திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் முழுவதும் நிவர் மற்றும் புரெவி புயலால் சேதமடைந்த பயிர்களையும் முகாம்களில் தங்கியுள்ள மக்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் முழுவதும் மொத்தம் 10 ஆயிரத்து 500 ஹெக்டர் நிலங்கள் இதுவரை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மேலும் ஊராட்சி ஒன்றியத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கிராம அலுவலர்களைக் கொண்டு சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு வருவதாகவும் முதல்வர் கூறினார். கொக்காலடி ஊராட்சியில் சுமார் 589 ஹெக்டர் ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 481 ஹெக்டர் நிலமும், பாமணி ஊராட்சியில் உள்ள மொத்தம் 385 ஹெக்டர் நிலத்தில் 317 ஹெக்டர் நிலமும் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல கச்சனம் பகுதியில் சேதமடைந்த பயிர்களையும் முதல்வர் பார்வையிட்டார்.
அதன்பிறகு வீரன்வயல், அரசரடி தெரு மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் திருத்துறைப்பூண்டி திருவாரூர் சாலையில் சாய்ராம் பள்ளியில் முகாமில் தங்கி உள்ளவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். முதல்வருடன் உணவு மற்றும் நுகர்வோர் வழங்கல் அமைச்சர் ஆர்.காமராஜ் உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, வேளாண் அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசு தேவன், நிலவள வங்கி தலைவர் சண்முகசுந்தரம். கூட்டுறவு வங்கி தலைவர் சிங்காரவேலு உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.இறுதியாக தென்னவராய நல்லூரில் விவசாய பிரதிநிதிகளிடம் குறைகளை கேட்டறிந்து அதனை சரி செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆபத்தை தருமே என்று நிருபர்கள் கேட்டதற்கு உரிய விலையை விவசாயிகளுக்கு நாங்கள் தருகிறோம். அதேபோலதான் டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகளிடம் உரிய விலை கொடுத்து அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.