tamilnadu

ஐந்தாண்டு சாதனையை கூற முடியாத பாஜக மீண்டும் வெற்று வாக்குறுதிகளோடு வருகிறது: யெச்சூரி சாடல்


மாநிலங்களவையில் நல்ல முறையில் பணியாற்றியவர் கனிமொழி. எனவே, அவருக்கு வாக்களித்து நாடாளு மன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மதச்சார்பற்ற அரசை இந்தியாவில் உருவாக்க வேண்டும்.தற்போது நடைபெறும் இந்த தேர்தல் சாதாரணத் தேர்தல் அல்ல. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் தேர்தல். நமது எதிர்காலத்தை உருவாக்கக் கூடிய தேர்தல். மதச்சார்பின்மையை பாதுகாக்கவும், ஜனநாயக உரிமைகளை நீடித்து நிலைக்கச் செய்யவும், இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்ந்திடவும் இது முக்கியமான தேர்தலாகும். எனவே பாஜகவை தோற்கடிக்க வேண்டும். இந்தியாவில் புதிய அரசை உருவாக்க வேண்டும். திங்கள்கிழமை பாஜகவின் தேர்தல் அறிக்கையை நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 5 ஆண்டுகளில் தாங்கள் செய்ததைகூறவில்லை. மாறாக புதிய புதிய வாக்குறுதிகள் மட்டுமே அதில் உள்ளன. ஆண்டுக்கு 2 கோடிப்பேருக்கு வேலை என கடந்த தேர்தலின்போதுவாக்குறுதி அளித்தார். ஆனால், 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி, பண மதிப்பு நீக்கம் போன்ற முடிவுகளால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர்.மோடி அரசு கோவில்பட்டியின் முக்கியத் தொழிலான தீப்பெட்டிக்கும், கடலை மிட்டாய் தயாரிப்பு தொழிலுக்கும் ஜி.எஸ்.டி வரி விதித்தது. இதனால் லட்ச கணக்கான மக்கள் வேலையை இழந்துள்ளனர். கடந்த தேர்தலின் போது விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஒன்னரை மடங்கு ஆதாரவிலை கிடைக்கச் செய்வேன் எனவும், விவசாயக் கடன் ரத்து எனவும் கூறினார்கள்.


அதைச் செய்யாமல், தற்போது 2 மடங்கு ஆதார விலை எனதேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். விவசாயி களின் கடனை ஒரு பைசா கூட ரத்து செய்யாமல், 3.5 லட்சம் கோடி ரூபாய் பெரு முதலாளி களுக்கு தள்ளுபடி செய்துள்ளனர். இரு விதமான இந்தியாவை 5 ஆண்டுகளில் மோடி உருவாக்கியுள்ளார். 73 சதவீத செல்வங்கள் ஒரு சதவீதமே உள்ள பெரும் பணக்காரர்களிடம் குவிந்துள்ளது. மறுபுறத்தில் ஏழைகள் மேலும், பரம ஏழைகளாக மாறி யுள்ளனர். ரூ. 13 லட்சம் கோடிப் பணம் பெரும் பணக்காரர்களுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வங்கிகளில் பணத்தை வாங்கிக் கொண்டு வெளி நாடுகளுக்கு ஓடி விட்டனர்.ரபேல் ஊழல் மிகப் பெரிய ஊழலாக உள்ளது. 16 ஆயிரம் கோடி ரூபாய் டென்டர் அம்பானியின் கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மோடியின் நண்பரான அதானிக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள சிபிஐ, சி.ஏ.ஜி, ரிசர்வ் வங்கி ஆகியவை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளம் பாஜக ஆட்சியில் தகர்க்கப்பட்டுள்ளது. மக்கள் பணத்தை 5 ஆண்டுகள் கொள்ளை யடித்து விட்டு தற்போது மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என கேட்கின்றனர். தமிழகத்தில் அதிமுக எடப்பாடி, ஓ.பி.எஸ் இவர்களோடு கூட்டுச் சேர்ந்து வருகின்றனர். தமிழகத்தில் 18 சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற வேண்டும். மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். மத்தியில் மதவெறி பிடித்த பாஜக அரசு தூக்கி எறியப்பட வேண்டும். யெச்சூரியின் ஆங்கில உரையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது தமிழாக்கம் செய்தார்.

;