோர் கூடிய இந்தத்தேர்தல் பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் ஏ.எஸ்.மோகன், ஜி.கே.கனகராஜ், இல.மேகநாதன், ப.சுபாஷ் சந்திரபோஸ், வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், கல்லார் ரபீக்,எம்.ஓ.எம்.செய்யது அலி, ஏ.தாமஸ்ஆல்வா எடிசன், கதிர் நிலவன், அரா.பேரறிவாளன், கோ.பாண்டியன், வி.ராமலிங்கம், இரா.முருகையன், பால்பாண்டியன், எம்.பெரியசாமி, மு.க.ஜீவா, மா.மீ.புகழேந்தி உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.