மின்வாரிய அதிகாரிகளிடம் காவல்துறை விசாரணை
திருவண்ணாமலை, ஜன.5- திருவண்ணாமலை மாவட்ட, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நாகராஜ், மற்றும் விழுப்புரம் கோட்ட முதன்மை பொறியாளர் சிவராஜ், இவர்கள் இருவரும் துணை மின்நிலைய அலுவலங்களுக்கு சென்று, ஊழியர்களிடம் பணம் வசூலிப்பதாக, லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சனிக்கிழமையன்று நாகராஜ், சிவராஜ், ராஜந்தாங்கல் உதவி செயற்பொறியாளர் பத்மாவதி, திருவண்ணாமலை உதவி செயற்பொறியாளர் ராமு ஆகியோர் ஜீப்பில் வேட்ட வலம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்களிடமிருந்து, ரூ. 75 ஆயிரம், 8 கிராம் தங்கக் காசு இருந்ததை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை, சாரத்தூர் துணை மின்நிலைய அலுவலகத்தில் வைத்து, பணம் மற்றும் தங்கக்காசு எப்படி வந்தது? எங்கு சென்று வந்தனர்? என்பது குறித்து விசாரித்தனர். மேலும் இவர்களுடன் யார் யார் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்லூர் ராஜூ தொகுதியில் அதிமுக தோல்வி
மதுரை, ஜன.5- மதுரை மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்த நலத்திட்டப்பணிகள் எதுவும் கிராமப்புறத்தில் எடுபடவில்லை. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் தொகுதியான மதுரை மேற்குத் தொகுதியில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் வருகிறது. இதற்குள் இரண்டுஒன்றியக் கவுன்சில்கள் வருகின்றன. இந்த இரண்டிலும் (வார்டு- 1-தி.மு.க க.பஞ்சராஜ், வார்டு- 2-திமுக- ரா.உஷாராணி) திமுகவே வெற்றி பெற்றுள்ளது. அதிமுக தோல்வியைத் தழுவியுள்ளது. மக்கள் எதிர்பார்த்த நலத்திட்டப் பணிகள் முறையாக சென்று சேராததே காரணம் என்கின்றனர் பகுதிமக்கள்.
தொழில் வர்த்தகப் பொருட்காட்சி
மதுரை, ஜன.5- தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் கடந்த டிச -21 தொடங்கியது. தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற்ற பொருட்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகளில் தொழில் சார்ந்தும், தொழில் வளர்ச்சி சார்ந்தும், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறு வர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவு விற்பனை கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பொருட்காட்சி யை சுமார் ஒரு லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். சனிக்கிழமையன்று நிறைவு விழா, பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் டி,ஜி.வினய், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
விஷம் கலந்த தண்ணீரை குடித்த 11 ஆடுகள் பலி
சாத்தூர், ஜன.5- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நீராவிபட்டி கிராமத்தைச்சேர்ந்த ராமமூர்த்தி மகன் சிவராமன் (31). விவசாயியான இவர் 50-க்கும்மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல,மேய்ச்சலுக்குச் சென்று விட்டு ஆடுகள் வீட்டிற்கு வந்தன. பின்பு, வீட்டின் அருகே தொட்டியில் வைக்கபட்டிருந்த தண்ணீரைக் குடித்துள்ளன. சிறிது நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றா 11 ஆடுகள் சுருண்டு விழுந்து உயிரிழந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த சிவராமன் சிறுகுளம் கால்நடைமருத்துவருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த இருகால்நடை மருத்துவர்கள் ஆடுகளை உடற்கூராய்வு செய்தனர். இதில் ஆடுகள் குடித்த நீரில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து,இருக்கன்குடி காவல்நிலையத்தில் சிவராமன் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீரில் விஷம் கலந்த நபரை தேடி வருகின்றனர்.