tamilnadu

img

கடமலைக்குண்டு அருகே துப்பாக்கியை பிடித்தவாறு வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு.... பழமையான வரலாற்றுச்சான்றுகளை அரசு பாதுகாக்க கோரிக்கை....

கடமலைக்குண்டு:
கடமலைக்குண்டு அருகே துப்பாக்கியை பிடித்தவாறு வீரனின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த நடுகல் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியரும் தொல்லியல் ஆர்வலருமான  மூ.செல்வம் கடமலைக்குண்டு அரசுப் பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு பின்பகுதியில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நடுகல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.இந்த நடுகல் குறித்து அவர் கூறுகையில்,  கடமலைக்குண்டுவிற்கு கிழக்குப் புறமாக நந்தவனம் செல்லும்பகுதியில் விவசாய நிலத்துக்குள் கேட்பாரற்று சிதைந்த நிலையில் இக் கல்வெட்டு காணப்படுகிறது. இப்பகுதியில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்வேறு  நடுகற்களும் சதி கற்களும்  கண்டு பிடிக்கப்பட்டிருந்தாலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நினைவுக் கல்லானது தனித்துவம் வாய்ந்தது. வலது பக்கம் இருக்கும் வீரனின் தலைப்பகுதி உடைந்து போயிருக்கிறது. அவனின் இடது கையில் துப்பாக்கி உள்ளது. இடதுபக்கம் இருக்கும் வீரனின் முகம் சிதைந்து காணப்படுகிறது. அவ்வீரன் இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி இரண்டு கால்களுக்கு இடையில் இரும்பு குண்டு தொங்கவிடப்பட்டு, இரண்டு கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டது போல் காணப்படுகிறது. இரண்டு வீரர்களின் அணிகலன்களும் ஆடைகளிலும் வீரக்கழல் அணிந்திருப்பதிலும் ஒரே மாதிரியான வேலைப்பாடுகள் காணப்படுவதால், இருவருமே குறுநில மன்னர்களாகவோ அல்லது இப்பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவோ இருந்திருக்கக்கூடும்.

ஏதோ ஒரு காரணம் கருதி இவ்விருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் வெற்றி பெற்றவர் தோல்வியுற்ற வரை விலங்கிட்டு, பணிந்து வணங்கி செய்த காட்சி நினைவுக் கல்லாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நினைவுக் கல்லில் உள்ள வீரர்களின் தலையில் உள்ள மகிழம் கொண்டை, நீண்ட காது அமைப்பு, துப்பாக்கி மற்றும் உடல் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு பார்க்கும் போது 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்க மன்னர்களின் ஆட்சி காலத்தில் நடப்பட்ட நினைவுகல்லாக இருக்கும் எனகருதப்படுகிறது. மேலும், இது போன்ற வரலாற்றுப் பழமை வாய்ந்த சான்றுகள், பல இப்பகுதியில் நிரம்பிக் கிடக்கிறது. அவை அழிந்து போவதற்கு முன்அரசு கவனம் செலுத்தி பாதுகாத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

;