நாகப்பட்டினம், ஏப்.25-வங்கக் கடலுக்குத் தென்கிழக்கின் அருகே, தற்போதுநிலவிவரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, புயலாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, கடலில் சீற்றம்அதிகமாகக் காணப்படும். எனவே, மீனவர்கள் கடலுக்குச்செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இயற்கைச் சீற்றத்தின் போது, பொதுமக்களைப் பாதுகாப்பாகத் தங்க வைத்திட ஏதுவாகப் பல்நோக்குப் பேரிடர்மையங்களும், கால்நடைகளைப் பாதுகாத்திட முகாம் களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜே.சி.பி. வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு இயற்கைச் சீற்றங்களையும் சமாளித்திட நாகை மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.இயற்கைச் சீற்றங்களின் போது, பொதுமக்கள் அவசர-அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வருவதையும், வாகனங்களில் வெளியே செல்வதையும் தவிர்த்திடவும், தங்களது கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்திடவும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.மேலும், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இந்தக் கட்டுப்பாட்டு அறையுடன் 1077 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண் மூலம்தொடர்புகொண்டு, பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.