tamilnadu

img

பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனே கொண்டுவருக.... தமிழக அரசுக்கு டி.யூ.ஜே. வலியுறுத்தல்...

செய்யாறு:
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் தமிழகத்தில் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க பத்திரிகையாளர் பாதுகாப்புச்சட்டத்தை தமிழக அரசு உடனடியாக கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ்(டி.யூ.ஜே.) சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ்(டி.யூ.ஜே.) சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம்   திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில்  மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்றது.  மாநில துணைத் தலைவர்கள்பி.சண்முகவேல், வி.மோகன், பொதுச்செயலாளர்கள் போளூர்  ஏ.சுரேஷ், கே.முத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்தியாளர் மோசஸ் படுகொலைக்கு கண்டனம்
கஞ்சா விற்பனையை செய்தியாக்கி யதால்  சென்னையில் கடந்த நவம்பர் 8 அன்று சமூகவிரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட  தமிழன்டிவி நிருபர் மோசஸ் குடும்பத்திற்கு நியாயம் வழங்க வேண்டும். மோசஸ் படுகொலை நடந்து ஒரு மாத காலத்திற்கும் மேலான நிலையில் இது வரை தமிழக அரசிடமிருந்து  ஒரு இரங்கல் செய்தி கூட வராதது வருத்தம் அளிக்கிறது. மோசஸ் படுகொலை விஷயத்தில் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது  குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக 25 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் .அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்.  பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.  மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய தொழிலாளர் சட்டத்தால் பத்திரிகையாளர்கள் பெரு மளவில் பாதிக்கப்படுவதால் அந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். தில்லியில் தற்போது போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்து 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்.

கொரோனா காலத்தில் பத்திரிகையாளர்களுக்கு நிவாரண உதவியாக ரூ.3000 வழங்கப்பட்டது. அனைத்து பத்திரிகையாளர்களும் பயன்பெறும் வகையில் நிவாரண உதவியை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி, அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.  பல்வேறு இடங்களில் போலி நிருபர்கள் அதிகமானதால் அவர்களை களையெடுக்கும் விதமாக கண்டெடுக் கப்பட்டு அகற்றப்பட வேண்டும்.தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக பயணிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தூசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.மோகன் சங்கத்திற்கு வளர்ச்சி நிதியை வழங்கினார். சங்கத்தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன்  10 மற்றும்12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் கள் பெற்று தேர்ச்சியடைந்த மாண வர்களுக்கு ஊக்கத்தொகையும் சான்றிதழையும் வழங்கினார்.