திருவனந்தபுரம்:
கேரள வளர்ச்சிப் பணிகளை நிறுத்த முயற்சிக்கும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குச்சாவடி அளவில் திரண்ட 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களையும், பொதுமக்களையும் எல்டிஎப் கன்வீனர் ஏ. விஜயராகவன் பாராட்டினார்.
செவ்வாயன்று நடந்த கேரளம் முழுவதும் பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் நடந்த எதிர்ப்பு இயக்கத்தை ஏ.விஜயராகவன் துவக்கி வைத்து மேலும் பேசியதாவது: தங்கக் கடத்தல் குறித்துவிசாரிக்காமல் மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களை தகர்க்கும் மத்திய அமைப்புகளின் நடவடிக்கையை எந்த காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்என்று கேரள மக்கள் எச்சரித்துள்ளனர். கிப்பியை தகர்க்கும் நடவடிக்கைக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பையும் இப்போராட்டம் வெளிப்படுத்தியது. இந்த போராட்டத்தில் மக்கள் பங்கேற்பது மத்திய ஏஜென்சிகளின் தவறுகளை ஆதரிக்கும் யுடிஎப்-பாஜக நிலைப்பாட்டிற்கு எதிரானது என்பதைக் காட்டுகிறது. ஏகபோகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்க முயற்சிப்பதிலிருந்தும், அரசியல்எஜமானர்களை மகிழ்விப்பதிலிருந்தும் மத்திய ஏஜென்சிகள் விலகிநிற்க வேண்டும் என்றும் ஏ.விஜயராகவன் கேட்டுக்கொண்டார்.